நீதிமொழிகள் 11 : 1 (ERVTA)
பொருள்களைச் சரியாக எடை போடாத தராசுகளைச் சிலர் பயன்படுத்துகின்றனர். அவர்கள் அவற்றை ஜனங்களை ஏமாற்றவே பயன்படுத்துகின்றனர். கர்த்தர் அப்பொய் அளவுகளை வெறுக்கிறார். கர்த்தருக்கு விருப்பமானது சரியான அளவுகளே.
நீதிமொழிகள் 11 : 2 (ERVTA)
வீண்பெருமையும் அகந்தையும் உடையவர்கள் முக்கியமற்றுப் போகிறார்கள். ஆனால் அடக்கமாக இருக்கிற ஜனங்கள் ஞானம் பெறுகிறார்கள்.
நீதிமொழிகள் 11 : 3 (ERVTA)
நல்ல குணமும் உத்தம குணமும் கொண்டவர்கள் உத்தமத்தால் வழிநடத்தப்படுவர். ஆனால் கெட்டவர்களோ மற்றவர்களை ஏமாற்றுவதால் தங்களை அழித்துக்கொள்கிறார்கள்.
நீதிமொழிகள் 11 : 4 (ERVTA)
தேவனுடைய நியாயத்தீர்ப்பு நாளில் பணம் பயனற்றதாகப் போகும். ஆனால் நன்மை ஜனங்களை மரணத்திலிருந்து காப்பாற்றும்.
நீதிமொழிகள் 11 : 5 (ERVTA)
நல்லவன் உத்தமனாகவும் இருந்தால் அவனது வாழ்க்கை எளிதானதாக இருக்கும். ஆனால் தீயவனோ தான் செய்கிற கெட்ட செயல்களால் அழிக்கப்படுகிறான்.
நீதிமொழிகள் 11 : 6 (ERVTA)
நன்மை உத்தமனைக் காப்பாற்றுகிறது. ஆனால் தீயவர்களோ தாம் விரும்புகிற கெட்ட செயல்களால் சிக்கிக்கொள்கின்றனர்.
நீதிமொழிகள் 11 : 7 (ERVTA)
தீயவன் மரித்துப்போன பிறகு அவனுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. அவன் நம்பியவை எல்லாம் போகும்; ஒன்றுமில்லாமல் பயனற்றுப்போகும்.
நீதிமொழிகள் 11 : 8 (ERVTA)
துன்பங்களில் இருந்து நல்லவன் தப்பித்துக்கொள்கிறான். அத்துன்பமானது தீயவர்களுக்குப் போய்ச சேரும்.
நீதிமொழிகள் 11 : 9 (ERVTA)
தீயவன், தன் சொற்களால் பிறரைப் புண்படுத்துவான். ஆனால் நல்லவர்களோ தங்களுடைய ஞானத்தால் காப்பாற்றப்படுவார்கள்.
நீதிமொழிகள் 11 : 10 (ERVTA)
நல்லவர்கள் வெற்றிபெறும்போது, நகரம் முழுவதும் மகிழும். கெட்டவர்கள் அழியும் போது ஜனங்கள் மகிழ்ச்சியோடு சத்தமிடுவார்கள்.
நீதிமொழிகள் 11 : 11 (ERVTA)
உத்தமமானவர்கள் இருந்து ஆசீர்வதிப்பதால் நகரம் சிறப்புடையதாகிறது. தீயவர்களின் பேச்சால் நகரம் அழிந்துபோகிறது.
நீதிமொழிகள் 11 : 12 (ERVTA)
ஒருவன் நல்லுணர்வு இல்லாதவனாக இருந்தால் பக்கத்தில் உள்ளவர்களைப்பற்றி அவதூறாகப் பேசுகிறான். ஆனால் ஞானம் உள்ளவனோ எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்கிறான்.
நீதிமொழிகள் 11 : 13 (ERVTA)
அடுத்தவனது இரகசியங்களைச் சொல்லும் யாரையும் நம்ப இயலாது. ஆனால் நம்பத் தகுந்த ஒருவன் பொய்ச் செய்திகளைப் பரப்பமாட்டான்.
நீதிமொழிகள் 11 : 14 (ERVTA)
பலவீனமான தலைவர்களை உடைய நாடு வீழ்ந்துபோகும். ஆனால் பல நல்ல ஆலோசனை உடையவர்கள் நாட்டைக் காப்பாற்றுகிறார்கள்.
நீதிமொழிகள் 11 : 15 (ERVTA)
நீ அடுத்தவனது கடனைத் தீர்ப்பதாக வாக்களித்திருந்தால் அதனால் வருத்தப்படுவாய். நீ இத்தகைய செயல்களை மறுத்துவிட்டால் பாதுகாப்பாக இருப்பாய்.
நீதிமொழிகள் 11 : 16 (ERVTA)
கருணையும் ஒழுக்கமும் உள்ள பெண் மதிக்கப்படுவாள். வல்லமையுள்ளவர்களோ செல்வத்தை மட்டுமே பெறுவார்கள்.
நீதிமொழிகள் 11 : 17 (ERVTA)
இரக்கமுள்ள மனிதன் நன்மையை அடைகிறான். ஆனால் மோசமான மனிதனோ தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான்.
நீதிமொழிகள் 11 : 18 (ERVTA)
தீயவனோ ஜனங்களை ஏமாற்றி பொருளைக் கவர்ந்துகொள்கிறான். ஆனால் நல்லவனாகவும் நேர்மையானவனாகவும் இருக்கிறவன் உண்மையான பரிசினைப் பெறுகிறான்.
நீதிமொழிகள் 11 : 19 (ERVTA)
உண்மையில் நன்மையானது வாழ்வைக் கொண்டுவரும். ஆனால் தீயவர்களோ தீமையைப் பின்தொடர்ந்து மரணத்தை அடைகின்றனர்.
நீதிமொழிகள் 11 : 20 (ERVTA)
தீமை செய்ய விரும்புகிறவர்களைக் கர்த்தர் வெறுக்கிறார். ஆனால் நன்மை செய்ய முயல்பவர்களில் மகிழ்ச்சி அடைகிறார்.
நீதிமொழிகள் 11 : 21 (ERVTA)
தீயவர்கள் தண்டனை பெறுவது உண்மை. நல்லவர்களோ விடுவிக்கப்படுகிறார்கள்.
நீதிமொழிகள் 11 : 22 (ERVTA)
அழகான பெண் முட்டாளாக இருப்பது, பன்றியின் மூக்கில் உள்ள பொன் மூக்குத்திக்குச் சமம்.
நீதிமொழிகள் 11 : 23 (ERVTA)
நல்லவர்கள் தாம் விரும்புவதைப் பெறுவார்களானால் அதனால் மிகுந்த நன்மை விளையும். தீயவர்கள் தாம் விரும்புவதைப் பெறுவார்களானால் அதனால் தொல்லைகளே விளையும்.
நீதிமொழிகள் 11 : 24 (ERVTA)
ஒருவன் தாராளமாகக் கொடுத்தால் அவன் மேலும் மேலும் பெறுவான். ஆனால் ஒருவன் கொடுக்க மறுத்தால் பிறகு அவன் ஏழ்மையாவான்.
நீதிமொழிகள் 11 : 25 (ERVTA)
ஒருவன் தாராளமாகக் கொடுத்தால் அவன் லாபம் அடைகிறான். நீ அடுத்தவர்களுக்கு உதவினால் நீயும் நன்மை பெறுவாய்.
நீதிமொழிகள் 11 : 26 (ERVTA)
தானியங்களைக் கட்டிவைத்து விற்க மறுப்பவர்கள்மீது ஜனங்கள் கோபம் அடைகிறார்கள். ஆனால் தானியங்களை மற்றவர்களுக்கு விற்பவர்கள்மேல் ஜனங்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.
நீதிமொழிகள் 11 : 27 (ERVTA)
நன்மை செய்ய முயலுகிற ஒருவனை ஜனங்கள் மதிக்கின்றனர். ஆனால் தீமை செய்கிறவனோ துன்பத்தைத் தவிர வேறு எதையும் பெறுவதில்லை.
நீதிமொழிகள் 11 : 28 (ERVTA)
தன் செல்வத்தை மட்டும் நம்புகிறவன் காய்ந்த இலையைப் போன்று உதிர்ந்து விழுகிறான். ஆனால் நல்லவனோ பச்சையான இலையைப்போன்று வளர்கிறான்.
நீதிமொழிகள் 11 : 29 (ERVTA)
ஒருவன் தன் குடும்பத்தின் துன்பத்துக்குக் காரணமாக இருந்தால், அவன் எதையும் பெறமாட்டான். அதோடு அறிவில்லாதவன் முடிவில் ஞான முள்ளவனுக்குச் சேவை செய்ய கட்டாயப்படுத்தப்படுவான்.
நீதிமொழிகள் 11 : 30 (ERVTA)
நல்லவன் செய்கிற செயல்கள் எல்லாம் வாழ்வுதரும் மரம் போன்றவை. ஞானமுள்ளவன் ஜனங்களுக்குப் புதிய வாழ்க்கையைக் கொடுக்கிறான்.
நீதிமொழிகள் 11 : 31 (ERVTA)
பூமியில் நல்லவர்கள் தமக்குரிய வெகுமதியைப் பெறும்போது, தீயவர்களும் தங்களுக்குப் பொருத்தமானதைப் பெறுவார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31