லூக்கா 10 : 1 (ERVTA)
எழுபத்திரண்டு பேரை அனுப்புதல் இதன் பின்பு இயேசு கூடுதலாக எழுபத்திரண்டு* லூக்கா சுவிசேஷத்தின் சில கிரேக்கப் பிரதிகளில் எழுபது என்று எழுதப்பட்டிருக்கிறது. மனிதர்களைத் தேர்ந்தெடுத்தார். இரண்டு இரண்டு பேராக இயேசு அவர்களை அனுப்பினார். தான் போக விரும்பிய ஒவ்வொரு நகருக்கும், இடத்துக்கும் தனக்கு முன்பாக அவர்களை அனுப்பினார்.
லூக்கா 10 : 2 (ERVTA)
இயேசு அவர்களுக்கு, “அறுவடைக்கு மிக அதிகமான மனிதர்கள் இருக்கிறார்கள். அறுவடை செய்வதற்கு உதவியாக மிகக் குறைவான வேலையாட்களே உள்ளனர். தேவன் அறுவடைக்கு (மக்களுக்கு) எஜமானர். அறுவடை செய்வதற்கு ஏற்ற அதிகமான வேலைக்காரர்களை அனுப்பும்படியாக தேவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.
லூக்கா 10 : 3 (ERVTA)
“நீங்கள் இப்போது போகலாம். ஆனால் கேளுங்கள். நான் உங்களை அனுப்புகிறேன். நீங்கள் ஓநாய்களுக்கு நடுவில் சிக்கிய ஆடுகளைப்போல் காணப்படுவீர்கள்.
லூக்கா 10 : 4 (ERVTA)
பணப் பையையோ, பையையோ, காலணிகளையோ எடுத்துச்செல்லாதீர்கள். வழியிலே மக்களோடு பேசுவதற்காக நிற்காதீர்கள்.
லூக்கா 10 : 5 (ERVTA)
ஒரு வீட்டினுள் நுழையும் முன்பே, ‘இவ்வீட்டில் அமைதி நிலவட்டும்’ என்று வாழ்த்துங்கள்.
லூக்கா 10 : 6 (ERVTA)
அமைதிக்குத் தகுதியுள்ள மனிதன் அங்கு வாழ்ந்தால், உங்கள் சமாதானத்தின் ஆசி அவனோடு தங்கட்டும். அமைதிக்குத் தகுதியற்ற மனிதன் அங்கிருந்தால், உங்கள் சமாதானத்தின் ஆசி உங்களுக்கே திரும்பட்டும்.
லூக்கா 10 : 7 (ERVTA)
அமைதியான வீட்டில் தங்குங்கள். அவ்வீட்டிலுள்ள மக்கள் தரும் உணவை உண்டு, பானத்தைப் பருகுங்கள். ஒரு வேலைக்காரனுக்குச் சம்பளம் தரப்படவேண்டும். இன்னொரு வீட்டில் தங்கும்பொருட்டு அந்த வீட்டைவிட்டுச் செல்லாதீர்கள்.
லூக்கா 10 : 8 (ERVTA)
“ஒரு நகரத்தில் நுழையும்போது அங்குள்ள மக்கள் உங்களை வரவேற்றால் அவர்கள் உங்கள் முன் வைக்கும் உணவை சாப்பிடுங்கள்.
லூக்கா 10 : 9 (ERVTA)
அங்கு வாழும் நோயுற்ற மக்களைக் குணப்படுத்துங்கள். பின்னர், ‘தேவனின் இராஜ்யம் உங்களிடம் வந்துகொண்டிருக்கிறது’ எனக் கூறுங்கள்.
லூக்கா 10 : 10 (ERVTA)
“ஒரு நகரத்துக்குப் போகும்போது அங்குள்ள மக்கள் உங்களை வரவேற்காவிட்டால், அந்நகரத்தில் உள்ள தெருக்களுக்குச் சென்று,
லூக்கா 10 : 11 (ERVTA)
‘எங்கள் கால்களில் பட்டிருக்கும் உங்கள் நகரத்தின் தூசியைக் கூட உங்களுக்கு எதிராகத் தட்டி விடுகிறோம். ஆனால் தேவனின் இராஜ்யம் சீக்கிரமாக வந்துகொண்டிருக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்’ என்று கூறுங்கள்.
லூக்கா 10 : 12 (ERVTA)
நியாயம் தீர்க்கிற நாளில் அந்நகரத்து மக்களுக்குக் கிடைக்கும் தீர்ப்பு, சோதோம் நாட்டு மக்களுக்குக் கிடைத்ததைவிடக் கொடுமையானதாக இருக்கும் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.
லூக்கா 10 : 13 (ERVTA)
விசுவாசமற்றோருக்கு எச்சரிப்பு
(மத். 11:20-24) “கோராசீனே! உனக்குக் கேடு வரும். பெத்சாயிதாவே! உனக்குக் கேடு உண்டாகும். உங்களுக்கு அநேக அற்புகங்களைச் செய்தேன். தீருவிலும், சீதோனிலும் அதே அற்புதங்களைச் செய்திருந்தால் பல ஆண்டுகளுக்கு முன்னரே அப்பட்டணங்களின் மக்கள் தங்கள் வாழ்வை மாற்றி, பாவம் செய்வதை விட்டு விட்டிருப்பார்கள். துயரத்தின் ஆடையை உடுத்திக்கொண்டு, சாம்பலைத் தங்கள் மேல் தூவிக்கொண்டு, தங்கள் பாவங்களுக்காக வருந்துவதைக் காண்பித்து இருப்பார்கள்.
லூக்கா 10 : 14 (ERVTA)
நியாயம் தீர்க்கிற நாளில் தீரு, சீதோன் ஆகிய இடங்களைக் காட்டிலும் உங்கள் நிலை மோசமாக இருக்கும்.
லூக்கா 10 : 15 (ERVTA)
கப்பர்நகூம் நகரமே, நீ பரலோகத்திற்கு நேராக எழுப்பப்படுவாயா? இல்லை, மரணத்துக்குரிய இடத்திற்கு நேராக நீ வீசி எறியப்படுவாயாக.
லூக்கா 10 : 16 (ERVTA)
“ஒருவன் நீங்கள் கூறுவதைக் கேட்கும்போது அவன் உண்மையாகவே எனக்குச் செவிசாய்க்கிறான். ஆனால் ஒருவன் என்னை ஏற்றுக்கொள்ள மறுத்தால் அவன் என்னை அனுப்பியவராகிய தேவனை ஏற்க மறுக்கிறான்” என்றார்.
லூக்கா 10 : 17 (ERVTA)
சாத்தான் விழுதல் எழுபத்திரண்டு மனிதர்களும் தங்கள் பயணத்தை முடித்துத் திரும்பியபோது மிக்க மகிழ்வோடு காணப்பட்டார்கள். அவர்கள், “ஆண்டவரே, உங்கள் பெயரைக் கூறியபோது பிசாசுகள்கூட எங்களுக்குக் கீழ்ப்படிந்தன” என்றார்கள்.
லூக்கா 10 : 18 (ERVTA)
அம்மனிதர்களை நோக்கி இயேசு, “வானிலிருந்து மின்னலைப்போன்று சாத்தான் வீழ்வதை நான் கண்டேன்.
லூக்கா 10 : 19 (ERVTA)
கேளுங்கள். பாம்புகளையும், தேள்களையும் மிதிக்கிற வல்லமையை நான் உங்களுக்குக் கொடுத்தேன். பகைவனின் (பிசாசின்) வல்லமையைக் காட்டிலும் மிகுந்த வல்லமை உங்களுக்குக் கொடுத்தேன். உங்களை எதுவும் காயப்படுத்துவதில்லை.
லூக்கா 10 : 20 (ERVTA)
ஆம், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகின்றன. மகிழ்ச்சியாக இருங்கள். ஏன், உங்களுக்கு இந்த வல்லமை இருப்பதால் அல்ல, உங்கள் பெயர்கள் பரலோகத்தில் எழுதப்பட்டிருப்பதால் சந்தோஷப்படுங்கள்” என்று கூறினார்.
லூக்கா 10 : 21 (ERVTA)
இயேசுவின் பிரார்த்தனை
(மத். 11:25-27; 13:16-17) அப்போது பரிசுத்த ஆவியானவர் இயேசுவை மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கினார். இயேசு: “பிதாவே, வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! உங்களுக்கு நன்றி. ஞானிகளிடமிருந்தும், அறிவுமிக்கவர்களிடமிருந்தும் இக்காரியங்களை நீங்கள் மறைத்ததால் உங்களை வாழ்த்துகிறேன். ஆனால் சிறு குழந்தைகளைப்போன்ற மக்களுக்கு இச்செயல்களை நீர் காட்டியுள்ளீர். ஆம், பிதாவே, நீர் உண்மையாகவே இதைச் செய்ய விரும்பியதால் இதனைச் செய்துள்ளீர்கள்.
லூக்கா 10 : 22 (ERVTA)
“எனக்கு எல்லாவற்றையும் என் பிதா தந்துள்ளார். மகன் யார் என்பது பிதாவைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. பிதா யார் என்பதை மகன் மட்டுமே அறிவார். மகன் அதனைத் தெரிவிக்கும்பொருட்டு தேர்ந்தெடுக்கும் மக்கள் மட்டுமே தந்தையைப்பற்றி அறிந்துகொள்வார்கள்” என்றார்.
லூக்கா 10 : 23 (ERVTA)
பின் இயேசு சீஷர்களை நோக்கித் திரும்பினார். அவர்கள் அவரோடு தனித்திருந்தார்கள். இயேசு, “நீங்கள் இப்போது பார்க்கிற செயல்களைக் காணும்படியாக ஆசீர்வதிக்கப்பட்டுள்ளீர்கள்.
லூக்கா 10 : 24 (ERVTA)
நீங்கள் இப்போது பார்க்கிற காரியங்களைக் காணவேண்டுமென்று பல தீர்க்கதரிசிகளும், மன்னர்களும் விரும்பினார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆனால் அவர்கள் இக்காரியங்களைப் பார்க்கவில்லை. நீங்கள் இப்போது கேட்கிற செய்திகளைக் கேட்க வேண்டுமென்று பல தீர்க்கதரிசிகளும், அரசர்களும் விரும்பினார்கள். ஆனால் அவர்கள் இச்செய்திகளைக் கேட்கவில்லை” என்றார்.
லூக்கா 10 : 25 (ERVTA)
நல்ல சமாரியன் நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்து நின்றான். அவன் இயேசுவைச் சோதிக்க முயன்று கொண்டிருந்தான். அவன், “போதகரே, நித்தியமான வாழ்வு பெற நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.
லூக்கா 10 : 26 (ERVTA)
அவனை நோக்கி இயேசு, “சட்டத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது? அங்கு எதை நீ வாசிக்கிறாய்?” என்றார்.
லூக்கா 10 : 27 (ERVTA)
அம்மனிதன், “ ‘உனது தேவனாகிய கர்த்தரை நேசிப்பாயாக. உன் முழு நெஞ்சத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு வல்லமையோடும் உன் முழு மனதோடும் அவரை நேசிக்க வேண்டும்’ ”✡ யாத். 6:5-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. என்றும், மேலும், “ ‘நீ உன்னை நேசிப்பது போலவே பிறரிடமும், அன்பு காட்ட வேண்டும்’j என்றும் எழுதப்பட்டுள்ளது” எனப் பதிலுரைத்தான்.
லூக்கா 10 : 28 (ERVTA)
இயேசு அவனை நோக்கி, “உன் பதில் சரியானது. இதைச் செய்தால் நித்திய வாழ்வைப் பெறுவாய்” என்றார்.
லூக்கா 10 : 29 (ERVTA)
அம்மனிதன் தான் வாழ்ந்து வரும் முறையே சரியானது என நிரூபிக்க விரும்பினான். எனவே அவன் இயேசுவிடம், “நான் நேசிக்க வேண்டிய பிற மக்கள் யார்?” என்று கேட்டான்.
லூக்கா 10 : 30 (ERVTA)
அக்கேள்விக்குப் பதிலாக இயேசு: “ஒரு மனிதன் எருசலேமில் இருந்து எரிகோவிற்குப் பாதை வழியாகப் பயணம் செய்து கொண்டிருந்தான். சில திருடர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்கள் அவனது ஆடையைக் கிழித்து அவனை அடித்தார்கள். அம்மனிதனைத் தரையில் வீழ்த்திவிட்டு அத்திருடர்கள் அங்கிருந்து சென்றார்கள். அவன் இறக்கும் தருவாயில் கிடந்தான்.
லூக்கா 10 : 31 (ERVTA)
“ஒரு யூத ஆசாரியன் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்தான். அவன் அம்மனிதனைக் கண்டபோதும் அவனுக்கு உதவும்பொருட்டு நிற்கவில்லை. அங்கிருந்து போய்விட்டான்.
லூக்கா 10 : 32 (ERVTA)
அடுத்ததாக, ஒரு லேவியன் அவ்வழியாக வந்தான். லேவியன் காயமுற்ற மனிதனைக் கண்டான். அவன் பக்கமாய் கடந்து சென்றான். ஆனால் அவனும் அவனுக்கு உதவும் பொருட்டு நிற்கவில்லை. அங்கிருந்து போய்விட்டான்.
லூக்கா 10 : 33 (ERVTA)
“பின்னர் ஒரு சமாரியன் அவ்வழியாகப் பயணம் செய்தான். காயப்பட்ட மனிதன் கிடந்த இடத்துக்கு வந்தான். சமாரியன் அம்மனிதனைப் பார்த்தான். காயமுற்ற மனிதனுக்காகக் கருணைகொண்டான்.
லூக்கா 10 : 34 (ERVTA)
சமாரியன் அவனிடம் சென்று ஒலிவ எண்ணெயையும் திராட்சை இரசத்தையும் காயங்களில் ஊற்றினான். அம்மனிதனின் காயங்களைத் துணியால் சுற்றினான். சமாரியனிடம் ஒரு கழுதை இருந்தது. அவன் காயமுற்ற மனிதனை அக்கழுதையின் மேல் ஏற்றி, ஒரு விடுதிக்கு அழைத்து வந்தான். அங்கு சமாரியன் அம்மனிதனைக் கவனித்தான்.
லூக்கா 10 : 35 (ERVTA)
மறுநாள் இரண்டு வெள்ளிப் பணத்தை எடுத்து விடுதியில் வேலைசெய்த மனிதனிடம் கொடுத்தான். சமாரியன் அவனிடம், ‘காயமுற்ற இம்மனிதனைக் கவனித்துக்கொள். அதிகப் பணம் செலவானால் நான் திரும்ப வரும்போது அதனை உனக்குக் கொடுப்பேன்’ ” என்றான்.
லூக்கா 10 : 36 (ERVTA)
பின்பு இயேசு, “இந்த மூன்று பேரிலும் கள்வரால் காயமுற்ற மனிதனுக்கு அன்பு காட்டியவன் யார் என்று நீ எண்ணுகிறாய்?” என்றார்.
லூக்கா 10 : 37 (ERVTA)
நியாயசாஸ்திரி, “அவனுக்கு உதவியவன்தான்” என்று பதில் சொன்னான். இயேசு அவனிடம், “நீயும் சென்று பிறருக்கு அவ்வாறே செய்” என்றார்.
லூக்கா 10 : 38 (ERVTA)
மரியாளும் மார்த்தாளும் இயேசுவும், அவரது சீஷர்களும் பயணம் செய்கையில் இயேசு ஓர் ஊருக்குள் நுழைந்தார். மார்த்தாள் என்ற பெயருள்ள பெண் இயேசுவைத் தனது வீட்டில் தங்குவதற்கு அனுமதித்தாள்.
லூக்கா 10 : 39 (ERVTA)
மார்த்தாளின் சகோதரியின் பெயர் மரியாள். மரியாள் இயேசுவின் பாதத்தருகே அமர்ந்து அவரது போதனைகளைக் கேட்டுக்கொண்டிருந்தாள். அவளது சகோதரி மார்த்தாள் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள்.
லூக்கா 10 : 40 (ERVTA)
மிகுதியான வேலைகளைத் தானே செய்துகொண்டிருந்ததால் மார்த்தாள் எரிச்சலடைந்தாள். அவள் உள்ளே சென்று, “ஆண்டவரே வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் நானே தனிமையாகச் செய்வதற்கு என் சகோதரி என்னை விட்டு வைத்திருப்பதை நீர் கவனிக்கவில்லையா? எனக்கு உதவும்படியாக அவளுக்குக் கூறுங்கள்” என்றாள்.
லூக்கா 10 : 41 (ERVTA)
ஆனால் கர்த்தர் அவளுக்குப் பதில் சொல்லும் விதத்தில், “மார்த்தாளே மார்த்தாளே நீ பல வகையான காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டு, மனதைக் குழப்பிக்கொள்கிறாய்.
லூக்கா 10 : 42 (ERVTA)
ஒரே ஒரு காரியம் முக்கியமானது. மரியாள் மிகச்சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள். அது அவளிடமிருந்து ஒருபோதும் எடுக்கப்படமாட்டாது” என்றார்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42