எண்ணாகமம் 14 : 1 (ERVTA)
ஜனங்கள் மீண்டும் முறையிடுதல் அன்று இரவு, முகாம்களில் உள்ள அனைவரும் கூக்கூரலிட்டுப் புலம்பினார்கள்.
எண்ணாகமம் 14 : 2 (ERVTA)
இஸ்ரவேல் ஜனங்கள் மோசேக்கும், ஆரோனுக்கும் எதிராக முறையிட்டனர். அவர்கள் அனைவரும் கூடி மோசேயிடமும், ஆரோனிடமும், “நாம் எகிப்து நாட்டிலோ பலைவனங்களிலோ மரித்துப்போயிருக்கலாம், இவ்வாறு புதிய நாட்டில் கொல்லப்படுவதைவிட அது மேலானது.
எண்ணாகமம் 14 : 3 (ERVTA)
நாம் இப்புதிய நாட்டில் போரில் கொல்லப்படுவதற்காகத்தான், கர்த்தர் இங்கே அழைத்து வந்தாரா? எதிரிகள் நம்மைக் கொன்றுவிட்டு, நமது மனைவியரையும், பிள்ளைகளையும் அபகரித்துக்கொள்வார்கள். இதைவிட நாம் எகிப்துக்குத் திரும்பிப் போவது நல்லது” என்றனர்.
எண்ணாகமம் 14 : 4 (ERVTA)
பிறகு ஜனங்கள் ஒருவரோடு ஒருவர், “நாம் வேறு தலைவரைத் தேர்ந்தெடுத்து, எகிப்துக்குத் திரும்பிப் போவோம்” எனப் பேசிக்கொண்டனர்.
எண்ணாகமம் 14 : 5 (ERVTA)
அங்கே கூடியிருந்த அனைத்து இஸ்ரவேல் ஜனங்களின் முன்பும், மோசேயும், ஆரோனும் தரையில் பணிந்து வணங்கினார்கள்.
எண்ணாகமம் 14 : 6 (ERVTA)
யோசுவாவும் காலேப்பும் மிகவும் மனமுறிவடைந்தனர். (யோசுவா நூனின் மகன். காலேப் எப்புன்னேயின் மகன். இருவரும் கானான் நாட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்தவர்கள்.)
எண்ணாகமம் 14 : 7 (ERVTA)
அங்கே கூடியிருந்த இஸ்ரவேல் ஜனங்களிடம் அந்த இருவரும், “நாங்கள் பார்த்த அந்த நாடு நன்றாக இருக்கிறது.
எண்ணாகமம் 14 : 8 (ERVTA)
அது நல்ல பொருட்கள் பலவற்றால் நிறைந்த நாடு. கர்த்தர் நம்மீது விருப்பம் உடையவராக இருந்தால், அவர் அந்த நாட்டுக்குள் நம்மை வழி நடத்திச் செல்லுவார். அந்த நாட்டை கர்த்தர் நமக்குத் தருவார்.
எண்ணாகமம் 14 : 9 (ERVTA)
எனவே கர்த்தருக்கு எதிராக திரும்பாதீர்கள். அந்த நாட்டின் ஜனங்களுக்குப் பயப்படாதீர்கள்! நாம் அவர்களைத் தோற்கடிக்க முடியும். அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை, எதுவும் அவர்களைக் காப்பாற்றாது. ஆனால், நம்மோடு கர்த்தர் இருக்கிறார். எனவே, பயப்படவேண்டாம்” என்றனர்.
எண்ணாகமம் 14 : 10 (ERVTA)
அனைத்து ஜனங்களும் யோசுவாவையும் கலேபையும் கல்லெறிந்து கொன்றுவிட வேண்டும் என்று பேச ஆரம்பித்தார்கள். ஆனால் கர்த்தரின் மகிமை, ஆசரிப்புக் கூடாரத்தின் மேலே அவர்கள் அனைவரும் காணும்படி தோன்றியது.
எண்ணாகமம் 14 : 11 (ERVTA)
கர்த்தர் மோசேயுடன் பேசினார். அவர், “எவ்வளவு காலத்திற்கு இந்த ஜனங்கள் எனக்கெதிராக இருப்பார்கள்? என் மீது நம்பிக்கையில்லை என்பதைக் காட்டுகிறார்கள், என் வல்லமையின் மீது நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறார்கள். நான் எத்தனையோ அடையாளங்களை அவர்களுக்கு காட்டியிருக்கிறேன். எனினும் என்னை அவர்கள் நம்ப மறுக்கிறார்கள். நான் அவர்களுக்கிடையில் பலப் பெருங்காரியங்களைச் செய்திருக்கிறேன்.
எண்ணாகமம் 14 : 12 (ERVTA)
அவர்கள் அனைவரையும் பெருநோயால் கொன்றுவிடுவேன். அவர்களை அழிப்பேன். நான் இவர்களை விட உங்கள் ஜனத்தை பெரியதாகவும் பலமிக்கதாகவும் பண்ணுவேன்” என்றார்.
எண்ணாகமம் 14 : 13 (ERVTA)
பிறகு மோசே கர்த்தரிடம், “நீர் இதனைச் செய்துவிட்டால், எகிப்தியர்கள் இதனைப் பற்றி கேள்விப்படுவார்கள். நீர் உமது வல்லமையைப் பயன்படுத்தி உமது ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே மீட்டுவந்தீர், என்பதை அவர்கள் அறிவார்கள்.
எண்ணாகமம் 14 : 14 (ERVTA)
எகிப்திய ஜனங்கள் கானான் ஜனங்களிடம் இதைப்பற்றி கூறினார்கள். நீரே கர்த்தர் என்பதை ஏற்கெனவே அவர்கள் அறிந்திருக்கின்றனர். நீர் உமது ஜனங்களோடு இருப்பதையும், ஜனங்கள் உம்மைப் பார்த்தனர் என்பதையும் அறிந்திருக்கின்றனர். அவர்களுக்குத் தனிச்சிறப்புடைய மேகத்தைப் பற்றி தெரியும். பகல் பொழுதில் நீர் மேகத்தின் மூலம் வழிநடத்திச் சென்றதையும், இரவில் அம்மேகம் நெருப்பாகி ஜனங்களுக்கு வெளிச்சம் தந்ததையும் அவர்கள் அறிவார்கள்.
எண்ணாகமம் 14 : 15 (ERVTA)
எனவே இப்போது நீர் இந்த ஜனங்களை அழிக்கக்கூடாது. நீர் இவர்களை அழித்தால், உமது வல்லமையைப்பற்றி அறிந்த அனைத்து ஜனங்களும்,
எண்ணாகமம் 14 : 16 (ERVTA)
‘கர்த்தர் தான் வாக்களித்தபடி தன் ஜனங்களுக்கு நாட்டை அளிக்க முடியவில்லை. எனவே, அவர் அவர்களை பாலைவனத்தில் கொன்றுவிட்டார் என்று பேசுவார்கள்’
எண்ணாகமம் 14 : 17 (ERVTA)
“இப்போதும், ஆண்டவரே, உமது பலத்தைக் காட்டும்! உம்மைப்பற்றி நீரே சொல்லியிருக்கிறபடி செய்யும்!
எண்ணாகமம் 14 : 18 (ERVTA)
‘நீர் கர்த்தர் கோபப்படுகிறதற்கு தாமதம் பண்ணுகிறார். கர்த்தர் பேரன்பு கொண்டவர். சட்டங்களை மீறி குற்றம் செய்கின்றவர்களை கர்த்தர் மன்னிப்பார். ஆனால் அக்கிரமக்காரர்களையும், அவர்கள் பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும், அவர்களின் பிள்ளைகளையும் தண்டிப்பார்’ என்று உம்மைப்பற்றி சொல்லியிருக்கிறபடியால்,
எண்ணாகமம் 14 : 19 (ERVTA)
இப்போது உமது பேரன்பை இந்த ஜனங்களிடம் காண்பித்து, இவர்களின் பாவத்தை மன்னித்தருளும், எகிப்தை விட்டுப் புறப்பட்ட நாள்முதல் நீர் மன்னித்து வருவது போலவே, இப்போதும் மன்னித்துவிடும்” என்றான்.
எண்ணாகமம் 14 : 20 (ERVTA)
இதற்கு கர்த்தர், “ஆம்! நீ கேட்டுண்டபடியே இந்த ஜனங்களை மன்னித்துவிடுகிறேன்.
எண்ணாகமம் 14 : 21 (ERVTA)
ஆனால் உனக்கு ஒரு உண்மையைக் கூறுகிறேன். நான் இந்த பூமியில் இருப்பது எவ்வளவு உண்மையோ, அதுபோலவே எனது மகிமையும் பூமியில் நிறைந்திருக்கும் என்பதும் உண்மையாகும்.
எண்ணாகமம் 14 : 22 (ERVTA)
எகிப்திலிருந்து என்னால் அழைத்து வரப்பட்டவர்கள் எவரும் கானான் நாட்டைக் காணமாட்டார்கள். நான் எகிப்தில் செய்த அற்புதங்களையும் நான் பாலைவனத்தில் செய்த பெருஞ்செயல்களையும், அவர்கள் கண்டிருக்கிறார்கள். ஆனாலும், அவர்கள் எனக்குக் கீழ்ப்படியவில்லை. என்னைப் பத்துமுறை சோதித்திருக்கிறார்கள்.
எண்ணாகமம் 14 : 23 (ERVTA)
நான் அவர்களின் முற்பிதாக்களிடம் அவர்களுக்கு ஒரு நாட்டைத் தருவதாக வாக்களித்தேன். ஆனால் எனக்கு எதிராக உள்ள எவரும் அந்த நாட்டிற்குள் நுழைய முடியாது.
எண்ணாகமம் 14 : 24 (ERVTA)
ஆனால் எனது ஊழியனான காலேப் வேறுபட்டவன். என்னை அவன் முழுமையாகப் பின்பற்றினான். எனவே அவனை ஏற்கெனவே அவன் பார்வையிட்ட நாட்டிற்குள் அழைத்துச் செல்வேன். அவனது ஜனங்கள் அந்நாட்டைப் பெற்றுக்கொள்வார்கள்.
எண்ணாகமம் 14 : 25 (ERVTA)
அமலேக்கியரும், கானானியரும் இந்தப் பள்ளத்தாக்கில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். எனவே, நாளை இந்த இடத்தை விட்டுப் புறப்பட்டு செங்கடலுக்குச் செல்லும் சாலையின் மேலுள்ள பாலைவனத்துக்குச் செல்லுங்கள்” என்றார்.
எண்ணாகமம் 14 : 26 (ERVTA)
கர்த்தர் ஜனங்களைத் தண்டித்தல் கர்த்தர் மோசேயிடமும், ஆரோனிடமும்,
எண்ணாகமம் 14 : 27 (ERVTA)
“இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்தத் தீய ஜனங்கள் எனக்கு எதிராக முறையிடுவார்கள்? நான் இவர்களின் முறையீடுகளையும், புலம்பல்களையும் பலமுறை கேட்டிருக்கிறேன்.
எண்ணாகமம் 14 : 28 (ERVTA)
நீங்கள் முறையிட்டபடியே கர்த்தர் நிச்சயம் உங்களுக்குச் செய்வார் என்று அவர்களிடம் சொல். இதுதான் உங்களுக்கு நடை பெறப்போகிறது:
எண்ணாகமம் 14 : 29 (ERVTA)
நீங்கள் பாலைவனத்தில் மரித்துப்போவீர்கள். இருபதும் அதற்கு மேலும் வயதுள்ள, எண்ணி கணக்கிடப்பட்ட ஜனங்கள் மரிப்பார்கள். கர்த்தராகிய எனக்கு எதிராக முறையிட்டீர்கள்.
எண்ணாகமம் 14 : 30 (ERVTA)
எனவே, நான் வாக்களித்திருந்த நாட்டிற்குள் எப்புன்னேயின் மகனான காலேபும், நூனின் மகனான யோசுவாவும் தவிர வேறு எவரும் நுழைய முடியாது.
எண்ணாகமம் 14 : 31 (ERVTA)
அந்நாட்டிலுள்ள உங்களது பகைவர்கள், உங்கள் பிள்ளைகளை அபகரித்துக்கொள்வார்கள் என்று அஞ்சி முறையிட்டீர்கள். ஆனால், நான் உங்களுக்குக் கூறுகிறேன், அந்தப் பிள்ளைகள் அந்நாட்டிற்குள் செல்வார்கள். நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்த மகிழ்ச்சியை அவர்கள் அனுபவிப்பார்கள்.
எண்ணாகமம் 14 : 32 (ERVTA)
உங்களைப் பொறுத்தவரையில், நீங்கள் இந்தப் பாலைவனத்திலேயே மரித்துப் போவீர்கள்.
எண்ணாகமம் 14 : 33 (ERVTA)
“உங்கள் பிள்ளைகள் இந்தப் பாலைவனத்தில் மேய்ப்பர்களாக 40 ஆண்டுகள் அலைந்து திரிவார்கள், நீங்கள் எனக்கு உண்மையுள்ளவர்களாக இல்லாததால், அவர்கள் துன்பப்படுவார்கள். நீங்கள் அனைவரும் இப்பாலைவனத்தில் மரித்து விழும்வரை அவர்கள் துன்பப்படுவார்கள்.
எண்ணாகமம் 14 : 34 (ERVTA)
40 ஆண்டுகள் உங்கள் பாவங்களுக்காக நீங்கள் துன்பப்படுவீர்கள். (நீங்கள் கானான் நாட்டைச் சுற்றி பார்த்தது 40 நாட்கள். ஒரு நாளுக்கு ஒரு ஆண்டு வீதம் 40 ஆண்டுகள்.) உங்களுக்கு எதிராக என்னை நிறுத்தி வைப்பது எவ்வளவு பயங்கரமானது என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
எண்ணாகமம் 14 : 35 (ERVTA)
“நானே கர்த்தர். நான் சொல்லியிருக்கிறேன், தீய ஜனங்கள் அனைவருக்கும் நான் சொன்னபடியே செய்வேன் என்று உறுதியாய்க் கூறுகிறேன். இந்த ஜனங்கள் அனைவரும் எனக்கு எதிராக ஒன்று சேர்ந்தார்கள். எனவே அனைவரும் இப்பாலைவனத்திலேயே மரித்துப்போவார்கள்” என்றார்.
எண்ணாகமம் 14 : 36 (ERVTA)
புதிய நாட்டைப் பார்வையிட்டு வருமாறு மோசே அனுப்பி வைத்தவர்களில் சிலர் இஸ்ரவேல் ஜனங்களிடம் வதந்தியைப் பரப்பினார்கள். அந்நாட்டிற்குள் நுழைகிற அளவிற்குத் தமக்குப் பலமில்லை என்றனர்.
எண்ணாகமம் 14 : 37 (ERVTA)
இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் அவநம்பிக்கையைப் பரப்பியதற்கு இவர்களே பொறுப்பாகும். எனவே கர்த்தர் அந்த ஜனங்களை கொல்லும்படி நோயைக் கொண்டு வந்தார்.
எண்ணாகமம் 14 : 38 (ERVTA)
ஆனால் நூனின் மகனான யோசுவாவும், எப்புன்னேயின் மகனான காலேபும் கானான் நாட்டை பார்வையிட்டவர்களில் இந்த இருவரையும் கர்த்தர் காப்பாற்றினார். மற்றவர்களைச் சாகடித்த அந்நோய் இவர்களுக்கு வரவில்லை.
எண்ணாகமம் 14 : 39 (ERVTA)
கானான் நாட்டிற்குள் ஜனங்கள் நுழைய முயலுதல் இஸ்ரவேல் ஜனங்களிடம் மோசே இவை அனைத்தையும் சொன்னான். அவர்கள் மிகவும் துக்கப்பட்டு மனங்கசந்து அழுதனர்.
எண்ணாகமம் 14 : 40 (ERVTA)
மறுநாள் அதிகாலையில் அவர்கள் உயரமான மலைநாட்டிற்குள் பிரவேசிக்கப் புறப்பட்டனர். அவர்கள்: “நாங்கள் பாவம் செய்துவிட்டோம். நாங்கள் கர்த்தரை நம்பாமல் போனதற்காக வருத்தப்படுகிறோம். கர்த்தர் வாக்களித்த நாட்டிற்குள் நாங்கள் போவோம்” என்றனர்.
எண்ணாகமம் 14 : 41 (ERVTA)
ஆனால் மோசே, “கர்த்தரின் கட்ட ளைக்கு ஏன் கீழ்ப்படிய மறுக்கிறீர்கள். நீங்கள் வெற்றியடையப் போவதில்லை.
எண்ணாகமம் 14 : 42 (ERVTA)
அந்த நாட்டிற்குள் போகாதீர்கள். கர்த்தர் இப்போது உங்களோடு இல்லை. எனவே, உங்கள் பகைவர்கள் உங்களை எளிதில் வென்றுவிடுவார்கள்.
எண்ணாகமம் 14 : 43 (ERVTA)
அமலேக்கியரும், கானானியரும் உங்களுக்கு முன்னே அங்கே இருக்கிறார்கள். அவர்கள் உங்களுக்கு எதிராகச் சண்டையிடுவார்கள். நீங்கள் கர்த்தரிடமிருந்து விலகிவிட்டீர்கள். எனவே நீங்கள் அவர்களோடு சண்டையிடும்போது கர்த்தர் உங்களோடு இருக்கமாட்டார். எனவே நீங்கள் அனைவரும் போரில் கொல்லப்படுவீர்கள்” என்றான்.
எண்ணாகமம் 14 : 44 (ERVTA)
ஆனால் மோசேயின் வார்த்தைகளை ஜனங்கள் நம்பவில்லை. அவர்கள் மலை நாட்டை நோக்கிச் சென்றனர். ஆனால் மோசேயும், கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியும் அவர்களோடு போகவில்லை.
எண்ணாகமம் 14 : 45 (ERVTA)
மலைநாட்டில் வாழ்ந்த அமலேக்கியரும், கானானியரும் கீழே இறங்கி வந்து அவர்களைத் தாக்கி, அவர்களை எளிதில் தோற்கடித்தனர். அவர்களை ஓர்மா வரை துரத்தி அடித்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45