எரேமியா 32 : 1 (ERVTA)
எரேமியா ஒரு வயலை வாங்குகிறான் யூதாவின் அரசனான சிதேக்கியாவின் ஆட்சியின் பத்தாம் ஆண்டில் கர்த்தருடைய வார்த்தை எரேமியாவிற்கு வந்தது: சிதேக்கியாவின் பத்தாவது ஆட்சியாண்டானது நேபுகாத்நேச்சாருக்கு 18வது ஆட்சி ஆண்டாகும்.
எரேமியா 32 : 2 (ERVTA)
அந்த நேரத்தில், பாபிலோன் அரசனின் படை எருசலேம் நகரத்தைச்சுற்றி வளைத்துக் கொண்டது. எரேமியா கைது செய்யப்பட்டு யூதா அரசனின் அரண்மனை முற்றத்தில் காவலர்களின் பொறுப்பில் விடப்பட்டிருந்தான்.
எரேமியா 32 : 3 (ERVTA)
யூதா அரசனான சிதேக்கியா அந்த அரண்மனையின் சிறையில் எரேமியாவை வைத்தான். சிதேக்கியா எரேமியாவின் தீர்க்கதரிசனத்தை விரும்பவில்லை. எரேமியா சொல்லுகிறதாவது, “கர்த்தர் கூறுகிறார்: ‘நான் விரைவில் பாபிலோன் அரசனிடம் எருசலேம் நகரத்தைக் கொடுப்பேன். நேபுகாத்நேச்சார் இந்நகரத்தைக் கைப்பற்றுவான்.
எரேமியா 32 : 4 (ERVTA)
யூதாவின் அரசனான சிதேக்கியா பாபிலோனியர்களின் படைகளிடமிருந்து தப்பிக்கமுடியாது. அவன் உறுதியாக பாபிலோன் அரசனிடம் கொடுக்கப்படுவான். சிதேக்கியா பாபிலோன் அரசனிடம் நேருக்கு நேர் பேசுவான். சிதேக்கியா அவனைத் தனது சொந்தக் கண்களால் காண்பான்.
எரேமியா 32 : 5 (ERVTA)
பாபிலோன் அரசன் சிதேக்கியாவைப் பாபிலோனுக்குக் கொண்டு செல்வான். நான் அவனைத் தண்டிக்கும்வரை சிதேக்கியா அங்கே தங்குவான்.’ இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது. ‘பாபிலோனியர்களின் படைகளுக்கு எதிராக நீங்கள் போரிட்டால் நீங்கள் வெல்லமுடியாது.’ ”
எரேமியா 32 : 6 (ERVTA)
எரேமியா கைதியாக இருந்தபோது அவன், “கர்த்தரிடமிருந்து இந்த வார்த்தை என்னிடம் வந்தது. இதுதான் செய்தி:
எரேமியா 32 : 7 (ERVTA)
‘எரேமியா, உனது பெரியப்பாவின் மகன் அனாமெயேல் விரைவில் உன்னிடம் வருவான். அவன் உனது பெரியப்பா சல்லூமின் மகன். அனாமெயேல் உன்னிடம், “எரேமியா, அனாதோத் அருகிலுள்ள எனது வயலை வாங்கிக்கொள். அதை விலைக்கு வாங்கு. ஏனென்றால் நீதான் எனக்கு மிக நெருங்கிய உறவினன். இது உனது உரிமை. அந்த வயலை வாங்குவது உனது பொறுப்புமாகும்” ’ என்பான்.
எரேமியா 32 : 8 (ERVTA)
“பிறகு, கர்த்தர் சொன்னதுப்போன்று அப்படியே நிகழந்தது. எனது பெரியப்பாவின் மகன் அனாமெயேல் என்னிடம் சிறைச்சாலையில் முற்றத்திற்கு வந்தான். அனாமெயேல் என்னிடம், ‘எரேமியா, ஆனதோத் நகரத்தின் அருகில் உள்ள எனது வயலை விலைக்கு வாங்கிக்கொள். பென்யமீன் கோத்திரத்தில் உள்ளவர்களின் நாட்டில் இவ்வயல் உள்ளது. அந்நிலம் உனக்கு உரியது. ஏனென்றால், அது உனது உரிமை. எனவே அதைச் சொந்தமாக்கிக் கொள்’ ” என்றான். எனவே, நான் இதுதான் கர்த்தரிடமிருந்து வந்த வார்த்தை என்று அறிந்தேன்.
எரேமியா 32 : 9 (ERVTA)
நான் எனது பெரியப்பாவின் மகன் அனாமெயேலிடமிருந்து வயலை வாங்கினேன். நான் அவனுக்காக 17 சேக்கல் வெள்ளியை எடை போட்டுக் கொடுத்தேன்.
எரேமியா 32 : 10 (ERVTA)
நான் பத்திரத்தில் கையெழுத்து இட்டேன். முத்திரையிட்ட பத்திரத்தின் நகல் ஒன்று என்னிடம் இருந்தது. நான் செய்தவற்றுக்குச் சாட்சியாக சிலர் இருந்தனர். அளவுபடியில் வெள்ளியை எடை போட்டேன்.
எரேமியா 32 : 11 (ERVTA)
பிறகு நான் முத்திரையிட்ட பத்திர நகலையும் முத்திரையிடப்படாத நகலையும் எடுத்தேன்.
எரேமியா 32 : 12 (ERVTA)
நான் அவற்றை எனது பெரியப்பாவின் மகனாக பாருக்கினிடம் கொடுத்தேன். பாருக், நேரியாவின் மகன். நேரியா, மாசெயாவின் மகன். எதிரில் முத்திரையிட்ட பத்திர நகலில் நான் விலைக்கு வாங்கியதின் விவரங்களும் கட்டளைகளும் இருந்தன. எனது மாமன் அனாமெயேலும் மற்றவர்களும் சாட்சியாக இருக்கும்போதே, நான் பத்திரத்தைப் பாருக்கிடம் கொடுத்தேன். அச்சாட்சிகளும் பத்திரத்தில் கையெழுத்து இட்டனர். யூதாவின் ஜனங்கள் பலரும் முற்றத்தில் இருந்து நான் பத்திரத்தைப் பாருக்கிடம் கொடுப்பதைப் பார்த்தனர்.
எரேமியா 32 : 13 (ERVTA)
அனைத்து ஜனங்களும் பார்த்துக்கொண்டிருக்கும்போது நான் பாருக்கிடம்,
எரேமியா 32 : 14 (ERVTA)
“சர்வ வல்லமையுள்ள இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறுகிறார்: ‘நீ முத்திரையிடப்பட்டதும் முத்திரையிடப் படாததுமான இரண்டு பத்திர நகல்களையும் எடுத்து மண்ஜாடிக்குள் போடு. இதைச் செய். அதனால் இப்பத்திரங்கள் நீண்டகாலம் இருக்கும்.’
எரேமியா 32 : 15 (ERVTA)
இஸ்ரவேலின் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் கூறுகிறார். ‘எதிர்காலத்தில், எனது ஜனங்கள் மீண்டும் ஒரு முறை வீடுகளையும் வயல்களையும் திராட்சைத் தோட்டங்களையும் இஸ்ரவேல் நாட்டில் வாங்குவார்கள்’ ”
எரேமியா 32 : 16 (ERVTA)
நான் நேரியாவின் மகன் பாருக்கிடம் பத்திரத்தைக் கொடுத்தப் பிறகு, நான் கர்த்தரிடம் ஜெபம் செய்தேன். நான் சொன்னேன்:
எரேமியா 32 : 17 (ERVTA)
17 “தேவனாகிய கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் படைத்தீர். நீர் அதனை உமது பெரும் வல்லமையால் படைத்தீர். உமக்குச் செய்திட ஆச்சரியகரமானது எதுவும் இல்லை.
எரேமியா 32 : 18 (ERVTA)
கர்த்தாவே, ஆயிரக்கணக்கான ஜனங்களுக்கு நீர் உண்மையாகவும் தயவாகவும் இருக்கிறீர். ஆனால், தந்தைகளின் பாவங்களுக்காக நீர் பிள்ளைகளுக்குத் தண்டனை கொண்டு வருகிறீர். பெருமையும் வல்லமையும் கொண்ட தேவனே, உமது நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர்.
எரேமியா 32 : 19 (ERVTA)
நீர் திட்டமிட்டு பெருஞ்செயல்களைச் செய்கிறீர். கர்த்தாவே ஜனங்கள் செய்கிற அனைத்தையும் நீர் பார்க்கிறீர். நல்லவற்றைச் செய்கிறவர்களுக்குப் பரிசுகளைக் கொடுக்கிறீர். தீயவற்றைச் செய்கிறவர்களுக்குத் தண்டனையைக் கொடுக்கிறீர். அவர்களுக்கு எது ஏற்றதோ அதனை நீர் கொடுக்கிறீர்.
எரேமியா 32 : 20 (ERVTA)
கர்த்தாவே, எகிப்து நாட்டிலே நீர் வல்லமை வாய்ந்த அற்புதங்களைச் செய்தீர். இன்றுவரை நீர் வல்லமை மிக்க அற்புதங்களைச் செய்திருக்கிறீர். நீர் இவற்றை இஸ்ரவேலிலும் செய்தீர். எங்கெல்லாம் ஜனங்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் நீர் இவற்றை செய்தீர். நீர் இவற்றால் பெரும் புகழை அடைந்திருக்கிறீர்.
எரேமியா 32 : 21 (ERVTA)
கர்த்தாவே, வல்லமைமிக்க அற்புதங்களைப் பயன்படுத்தி, உமது இஸ்ரவேல் ஜனங்களை எகிப்துக்கு வெளியே கொண்டுவந்தீர். நீர் உமது சொந்த வல்லமை மிக்க கையைப் பயன்படுத்தி இவற்றைச் செய்தீர். உமது வல்லமை ஆச்சரியமானது!
எரேமியா 32 : 22 (ERVTA)
22 “கர்த்தாவே, இந்தத் தேசத்தை நீர் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுத்தீர். இந்தத் தேசத்தைக் கொடுப்பதாக நீண்ட காலத்திற்கு முன்பே அவர்களது முற்பிதாக்களுக்கு வாக்களித்துள்ளீர். இது மிகவும் சிறந்த தேசம். இது பல நல்லவை உள்ள நல்ல தேசம்.
எரேமியா 32 : 23 (ERVTA)
இஸ்ரவேல் ஜனங்கள் இந்நாட்டிற்குள் வந்தனர். அவர்கள் இதனைச் சொந்தமாக எடுத்தனர். ஆனால் அந்த ஜனங்கள் உமக்கு அடிபணியவில்லை. அவர்கள் உமது போதனைகளைப் பின்பற்றவில்லை. நீர் கட்டளையிட்டவற்றை அவர்கள் செய்யவில்லை. எனவே, நீர் இத்தகைய பயங்கரமானவற்றை இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஏற்படுத்தினீர்.
எரேமியா 32 : 24 (ERVTA)
24 “இப்பொழுது, நகரத்தைப் பகைவர்கள் சூழ்ந்துக்கொண்டனர். அவர்கள் எடுசுவர்களைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்கள் எருசலேம் சுவர்களைத் தாண்டி கைப்பற்றிவிடுவார்கள். அவர்கள் தம் பட்டயங்களைப் பயன்படுத்தியும் பசியாலும் பயங்கரமான நோயாலும் பாபிலோனியர்கள் எருசலேம் நகரைத் தோற்கடித்துவிடுவார்கள். இப்போது பாபிலோனியப்படை எருசலேம் நகரை தாக்கிக்கொண்டிருக்கிறது. கர்த்தாவே, நீர் சொன்னவை நிகழும். இப்பொழுது இது நிகழ்ந்துக்கொண்டிருப்பதை நீர் பார்க்கிறீர்.
எரேமியா 32 : 25 (ERVTA)
25 “எனது கர்த்தராகிய ஆண்டவரே, அத்தீயச் செயல்கள் எல்லாம் நடந்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் நீர் இப்பொழுது, ‘எரேமியா, வெள்ளியால் வயலை வாங்கு, வாங்கும்போது சிலரைச் சாட்சியாக வைத்துக்கொள்’ என்று சொல்கிறீர். பாபிலோனியர் படை இந்நகரைக் கைப்பற்ற தயாராக இருக்கும்போது நீர் எனக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறீர். இவ்வாறு எனது பணத்தை நான் ஏன் வீணாக்க வேண்டும்?”
எரேமியா 32 : 26 (ERVTA)
பிறகு கர்த்தரிடமிருந்து எரேமியாவிற்குச் வார்த்தை வந்தது.
எரேமியா 32 : 27 (ERVTA)
“எரேமியா, நானே கர்த்தர். பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் நான் தேவன். எரேமியா, என்னால் முடியாதது ஒன்றுமில்லை என்பது உனக்குத் தெரியும்”
எரேமியா 32 : 28 (ERVTA)
கர்த்தர் மேலும் கூறினார், “நான் விரைவில் எருசலேம் நகரைப் பாபிலோனியப் படைகளுக்கும் பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாருக்கும் கொடுப்பேன். படையானது நகரைக் கைப்பற்றும்.
எரேமியா 32 : 29 (ERVTA)
பாபிலோனியப் படை ஏற்கனவே எருசலேமைத் தாக்கிக்கொண்டிருக்கிறது. அவர்கள் விரைவில் நகருக்குள் நுழைந்து நெருப்பிடத் தொடங்குவார்கள். அவர்கள் இந்நகரத்தை எரித்துப்போடுவார்கள். நகரத்திற்குள் பல வீடுகள் உள்ளன. அவற்றின் உச்சியிலிருந்து எனக்குக் கோபமூட்டும்படி பொய்த் தெய்வமாகிய பாகாலுக்குப் பலிகளைக் கொடுத்தனர். அந்நிய தெய்வங்களின் விக்கிரகங்களுக்கும் அவர்கள் பானங்களின் காணிக்கைக் கொடுத்தனர் பாபிலோனிய படை அவ்வீடுகளை எரித்துப்போடும்.
எரேமியா 32 : 30 (ERVTA)
நான் இஸ்ரவேல் ஜனங்களையும் யூதாவின் ஜனங்களையும் கவனித்திருந்தேன். அவர்கள் செய்தது எல்லாம் தீயவையே. அவர்கள் இளமையிலிருந்துத் தீயவற்றைச் செய்திருந்தனர். இஸ்ரவேல் ஜனங்கள் என்னைக் கோபம்கொள்ளச் செய்திருக்கின்றனர். அவர்கள் தம் சொந்தக் கைகளால் செய்த விக்கிரகங்களைத் தொழுதுகொண்டு என்னைக் கோபம் அடையச் செய்தனர்” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.
எரேமியா 32 : 31 (ERVTA)
“எருசலேம் கட்டப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை, நகரத்திலுள்ள ஜனங்கள் என்னைக் கோபம் அடையச் செய்தனர். இந்நகரம் எனக்குக் கோபம் ஊட்டியிருக்கிறது. எனவே இதனை எனது பார்வையிலிருந்து விலக்குவேன்.
எரேமியா 32 : 32 (ERVTA)
நான் எருசலேமை அழிப்பேன். காரணம் இஸ்ரவேல் மற்றும் யூதாவின் ஜனங்கள் செய்திருக்கிற தீமைதான். ஜனங்களும் அவர்களின் அரசர்களும் தலைவர்களும் ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் யூதா மற்றும் எருசலேம் ஜனங்களும் என அனைவரும் என்னைக் கோபமடையச் செய்தனர்.
எரேமியா 32 : 33 (ERVTA)
“அந்த ஜனங்கள் உதவிக்காக என்னிடம் வந்திருக்கவேண்டும். ஆனால், அவர்கள் எனக்கு முதுகைக் காட்டினார்கள். நான் அவர்களுக்குக் கற்பிக்க மீண்டும் மீண்டும் முயன்றேன். ஆனால் அவர்கள் என்னை கவனிக்கவேயில்லை. நான் அவர்களைத் திருத்த முயன்றேன். ஆனால் அவர்கள் என்னை கவனிக்கவே இல்லை.
எரேமியா 32 : 34 (ERVTA)
அந்த ஜனங்கள் தம் விக்கிரகங்களைச் செய்திருக்கின்றனர். நான் அவற்றை வெறுக்கிறேன். எனது நாமத்தால் அழைக்கப்படுகிற ஆலயத்தில் அவர்கள் அந்த விக்கிரகங்களை வைத்தனர். இவ்வாறு அவர்கள் எனது ஆலயத்தைத் ‘தீட்டுப்படுத்தினார்கள்.’
எரேமியா 32 : 35 (ERVTA)
“பென்இன்னோமுடைய பள்ளத்தாக்கில் அந்த ஜனங்கள் பொய்த் தெய்வமாகிய பாகாலுக்கு மேடைகளைக் கட்டினார்கள். அவர்கள் அந்த தொழுகை இடங்களைக் கட்டினார்கள். எனவே அவர்கள் தம் மகன்களையும் மகள்களையும் மோளேக்கு என்ற பொய்த் தெய்வத்திற்கு குழந்தைப் பலியாக கொடுத்தனர். இப்பயங்கரமான காரியங்களைச் செய்யும்படி நான் கட்டளையிடவில்லை. நான் யூதாவின் ஜனங்கள் இத்தகைய பயங்கரமான செயலைச் செய்ய வேண்டும் என்று என்றைக்கும் நினைத்ததுக்கூட இல்லை.
எரேமியா 32 : 36 (ERVTA)
“ஜனங்களாகிய நீங்கள், ‘பாபிலோன் அரசன் எருசலேமைக் கைப்பற்றுவான். அவன் பட்டயங்கள், பசி, பயங்கரமான நோய்களைப் பயன்படுத்தி நகரைத் தோற்கடித்துவிடுவான்’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்கிறார்,
எரேமியா 32 : 37 (ERVTA)
‘இஸ்ரவேல் மற்றும் யூதாவின் ஜனங்கள் தங்கள் நாட்டைவிட்டு போகும்படி நான் வற்புறுத்தினேன். அந்த ஜனங்களோடு நான் கோபமாக இருந்தேன். ஆனால், நான் அவர்களை மீண்டும் இந்த இடத்திற்குக் கொண்டு வருவேன். நான் எங்கே போகும்படி வற்புறுத்தினேனோ அங்கே அவர்களை மீண்டும் சேகரிப்பேன். இந்த இடத்திற்கு நான் மீண்டும் கொண்டு வருவேன். அவர்களை சமாதானத்தோடும் பாதுகாப்போடும் வாழவிடுவேன்.
எரேமியா 32 : 38 (ERVTA)
இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்கள் எனது ஜனங்கள் ஆவார்கள். நான் அவர்களது உண்மையாக தேவன் ஆவேன்.
எரேமியா 32 : 39 (ERVTA)
நான் அவர்கள் ஒரே ஜனங்களாக இருப்பதற்கான ஆசையைக் கொடுப்பேன். அவர்களுக்கு ஒரே நோக்கம் இருக்கும். தம் வாழ்நாள் முழுவதும் என்னை உண்மையாக வழிபட விரும்புவார்கள். அவர்கள் உண்மையாகவே அதைச் செய்ய விரும்புவார்கள். அவர்கள் பிள்ளைகளும் அவ்வாறே செய்வார்கள்.
எரேமியா 32 : 40 (ERVTA)
“ ‘நான் இஸ்ரவேல் மற்றும் யூதாவின் ஜனங்களோடு ஒரு உடன்படிக்கைச் செய்வேன். இந்த உடன்படிக்கை என்றென்றும் இருக்கும். இந்த உடன்படிக்கையில் நான் அந்த ஜனங்களிடம் இருந்து என்றென்றும், திரும்பமாட்டேன். நான் எப்பொழுதும் அவர்களுக்கு நல்லவனாக இருப்பேன். அவர்கள் என்னை மதிக்க விரும்பும்படிச் செய்வேன். பிறகு அவர்கள் என்னிடமிருந்து விலகமாட்டார்கள்.
எரேமியா 32 : 41 (ERVTA)
அவர்கள் என்னை மகிழ்ச்சி அடையும்படிச் செய்வார்கள். நான் அவர்களுக்கு நன்மை செய்வதில் மகிழ்வேன். நான் அவர்களை இந்த தேசத்தில் உறுதியாகவே நட்டு வளரும்படிச் செய்வேன். நான் இதனை எனது மனப்பூர்வமாகவும் ஆத்மபூர்வமாகவும் செய்வேன்.’ ”
எரேமியா 32 : 42 (ERVTA)
இதுதான் கர்த்தர் சொல்கிறது: “இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களுக்கு நான் இந்த பெரும் அழிவைக் கொண்டு வந்திருக்கிறேன். அதே வழியில் அவர்களுக்கு நான் நன்மையை செய்வேன். நான் அவர்களுக்கு நன்மை செய்வதாக உறுதி கூறுகிறேன்.
எரேமியா 32 : 43 (ERVTA)
ஜனங்களாகிய நீங்கள் கூறுகிறீர்கள், ‘இத்தேசம் ஒரு காலியான வனாந்தரம். இங்கே ஜனங்களோ மிருகங்களோ இல்லை. பாபிலோனிய படை இந்நாட்டை அழித்துவிட்டது.’ ஆனால் எதிர்காலத்தில், ஜனங்கள் மீண்டும் ஒருமுறை வயல்களை விலைக்கு வாங்குவார்கள்.
எரேமியா 32 : 44 (ERVTA)
ஜனங்கள் தம் பணத்தைப் பயன்படுத்தி வயல்களை வாங்குவார்கள். அவர்கள் கையெழுத்திட்டு தம் உடன்படிக்கையை முத்திரையிடுவார்கள். ஜனங்களது பத்திரங்களுக்கு ஜனங்கள் சாட்சி ஆவார்கள். ஜனங்கள் மீண்டும் இத்தேசத்தில் வயல்களை வாங்குவார்கள். இது பென்யமீன் கோத்திரம் வாழ்கிற இடம். எருசலேமைச் சுற்றியுள்ள இடங்களில் அவர்கள் வயலை வாங்குவார்கள். யூதா தேசத்திலுள்ள நகரங்களிலும் மலை நாட்டிலும் வடக்கு மலை அடிவாரங்களிலும் தென் வனாந்தரப் பகுதிகளிலும் அவர்கள் வயல்களை வாங்குவர். அது நிகழும். ஏனென்றால், நான் உங்கள் ஜனங்களை மீண்டும் இங்கே கொண்டு வருவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44