எண்ணாகமம் 30 : 1 (ERVTA)
விசேஷ பொருத்தனைகள் இஸ்ரவேல் கோத்திரங்களில் உள்ள தலைவர்களைப் பார்த்து மோசே பேசினான். கர்த்தர் தனக்குச் சொன்ன இக்கட்டளைகளை எல்லாம் மோசே அவர்களிடம் சொன்னான். அவன்,
எண்ணாகமம் 30 : 2 (ERVTA)
“ஒருவன் கர்த்தருக்கு ஏதாவது விசேஷ பொருத்தனை செய்ய விரும்பினால், அல்லது கர்த்தருக்கு விசேஷமானவற்றைக் கொடுக்க விரும்பினால், அவன் அவ்வாறே செய்யட்டும். ஆனால் அவன் வாக்களித்தபடிக் கொடுக்க வேண்டும்!
எண்ணாகமம் 30 : 3 (ERVTA)
“ஓர் இளம் பெண் தன் தகப்பன் வீட்டில் இருக்கும்போது சிலவற்றை கொடுப்பதாக அவள் கர்த்தரிடம் ஒரு விசேஷ பொருத்தனை பண்ணியிருக்கலாம்.
எண்ணாகமம் 30 : 4 (ERVTA)
இதைப்பற்றி அவளது தந்தை தெரிந்துகொண்டு அந்த வாக்கை நிறைவேற்ற ஒப்புண்டால் பிறகு அவள் தன் பொருத்தனையை நிறைவேற்ற வேண்டும்.
எண்ணாகமம் 30 : 5 (ERVTA)
ஆனால் அவளது வேண்டுதலை அவளது தந்தை அறிந்து அதைத் தடுத்தால், பிறகு அவள் தன் வாக்கில் இருந்து விடுதலை பெறுகிறாள். அவள் தனது பொருத்தனையை நிறைவேற்றத் தேவையில்லை. அவளது தந்தை அவளைத் தடுத்துவிட்டால் அவளை கர்த்தர் மன்னித்துவிடுவார்.
எண்ணாகமம் 30 : 6 (ERVTA)
“ஒரு பெண் தான் கர்த்தருக்கு சிலவற்றைக் கொடுப்பதாக விசேஷ வாக்கை கர்த்தரிடம் செய்த பிறகு திருமணம் ஆகியிருக்கலாம்.
எண்ணாகமம் 30 : 7 (ERVTA)
அவளது கணவன் அந்த வேண்டுதலை அறிந்து அதற்கு ஒப்புண்டுவிட்டால் அவள் அதை நிறைவேற்ற வேண்டும்.
எண்ணாகமம் 30 : 8 (ERVTA)
ஆனால் அவளது கணவன் அவளது வேண்டுதலை அறிந்து மறுத்துவிட்டால் பிறகு அவள் தன் வாக்கை நிறைவேற்ற வேண்டாம். அவளது கணவன் அந்த வாக்கை முறித்து அதனை நிறைவேற்ற முடியாதபடி செய்துவிட்டதால் கர்த்தர் அவளை மன்னித்துவிடுவார்.
எண்ணாகமம் 30 : 9 (ERVTA)
“ஒரு விதவை அல்லது விவாகரத்து செய்துகொண்ட பெண் சிறப்பான பொருத்தனை செய்திருக்கலாம். அப்போது அவள் தனது பொருத்தனையை நிறைவேற்ற வேண்டும்.
எண்ணாகமம் 30 : 10 (ERVTA)
“ஒரு திருமணமானப் பெண் கர்த்தருக்கு ஒரு பொருத்தனை செய்திருக்கலாம்.
எண்ணாகமம் 30 : 11 (ERVTA)
இதைப்பற்றி அவளது கணவன் அறிந்து அதை அவன் அனுமதித்துவிட்டால் பிறகு அவள் தன் பொருத்தனையை நிறைவேற்ற வேண்டும். அவள் வாக்கின்படி அனைத்தையும் கொடுக்க வேண்டும்.
எண்ணாகமம் 30 : 12 (ERVTA)
ஆனால் அவளது கணவன் அதனை அறிந்து மறுத்துவிட்டால், அவள் தன் வாக்கை நிறைவேற்ற தேவையில்லை. அவளது வாக்கை அவளது கணவன் முறித்துவிட்டதால் அது பொருட்படுத்தக் கூடியதாக இல்லை. எனவே கர்த்தர் மன்னித்துவிடுவார்.
எண்ணாகமம் 30 : 13 (ERVTA)
ஒரு திருமணமான பெண் கர்த்தருக்குச் சிலவற்றைத் தருவதாக வாக்களித்திருக்கலாம்; அல்லது அவள் தன் ஆத்துமாவைத் தாழ்மைப்படுத்தும்படி ஆணையிட்டிருக்கலாம் அல்லது வேறு ஏதாவது விசேஷ வாக்குறுதிகளைச் செய்திருக்கலாம். அவற்றை அவளது கணவன் தடுக்கவோ அல்லது காப்பாற்றவோ செய்யலாம்.
எண்ணாகமம் 30 : 14 (ERVTA)
எவ்வாறு ஒரு கணவன் தன் மனைவியின் வாக்கை நிறைவேற்ற உதவ முடியும்? அவன் அதைப் பற்றி அறிந்ததை ஏற்றுக்கொண்டால் போதும். அவன் மறுக்காத பட்சத்தில் அவள் அதனை முழுமையாகச் செய்து முடித்துவிட வேண்டும்.
எண்ணாகமம் 30 : 15 (ERVTA)
ஆனால் அவளது கணவன் அவளது வாக்கை அறிந்தும் தடுத்துவிட்டால், வாக்குறுதியை உடைத்த பொறுப்பு அவனைச் சார்ந்ததாகும்” என்றான்.
எண்ணாகமம் 30 : 16 (ERVTA)
இந்தக் கட்டளைகளையே மோசேயிடம் கர்த்தர் கூறினார். இவை, ஒருவனுக்கும் அவன் மனைவிக்கும் உரிய கட்டளைகளாகும். இவை, ஒரு தந்தைக்கும் தந்தை வீட்டில் வாழும் இளம் பெண்ணுக்கும் உரிய கட்டளைகளாகும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16