நீதிமொழிகள் 12 : 1 (ERVTA)
ஒருவன் ஞானமுள்ளவனாக விரும்பினால், அவனது தவறினை மற்றவர்கள் சுட்டிக் காட்டும்போது கோபம் கொள்ளாமல் இருக்க வேண்டும். அதை வெறுக்கிறவனோ முட்டாளாகக் கருதப்படுகிறான்.
நீதிமொழிகள் 12 : 2 (ERVTA)
நல்லவர்களில் கர்த்தர் மகிழ்ச்சி அடைகிறார். ஆனால் தீயவன் தண்டனை பெறும்படி கர்த்தர் தீர்ப்பளிக்கிறார்.
நீதிமொழிகள் 12 : 3 (ERVTA)
தீயவர்கள் என்றென்றும் பாதுகாப்பாக இருக்க முடியாது. ஆனால் நல்லவர்களோ பாதுகாப்பாக இருக்கின்றனர்.
நீதிமொழிகள் 12 : 4 (ERVTA)
நல்ல மனைவியை அடைந்த கணவன் மகிழ்ச்சியாகவும் பெருமை உடையவனாகவும் இருக்கிறான். ஆனால் ஒருபெண் தன் கணவனை அவமானப்பட வைத்தால், அவள் அவனது உடம்பை உருக்கும் நோய் போன்று கருதப்படுகிறாள்.
நீதிமொழிகள் 12 : 5 (ERVTA)
நல்லவர்கள் தாம் செய்யத் திட்டமிட்டவற்றைச் சரியாகவும் நேர்மையாகவும் செய்துவிடுகின்றனர். ஆனால் தீயவர்கள் சொல்லுகின்றவற்றை மட்டும் நம்பாதே.
நீதிமொழிகள் 12 : 6 (ERVTA)
தீயவர்கள் தம் வார்த்தைகளால் பிறரைப் புண்படுத்துவார்கள். ஆனால் நல்லவர்களின் வார்த்தைகள் மற்றவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும்.
நீதிமொழிகள் 12 : 7 (ERVTA)
தீயவர்கள் அழிக்கப்படுவார்கள்; அவர்களில் எதுவும் மிச்சம் இராது. ஆனால் நல்லவர்களை ஜனங்கள் அவர்கள் காலத்திற்குப் பின்பும் நீண்ட காலம் நினைவுகூருவார்கள்.
நீதிமொழிகள் 12 : 8 (ERVTA)
ஞானமுள்ளவர்களை ஜனங்கள் போற்றுவார்கள். ஆனால் அறிவில்லாதவர்களை ஜனங்கள் மதிப்பதில்லை.
நீதிமொழிகள் 12 : 9 (ERVTA)
ஒருவன் ஆகாரமில்லாதவனாக இருந்தும் தன்னை முக்கிய மனிதனாகக் காட்டுவதைக் காட்டிலும் கடினமாக உழைக்கும் சாதாரண மனிதனாக இருப்பதே நல்லதாகும்.
நீதிமொழிகள் 12 : 10 (ERVTA)
நல்லவன் தன் மிருகங்களைக் கவனித்துக்கொள்கிறான். கெட்டவனோ கருணை உள்ளவனாக இருக்கமாட்டான்.
நீதிமொழிகள் 12 : 11 (ERVTA)
தன் நிலத்தில் வேலைசெய்கிற விவசாயி தனக்குரிய உணவைப் பெறுகிறான். ஆனால் பயனற்ற சிந்தனைகளில் நேரத்தை வீணாக்குகிறவன் முட்டாளாகிறான்.
நீதிமொழிகள் 12 : 12 (ERVTA)
தீயவர்கள் எப்போதும் தவறானவற்றைச் செய்யவே விரும்புவார்கள். ஆனால் நல்லவர்கள் வேர்களைப்போன்று ஆழமாகப் போகும் ஆற்றல் கொண்டுள்ளனர்.
நீதிமொழிகள் 12 : 13 (ERVTA)
தீயவன் முட்டாள்தனமானவற்றைச் சொல்லி அவ்வார்த்தைகளாலேயே அகப்பட்டுக்கொள்கிறான். ஆனால் நல்லவன் இத்தகைய துன்பங்களிலிருந்து தப்பித்துக்கொள்கிறான்.
நீதிமொழிகள் 12 : 14 (ERVTA)
ஒருவன் தான் சொல்கிற நல்லவற்றுக்காகப் பரிசுபெறுகிறான். இதுபோலவே அவன் செய்கிற வேலையும் பலனளிக்கிறது.
நீதிமொழிகள் 12 : 15 (ERVTA)
அறிவில்லாதவன் தனது வழியையே சிறந்த வழி என்று நினைத்துக்கொள்கிறான். ஆனால் ஞானமுள்ளவனோ மற்றவர்கள் சொல்லுவதைக் கவனிக்கிறான்.
நீதிமொழிகள் 12 : 16 (ERVTA)
அறிவில்லாதவன் சுலபமாகக் கவலையடைகிறான். ஆனால் அறிவுள்ளவனோ மற்றவர்கள் தவறாகப் பேசுவதை மன்னித்துவிடுகிறான்.
நீதிமொழிகள் 12 : 17 (ERVTA)
ஒருவன் உண்மையைப் பேசுபவனாக இருந்தால் அவன் சொல்பவற்றில் நேர்மை இருக்கும். ஆனால் ஒருவன் பொய் சொன்னால் அது அவனைத் துன்பத்திற்கே அழைத்துச் செல்லும்.
நீதிமொழிகள் 12 : 18 (ERVTA)
ஒருவன் சிந்திக்காமல் பேசினால் அவ்வார்த்தைகள் வாளைப்போன்று மற்றவர்களை துன்புறுத்தும். ஆனால் ஞானமுள்ளவனோ தான் சொல்பவற்றில் எச்சரிக்கையாக இருப்பான். அவனது வார்த்தைகள் புண்ணைக் குணப்படுத்தும்.
நீதிமொழிகள் 12 : 19 (ERVTA)
ஒருவன் பொய் சொன்னால் அவ்வார்த்தைகள் வீணாகிப்போகும். ஆனால் உண்மை என்றென்றைக்கும் வாழும்.
நீதிமொழிகள் 12 : 20 (ERVTA)
தீயவர்கள் எப்பொழுதும் துன்பம் செய்யவே எண்ணுவார்கள். ஆனால் சமாதானத்திற்காக வேலைசெய்பவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
நீதிமொழிகள் 12 : 21 (ERVTA)
நல்லவர்கள் கர்த்தரால் பாதுகாப்பாக வைக்கப்படுவார்கள். ஆனால் தீயவர்களுக்கோ நிறைய துன்பங்கள் இருக்கும்.
நீதிமொழிகள் 12 : 22 (ERVTA)
கர்த்தர் பொய் சொல்லுபவர்களை வெறுக்கிறார். ஆனால் கர்த்தர் உண்மை சொல்பவர்களில் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
நீதிமொழிகள் 12 : 23 (ERVTA)
அறிவுள்ளவன் தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் சொல்லமாட்டான். ஆனால் அறிவில்லாதவனோ எல்லாவற்றையும் சொல்லி தன்னை முட்டாளாகக் காட்டிக் கொள்வான்.
நீதிமொழிகள் 12 : 24 (ERVTA)
கடினமாக உழைக்கிறவர்கள் மற்ற உழைப்பாளிகளுக்கு பொறுப்பாளி ஆவார்கள். சோம் பேறியோ அடிமையைப்போன்று மற்றவர்களின் கீழ் வேலைசெய்வான்.
நீதிமொழிகள் 12 : 25 (ERVTA)
கவலையானது ஒருவனின் மகிழ்ச்சியை எடுத்துவிடும். ஆனால் இரக்கமான வார்த்தைகள் ஒருவனை மகிழ்ச்சிப்படுத்தும்.
நீதிமொழிகள் 12 : 26 (ERVTA)
தான் தேர்ந்தெடுக்கிற நண்பர்களைப் பற்றி நல்லவன் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பான். ஆனால் தீயவர்களோ கெட்ட நண்பர்களையே தேர்ந்தெடுப்பார்கள்.
நீதிமொழிகள் 12 : 27 (ERVTA)
சோம்பேறி தான் விரும்பியவற்றை செய்து முடிப்பதில்லை. ஆனால் கடினமாக உழைக்கிறவனிடம் செல்வம் வந்து சேரும்.
நீதிமொழிகள் 12 : 28 (ERVTA)
நீ சரியாக வாழ்ந்தால் உண்மையான வாழ்க்கையை அடைவாய். அதுவே என்றென்றும் வாழ்வதற்குரிய வாழ்வாகும்.
❮
❯