நியாயாதிபதிகள் 18 : 1 (ERVTA)
லாயீசு நகரத்தை தாண் கைப்பற்றுதல் அக்காலத்தில் இஸ்ரவேலருக்கு அரசனாக யாரும் இல்லை. அப்போது தாண் கோத்திரத்தினர் வசிப்பதற்கு இன்னும் இடம் தேடிக்கொண்டிருந்தனர். அவர்களுக்குரிய தேசப்பகுதியை அவர்கள் சுதந்தரிக்கவில்லை. பிற இஸ்ரவேலின் கோத்திரத்தினர் அனைவரும் தமக்குரிய நிலத்தைப் பெற்றிருந்தனர். ஆனால் தாண் கோத்திரத்தினர் தமக்கான நிலத்தை இதுவரை சுதந்தரிக்கவில்லை.
நியாயாதிபதிகள் 18 : 2 (ERVTA)
எனவே தாண் கோத்திரத்தினர் ஏதேனும் நிலத்தைப் பார்த்து வருவதற்காக 5 வீரர்களை அனுப்பினார்கள். அவர்கள் குடியேற ஏற்ற இடத்தைக் கண்டு பிடிப்பதற்காகச் சென்றனர். அந்த 5 மனிதர்களும் சோரா, எஸ்தாவோல் ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தாணின் கோத்திரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்களிடம் “போய் நமக்காக நிலத்தைப் பார்த்து வாருங்கள்” என்று சொல்லப்பட்டது. அந்த 5 மனிதர்களும் எப்பிராயீமின் மலை நாட்டிற்கு வந்தனர். அவர்கள் மீகாவின் வீட்டிற்கு வந்து, இரவை அங்குக் கழித்தனர்.
நியாயாதிபதிகள் 18 : 3 (ERVTA)
அவர்கள் மீகாவின் வீட்டிற்கருகே வந்து கொண்டிருந்தபோது, லேவியனாகிய இளைஞனின் சத்தத்தைக் கேட்டனர். அவர்கள் மீகாவின் வீட்டில் தங்கியிருந்தபோது, அவன் குரலை அடையாளம் கண்டு கொண்டனர். அவர்கள் அந்த இளைஞனிடம், “உன்னை இங்கு அழைத்து வந்தது யார்? நீ இங்கு என்ன செய்கிறாய்? இங்கு உன் வேலை என்ன?” என்று கேட்டனர்.
நியாயாதிபதிகள் 18 : 4 (ERVTA)
மீகா அவனுக்குச் செய்தவற்றை எல்லாம் அந்த இளைஞன் அவர்களுக்குக் கூறினான். அந்த இளைஞன், “மீகா என்னைச் சம்பளத்திற்கு அமர்த்தினான். நான் பூஜை செய்கிறவனாக உள்ளேன்” என்று கூறினான்.
நியாயாதிபதிகள் 18 : 5 (ERVTA)
எனவே அவர்கள் அவனிடம், “தயவு செய்து தேவனிடம் எங்களுக்காக ஏதாவது விசாரித்துச் சொல். நாங்கள் சிலவற்றைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். நாங்கள் வாழ்வதற்காக இடம் தேடுவது வெற்றி பெறுமா?” என்று கேட்டனர்.
நியாயாதிபதிகள் 18 : 6 (ERVTA)
பூஜை செய்யும் இளைஞன் அந்த 5 மனிதரிடமும், “ஆம், சமாதானத்தோடு செல்லுங்கள். உங்கள் பாதையில் கர்த்தர் உங்களை வழிநடத்துவார்” என்றான்.
நியாயாதிபதிகள் 18 : 7 (ERVTA)
எனவே அந்த 5 மனிதர்களும் அங்கிருந்து சென்றனர். அவர்கள் லாயீஸ் நகரத்திற்குச் சென்றனர். அந்நகர ஜனங்கள் பாதுகாப்பாக வாழ்வதைக் கண்டனர். அவர்களைச் சீதோனியர் ஆண்டு வந்தனர். எல்லாம் சமாதானத்தேடு, அமைதியாக நடைபெற்றன. அவர்கள் எல்லாவற்றையும் நிறைவாய் பெற்றிருந்தனர். எந்தப் பகைவரும் அவர்களைத் துன்புறுத்துவதற்கு அருகே இருக்கவில்லை. மேலும் அவர்கள் சீதோனிலிருந்து வெகுதூரத்தில் வாழ்ந்து வந்தார்கள். ஆராமின் ஜனங்களோடும் எத்தகைய ஒப்பந்தமும் அவர்கள் செய்திருக்கவில்லை.
நியாயாதிபதிகள் 18 : 8 (ERVTA)
அந்த 5 பேரும் சோரா, எஸ்தாவோல், ஆகிய நகரங்களுக்குத் திரும்பினார்கள். அவர்களின் உறவினர், “நீங்கள் அறிந்து வந்ததென்ன?” என்று கேட்டார்கள்.
நியாயாதிபதிகள் 18 : 9 (ERVTA)
அவர்கள், “நாங்கள் ஒரு இடத்தைப் பார்த்து வந்திருக்கிறோம். அது மிகவும் நன்றாக இருக்கிறது. நாம் அதைத் தாக்கவேண்டும். காத்திருக்கக் கூடாது, நாம் போய், அத்தேசத்தை கைப்பற்றுவோம்!
நியாயாதிபதிகள் 18 : 10 (ERVTA)
அந்த இடத்திற்கு நீங்கள் வரும்போது அத்தேசம் மிகப் பெரிய நிலப்பரப்பு கொண்டது என்பதை அறிவீர்கள். எல்லாம் மிகுதியாக அங்குக் கிடைக்கின்றன. ஜனங்கள் தாக்குதலை எதிர்பார்த்திருக்கவில்லை என்பதையும் நீங்கள் காண்பீர்கள். அத்தேசத்தைக் தேவன் நமக்கு நிச்சயமாக அளித்திருக்கிறார்” என்றார்கள்.
நியாயாதிபதிகள் 18 : 11 (ERVTA)
எனவே தாண் கோத்திரத்தைச் சேர்ந்த 600 ஆட்கள் சோரா, எஸ்தாவோல் ஆகிய நகரங்களிலிருந்து சென்றனர். அவர்கள் போருக்குத் தயாராக இருந்தனர்.
நியாயாதிபதிகள் 18 : 12 (ERVTA)
லாயீஸ் நகரத்திற்குச் செல்லும் வழியில் அவர்கள் யூதா தேசத்திலுள்ள கீரியாத்யாரீம் என்னும் நகரத்திற்குச் சென்று, அங்கு முகாமிட்டுத் தங்கினார்கள். ஆகையால் கீரியாத்யாரீமிற்கு மேற்கேயுள்ள இடம் இன்று வரைக்கும் மக்னிதான் எனப்படுகிறது.
நியாயாதிபதிகள் 18 : 13 (ERVTA)
அந்த இடத்திலிருந்து 600 பேரும் எப்பிராயீமின் மலை நாட்டிற்குப் பயணம் செய்தனர். பிறகு அவர்கள் மீகாவின் வீட்டிற்கு வந்தனர்.
நியாயாதிபதிகள் 18 : 14 (ERVTA)
லாயீசைச் சுற்றிப் பார்த்துவந்த 5 பேரும்தம் உறவினர்களிடம், “இந்த வீடுகளுள் ஒன்றில் ஒரு ஏபோத் உள்ளது. மேலும் வீட்டிற்குரிய தெய்வங்களும், ஒரு செதுக்கப்பட்ட சிலையும், ஒரு வெள்ளி விக்கிரகமும் இங்கு உள்ளன. உங்களுக்கு என்ன செய்வதெனத் தெரியும். சென்று அவற்றை எடுத்து வாருங்கள்” என்றனர்.
நியாயாதிபதிகள் 18 : 15 (ERVTA)
எனவே அவர்கள் மீகாவின் வீட்டருகே, இளைஞனாகிய லேவியன் வசித்துவந்த இடத்தில் நின்று, அந்த இளைஞனின் நலத்தை விசாரித்தனர்.
நியாயாதிபதிகள் 18 : 16 (ERVTA)
தாண் கோத்திரத்தைச் சேர்ந்த 600 பேரும் நுழை வாயிலில் நின்று கொண்டனர். அவர்கள் கையில் ஆயுதங்களை ஏந்தியவர்களாய் போருக்குத் தயாராக இருந்தனர்.
நியாயாதிபதிகள் 18 : 17 (ERVTA)
(17-18)அந்த 5 ஒற்றர்களும் வீட்டினுள் நுழைந்தனர். போருக்குத் தயாராக நின்ற 600 பேரோடும் பூஜை செய்பவன் கதவிற்கு வெளியே நின்றுக் கொண்டிருந்தான். அந்த ஆட்கள் செதுக்கப்பட்ட சிலை, ஏபோத், வீட்டு விக்கிரகங்கள், வெள்ளி விக்கிரகம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டனர். லேவியனாகிய பூஜை செய்யும் இளைஞன், “நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டான்.
நியாயாதிபதிகள் 18 : 18 (ERVTA)
நியாயாதிபதிகள் 18 : 19 (ERVTA)
ஐந்து பேரும், “அமைதியாக இரு! ஒரு வார்த்தையும் பேசாதே. எங்களோடு வா. எங்கள் தந்தையாகவும், பூஜை செய்பவனாகவும் இரு. நீ இப்போது ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவனுக்காக பூஜை செய்யும் பணியைச் செய்வது நல்லதா? அல்லது இஸ்ரவேலின் மொத்த கோத்திரங்களுக்கு பூஜை செய்வது நல்லதா?” என்று கேட்டனர்.
நியாயாதிபதிகள் 18 : 20 (ERVTA)
இது லேவியனாகிய அம்மனிதனுக்குச் சந்தோஷம் அளித்தது. எனவே அவன் ஏபோத், வீட்டு விக்கிரகங்கள், விக்கிரகம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, தாண் கோத்திரத்தைச் சேர்ந்த அம்மனிதரோடு சென்றான்.
நியாயாதிபதிகள் 18 : 21 (ERVTA)
பின்பு தாண் கோத்திரத்தைச் சேர்ந்த அந்த 600 பேரும் லேவியனாகிய அந்தப் பூஜை செய்பவனோடு மீகாவின் வீட்டிலிருந்து திரும்பி நடந்தனர். அவர்கள் தங்கள் குழந்தைகள், மிருகங்கள், பொருட்கள் அனைத்தையும் தங்களுக்கு முன்பாகப் போகவிட்டனர்.
நியாயாதிபதிகள் 18 : 22 (ERVTA)
அங்கிருந்து தாண் கோத்திரத்து ஆட்கள் மிகுந்த தூரம் சென்றார்கள். ஆனால் மீகாவிற்கு அருகே வாழ்ந்தவர்கள் ஒன்று கூடி தாண் மனிதர்களைத் துரத்திப் பிடித்தனர்.
நியாயாதிபதிகள் 18 : 23 (ERVTA)
மீகாவின் ஆட்கள் தாணின் மனிதர்களைப் பார்த்து சத்தமிட்டனர். தாணின் ஆட்கள் திரும்பிப் பார்த்து மீகாவிடம், “சிக்கல் என்ன? ஏன் சத்தமிடுகிறீர்கள்?” என்றனர்.
நியாயாதிபதிகள் 18 : 24 (ERVTA)
மீகா, “தாணின் மனிதர்களாகிய நீங்கள் எனது விக்கிரகங்களை எடுத்து வந்தீர்கள். அவற்றை எனக்காகச் செய்தேன். எனக்காக பூஜை செய்பவனையும் அழைத்துப் போகிறீர்கள். இப்போது என்னிடம் என்ன இருக்கிறது? ‘உன் பிரச்சனை என்ன?’ என்று எப்படி என்னைக் கேட்கிறீர்கள்?” என்றான்.
நியாயாதிபதிகள் 18 : 25 (ERVTA)
தாண் கோத்திரத்தைச் சேர்ந்த மனிதர்கள், “நீங்கள் எங்களோடு விவாதிக்காதிருப்பது நல்லது. எங்கள் மனதரில் சிலர் கோபக்காரர்கள். எங்களைப் பார்த்து நீங்கள் சத்தமிட்டுப் பேசினால் அவர்கள் உங்களைத் தாக்கக்கூடும். நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் கொல்லப்படுவீர்கள்” என்றார்கள்.
நியாயாதிபதிகள் 18 : 26 (ERVTA)
பின்பு தாணின் ஆட்கள் திரும்பி, தங்கள் வழியேச் சென்றார்கள். அவர்கள் வலிமை மிக்கவர்கள் என்பதை மீகா அறிந்ததினால் தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றான்.
நியாயாதிபதிகள் 18 : 27 (ERVTA)
மீகா செய்த விக்கிரகங்களைத் தாணின் ஆட்கள் எடுத்து சென்றனர். மீகாவுடனிருந்த ஆசாரியனையும் அவர்கள் தங்களுடன் அழைத்து லாயீஸிக்கு வந்தனர். அங்குள்ள ஜனங்கள் அமைதியாக வாழ்ந்தனர். அவர்கள் எந்தத் தாக்குதலையும் எதிர்பார்க்கவில்லை. தாணின் ஆட்கள் தங்கள் வாளால் அவர்களை கொன்றுப் போட்டு, அவர்கள் நகரத்தை எரித்தனர்.
நியாயாதிபதிகள் 18 : 28 (ERVTA)
லாயீஸில் வாழ்ந்த ஜனங்களைக் காப்பாற்றுவதற்கு யாரும் இருக்கவில்லை. சீதோன் நகரில் அவர்களுக்கு உதவும் ஜனங்கள் இருந்தனர். ஆனால் அந்நகரத்திலிருந்து வெகு தொலைவில் அவர்கள் வசித்தார்கள். லாயீசின் ஜனங்கள் ஆராமியரோடு எந்த ஒப்பந்தமும் செய்திருக்கவில்லை. எனவே அவர்கள் எந்த உதவியும் செய்யவில்லை. பேத்ரே கோபிற்குச் சொந்தமான ஒரு பள்ளத்தாக்கில் லாயீஸ் நகரம் இருந்தது. அந்த இடத்தில் தாணின் ஜனங்கள் ஒரு புதிய நகரத்தைக் கட்டினார்கள். அந்நகரம் அவர்கள் இருப்பிடமாயிற்று.
நியாயாதிபதிகள் 18 : 29 (ERVTA)
தாண் ஜனங்கள் அந்நகரத்திற்கு ஒரு புதிய பெயரிட்டனர். அந்நகரம் லாயீஸ் என்னும் பெயர் கொண்டது. அவர்கள் அதைத் தாண் என்று மாற்றினார்கள். இஸ்ரவேலின் மகன்களில் ஒருவனும், தங்கள் முற்பிதாவுமாகிய தாணின் பெயரால் அந்நகரை அழைத்தனர்.
நியாயாதிபதிகள் 18 : 30 (ERVTA)
தாண் நகரில் தாண் கோத்திரத்தினர் அந்த விக்கிரங்களை வைத்தனர். கெர்சோனின் மகனாகிய யோனத்தானை அவர்கள் பூஜை செய்பவனாக நியமித்தனர். கெர்சோம் மோசேயின் மகன். இஸ்ரவேலர் பாபிலோனுக்குக் கைதிகளாக அழைத்துச் செல்லப்படும் வரையிலும் யோனத்தானும், அவனது மகன்களும் தாண் கோத்திரத்தினருக்கு பூஜை செய்பவர்களாக விளங்கினர்.
நியாயாதிபதிகள் 18 : 31 (ERVTA)
தாண் ஜனங்கள் மீகா செய்த விக்கிரகங்களை தொழுதுகொண்டனர். தேவனின் கூடாரம் சீலோவில் இருந்த காலத்தில் அவர்கள் அந்த விக்கிரகங்களை வணங்கி வந்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31