எரேமியா 9 : 1 (ERVTA)
எனது தலை தண்ணீரால் நிறைக்கப்பட்டால், எனது கண்கள் கண்ணீரின் ஊற்றாக இருந்தால் நான் இரவும் பகலும், அழிந்துப்போன எனது ஜனங்களுக்காக அழ முடியும்!
எரேமியா 9 : 2 (ERVTA)
வழிபோக்கர்கள் இரவிலே தங்குவதற்கு, வனாந்தரத்திலே எனக்கென்றொரு வீடு இருந்திருக்குமானால் நல்லது. அப்பொழுது நான் எனது ஜனங்களை விட்டுப்போவேன். நான் அந்த ஜனங்களிலிருந்து தூரப் போய்விடுவேன். ஏனென்றால், அவர்கள் தேவன் மேல் விசுவாசம் இல்லாதவர்கள். அவர்கள் அனைவரும் அவருக்கு எதிராகத் திரும்பியிருக்கிறார்கள்.
எரேமியா 9 : 3 (ERVTA)
“அந்த ஜனங்கள் தங்களது நாக்குகளை வில்லைப்போன்று பயன்படுத்துகின்றனர். அவர்களது வாய்களிலிருந்து பொய்கள் அம்புகளைப்போன்று பறக்கின்றன. இந்த நாட்டில் உண்மைகளல்ல பொய்கள் மிகப் பலமாக வளர்ந்திருக்கின்றன. ஜனங்கள் ஒரு பாவத்திலிருந்து இன்னொரு பாவத்திற்குப் போகிறார்கள். அவர்களுக்கு என்னைத் தெரியாது” கர்த்தர் இவற்றைச் சொல்கிறார்.
எரேமியா 9 : 4 (ERVTA)
கர்த்தர், “உனது அண்டை வீட்டாரை கவனியுங்கள்! உனது சொந்தச் சகோதரர்களையும் நம்பாதீர்கள்! ஏனென்றால், ஒவ்வொரு சகோதரனும் ஏமாற்றுக்காரனாய் இருக்கிறான். ஒவ்வொரு அண்டைவீட்டானும், உனது முதுகுக்குப் பின்னால் பேசுகிறான்.
எரேமியா 9 : 5 (ERVTA)
ஒவ்வொருவனும் தனது அண்டை வீட்டானுக்கு பொய்யனாக இருக்கிறான். எவனும் உண்மையைப் பேசுவதில்லை. யூதாவின் ஜனங்கள் தம் நாக்குகளுக்கு பொய்யையே கற்றுக் கொடுத்திருக்கின்றனர். சோர்ந்துபோகிற அளவுக்கு பாவம் செய்தார்கள்.
எரேமியா 9 : 6 (ERVTA)
ஒரு கெட்டச் செயலை இன்னொன்று தொடர்கிறது. பொய்கள், பொய்களைத் தொடர்கின்றன. ஜனங்கள் என்னை அறிய மறுக்கின்றனர்” என்று கர்த்தர் கூறினார்.
எரேமியா 9 : 7 (ERVTA)
எனவே, சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “ஒரு வேலையாள், ஒரு உலோகத்தை அது சுத்தமாயிருக்கிறதா என்று சோதனை செய்வதற்காக நெருப்பிலே சூடுபடுத்துகிறான். அதுபோல நான் யூதா ஜனங்களை சோதனைச் செய்கிறேன். எனக்கு வேறுவழி தெரிந்திருக்கவில்லை. எனது ஜனங்கள் பாவம் செய்திருக்கிறார்கள்.
எரேமியா 9 : 8 (ERVTA)
யூதா ஜனங்கள் அம்புகளைப் போன்ற கூர்மையான நாக்குகளை வைத்திருக்கிறார்கள். அவர்களது வாய்கள் பொய்யைப் பேசுகின்றன. ஒவ்வொரு நபரும் தனது அயலானிடம் சமாதானமாய் பேசுகிறான். ஆனால், அவன் இரகசியமாக தனது அயலானைத் தாக்குவதற்குத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறான்.
எரேமியா 9 : 9 (ERVTA)
யூதா ஜனங்களை நான் தண்டிக்க வேண்டும்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “அந்த வகையான ஜனங்களை நான் தண்டிக்க வேண்டும் என்று நீ அறிவாய். அவர்களுக்கு ஏற்ற தண்டனையை நான் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.”
எரேமியா 9 : 10 (ERVTA)
நான் (எரேமியா) மலைகளுக்காக உரக்க அழுவேன். காலியான வயல்களுக்காக நான் ஒப்பாரிப் பாடலைப் பாடுவேன். ஏனென்றால், உயிர் வாழ்வன அனைத்தும் எடுக்கப்பட்டுவிடும். இப்பொழுது எவரும் அங்கு பயணம் செய்யமாட்டார்கள். ஆடுமாடுகளின் சத்தத்தை அங்கே கேட்கமுடியாது. பறவைகள் பறந்து போயிருக்கின்றன. மிருகங்கள் போய்விட்டன.
எரேமியா 9 : 11 (ERVTA)
“நான் (கர்த்தர்) எருசலேம் நகரத்தை குப்பை மேடாக்குவேன். அது ஓநாய்களின் வீடாகும். யூதா நாட்டிலுள்ள நகரங்களை நான் அழிப்பேன், அதனால் அங்கே எவரும் வாழமுடியாது.”
எரேமியா 9 : 12 (ERVTA)
இவற்றையெல்லாம் அறிந்துக்கொள்ளுகிற அளவிற்கு ஒரு ஞானமுள்ள மனிதன் அங்கே இருக்கிறானா? கர்த்தரால் கற்பிக்கப்பட்டிருக்கிற சிலர் அங்கே இருக்கிறார்களா? கர்த்தருடைய செய்தியை எவரொருவராலும் விளக்கமுடியுமா? அந்தப் பூமி ஏன் வீணாயிற்று? எந்த மனிதரும் போகமுடியாத அளவிற்கு அது ஏன் வெறுமையான வனாந்தரமாயிற்று?
எரேமியா 9 : 13 (ERVTA)
கர்த்தர் இந்த வினாக்களுக்கு விடை சொன்னார். அவர் கூறினார்: “இது ஏனென்றால், யூதாவின் ஜனங்கள் எனது போதனைகளைப் பின்பற்றுவதை விட்டுவிட்டார்கள். நான் எனது போதனைகளைக் கொடுத்தேன். ஆனால், அவர்கள் நான் சொல்வதைக் கேட்க மறுத்துவிட்டனர்.
எரேமியா 9 : 14 (ERVTA)
யூதாவின் ஜனங்கள் தங்கள் சொந்த வழியிலேயே வாழ்ந்தார்கள். அவர்கள் பிடிவாதக்காரர்கள், அவர்கள் பொய்த் தெய்வமான பாகாலைத் தொழுதுகொள்கிறார்கள். அவர்களின் தந்தைகள் அந்தப் பொய்த் தெய்வங்களைத் தொழுதுகொள்ள சொல்லித் தந்தனர்.”
எரேமியா 9 : 15 (ERVTA)
“எனவே, இஸ்ரவேலின் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் கூறுகிறார்: நான் விரைவில் யூதா ஜனங்களைத் தண்டிப்பேன்.
எரேமியா 9 : 16 (ERVTA)
நான் யூதாவின் ஜனங்களை பல நாடுகளிலும் சிதறும்படி செய்வேன். அவர்கள் புற ஜாதிகளுக்குள் வாழ்வார்கள். அவர்களும் அவர்களது தந்தைகளும் அந்த நாடுகளைப்பற்றி எப்பொழுதும் அறிந்திருக்கமாட்டார்கள். நான் பட்டயங்களுடன் ஆட்களை அனுப்புவேன். அவர்கள் யூதாவின் ஜனங்களைக் கொல்வார்கள். ஜனங்கள் முடிந்து போகுமட்டும் அவர்கள் அவர்களைக் கொல்வார்கள்.”
எரேமியா 9 : 17 (ERVTA)
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இதைத்தான் கூறுகிறார்: “இப்பொழுது, இவற்றைப்பற்றி எண்ணுங்கள்! நீங்கள், சாவில் கூலிக்காக அழுவதில் திறமைவாய்ந்த பெண்களைக் கூப்பிடுங்கள். அந்த வேலையில் கெட்டிக்காரிகளை ஜனங்களுக்காக சொல்லி அனுப்புங்கள்.
எரேமியா 9 : 18 (ERVTA)
ஜனங்கள் சொல்கிறார்கள், ‘அந்தப் பெண்கள் விரைவாக வந்து, நமக்காக அழட்டும், பிறகு நமது கண்கள் கண்ணீரால் நிறையும். நமது கண்களிலிருந்து நீரோடை வரும்.’
எரேமியா 9 : 19 (ERVTA)
“சீயோனிலிருந்து உரத்த அழுகையின் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது. ‘நாம் உண்மையிலேயே அழிக்கப்பட்டிருக்கிறோம். நாம் உண்மையிலேயே வெட்கப்படுகிறோம்! நாம் நமது நாட்டைவிட்டு விலக வேண்டும். ஏனென்றால், நமது வீடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இப்பொழுது நமது வீடுகள் கற்குவியல்களாக இருக்கின்றன.’ ”
எரேமியா 9 : 20 (ERVTA)
யூதாவின் ஸ்திரீகளே! இப்பொழுது, கர்த்தரிடமிருந்து வரும் செய்தியைக் கேளுங்கள். கர்த்தருடைய வாயிலிருந்து வருகிற வார்த்தைகளைக் கேளுங்கள். உங்கள் பெண்பிள்ளைகளுக்கு எவ்வாறு உரக்க அழுவது என்று கற்றுக் கொடுங்கள். ஒவ்வொரு பெண்ணும் ஒப்பாரிப் பாடலை பாடக் கற்றுக்கொள்ள வேண்டும்.
எரேமியா 9 : 21 (ERVTA)
“மரணம் வந்திருக்கிறது. நமது ஜன்னல்கள் வழியாக மரணம் ஏறியிருக்கிறது. நமது அரண்மனைகளுக்குள் மரணம் வந்திருக்கிறது. தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும், நமது பிள்ளைகளிடம் மரணம் வந்திருக்கிறது. பொது இடங்களில் நாம் சந்திக்கிற இளைஞர்களிடம் மரணம் வந்திருக்கிறது.”
எரேமியா 9 : 22 (ERVTA)
“கர்த்தர் எரேமியாவை நோக்கி, மரித்த உடல்கள் வயல் வெளிகளின்மேல் எருவைப் போன்று கிடக்கும். அவர்களின் உடல்கள், விவசாயி அறுத்துப் போட்ட அரியைப்போன்று தரையில் கிடக்கும். ஆனால் அவற்றை சேகரிக்க எவரும் இருக்கமாட்டார்கள்” என்று சொல் என்றார்.
எரேமியா 9 : 23 (ERVTA)
கர்த்தர், “ஞானம் உள்ளவர்கள் தமது ஞானத்தைப்பற்றி பெருமை பேசவேண்டாம். பலம் உள்ளவர்கள் தமது பலத்தைப்பற்றி பெருமை பேசவேண்டாம். செல்வம் உடையவர்கள் தமது செல்வத்தைப்பற்றி பெருமை பேசவேண்டாம்.
எரேமியா 9 : 24 (ERVTA)
ஆனால் எவராவது பெருமைபேச விரும்பினால், அவன் இதைப்பற்றி பெருமைப்பட்டுக்கொள்ளட்டும். என்னைப்பற்றி அவன் அறிந்துக்கொண்டதைக் குறித்து பெருமைப்படட்டும். நானே கர்த்தர் என்றும், நான் தயவும் நியாயமும் கொண்டவர் என்றும், நான் பூமியில் நன்மையைச் செய்கிறவர் என்றும் புரிந்துகொண்டவன் பெருமைப்படட்டும். நான் அவற்றை நேசிக்கிறேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 9 : 25 (ERVTA)
“சரீரத்தில் மட்டும் விருத்தசேதனம் பண்ணிக் கொண்டவர்களை நான் தண்டிக்கப்போகிற காலம் வந்துகொண்டிருக்கிறது.
எரேமியா 9 : 26 (ERVTA)
எகிப்து, யூதா, ஏதோம், அம்மோன், மோவாப் மற்றும் வனாந்திரத்தில் வாழ்கிற அனைத்து ஜனங்களையும்பற்றி நான் பேசிக்கொண்டிருக்கிறேன், பாலைவனக் குடிகள் தங்கள் தாடி ஓரங்களை வெட்டினார்கள். இந்த நாடுகளில் உள்ள அனைத்து ஜனங்களும் சரீரத்தில் விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளாதவர்கள். ஆனால், இஸ்ரவேல் குடும்பத்தில் வந்த ஜனங்களோ, தங்கள் இதயத்தில் விருத்தசேதனம் செய்துகொள்ளவில்லை” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26