ஓசியா 9 : 1 (ERVTA)
நாடு கடத்தலின் துக்கம் இஸ்ரவேலே, பிற நாடுகள் செய்வது போன்று விழா கொண்டாடாதே. மகிழ்ச்சியாய் இராதே. நீ ஒரு வேசியைப்போன்று நடந்து உனது தேவனை விட்டு விலகினாய், தானியம் அடிக்கிற எல்லாக் களங்களிலும் நீ பாலின உறவு பாவத்தைச் செய்தாய்.
ஓசியா 9 : 2 (ERVTA)
ஆனால் தானியம் அடிக்கிற களத்தில் உள்ள தானியம் இஸ்ரவேலுக்குப் போதுமான உணவாக இருக்காது. இஸ்ரவேலுக்குப் போதுமான திராட்சைரசமும் இருக்காது.
ஓசியா 9 : 3 (ERVTA)
இஸ்ரவேலர்கள் கர்த்தருடைய நாட்டில் தங்கமாட்டார்கள். எப்ராயீம் எகிப்திற்குத் திரும்புவான். அசீரியாவில் அவர்கள் உண்ணக்கூடாத உணவை உண்பார்கள்.
ஓசியா 9 : 4 (ERVTA)
இஸ்ரவேலர்கள் கர்த்தருக்குத் திராட்சைரசத்தைப் பானங்களின் காணிக்கையாக அளிப்பதில்லை. அவருக்கு அவர்கள் பலிகள் கொடுப்பதுமில்லை. அவர்கள் கொடுக்கிற பலிகள் மரித்தவர் வீட்டில் கொடுக்கிற உணவைப்போலிருக்கும். அதைச் சாப்பிடுகிறவர்கள் அசுத்தமடைவார்கள். அவர்கள் அப்பம் கர்த்தருடைய ஆலயத்திற்குள் போகாது. அவர்களே அதை உண்ண வேண்டியதிருக்கும்.
ஓசியா 9 : 5 (ERVTA)
அவர்கள் (இஸ்ரவேலர்கள்) கர்த்தருடைய ஓய்வு நாட்கள் அல்லது பண்டிகைகளைக் கொண்டாட முடியாதவர்களாக இருப்பார்கள்.
ஓசியா 9 : 6 (ERVTA)
இஸ்ரவேலர்கள் போய்விட்டார்கள். ஏனெனில் அவர்களுடைய விரோதி அவர்களுக்குண்டான எல்லாவற்றையும் தானாகவே எடுத்துச் சென்றுவிட்டான். ஆனால் எகிப்து அவர்களுடைய ஜனங்களை எடுத்துக்கொள்ளும். மெம்பிஸில் அவர்களைப் புதைப்பார்கள். அவர்களின் வெள்ளிப் பொக்கிஷங்கள் மேல் களைகள் வளரும். அவர்கள் வாழ்ந்த இடங்களில் முட்செடிகள் முளைக்கும்.
ஓசியா 9 : 7 (ERVTA)
இஸ்ரவேல் உண்மையான தீர்க்கதரிசிகளை ஏற்க மறுத்தது தீர்க்கதரிசி. “இஸ்ரவேலே, இவற்றைக் கற்றுக்கொள். தண்டனைக் காலம் வந்துவிட்டது. நீ செய்த பாவங்களுக்கு விலை செலுத்தவேண்டிய காலம் வந்திருக்கிறது” என்கிறார். ஆனால் இஸ்ரவேல் ஜனங்களோ, “தீர்க்கதரிசி ஒரு முட்டாள். தேவனுடைய ஆவியோடு இருக்கிற இம்மனிதன் பைத்தியக்காரன்” என்று கூறுகிறார்கள். தீர்க்கதரிசி. “நீ உனது கொடிய பாவங்களுக்காகத் தண்டிக்கப்படுவாய். நீ உனது வெறுப்பிற்காகத் தண்டிக்கப்படுவாய்” என்று சொல்கிறார்.
ஓசியா 9 : 8 (ERVTA)
தேவனும் தீர்க்கதரிசியும் எப்பிராயீமை காவல் காக்கிற காவலர்களைப் போன்றவர்கள். ஆனால் வழியெங்கும் பல கண்ணிகள் உள்ளன. ஜனங்கள் தீர்க்கதரிசியை தேவனுடைய வீட்டில் கூட வெறுக்கின்றனர்.
ஓசியா 9 : 9 (ERVTA)
இஸ்ரவேலர்கள் கிபியாவின் நாட்களைப் போன்று அழிவின் ஆழத்திற்குச் சென்றுவிட்டார்கள். கர்த்தர் இஸ்ரவேலர்களின் பாவங்களை நினைவுகொள்வார். அவர் அவர்களது பாவங்களைத் தண்டிப்பார்.
ஓசியா 9 : 10 (ERVTA)
இஸ்ரவேல் அதன் விக்கிரக ஆராதனையால் சேதமடைந்திருக்கிறது நான் இஸ்ரவேலரைக் கண்டுக்கொண்டபோது, அவர்கள் வனாந்திரத்தில் இருக்கும் புதிய திராட்சைப்பழத்தைப்போன்று இருந்தார்கள். அத்திமரத்தில் பருவகாலத்தில் முதல் முதலாகப் பழுத்தப் பழங்களைப் போன்று இருந்தார்கள். ஆனால் அவர்கள் அதன்பிறகு பாகால்பேயேருக்கு வந்தார்கள். அவர்கள் மாறினார்கள். நான் அவர்களை அழுகிப்போன பழங்களை வெட்டுவதைப் போன்று, (அழிப்பதுபோன்று) வெட்ட வேண்டியதாயிருந்தது. அவர்கள் அவர்களால் நேசிக்கப்படுகிற பயங்கரமான பொருட்களை (அந்நிய தெய்வங்கள்) போன்று ஆனார்கள்.
ஓசியா 9 : 11 (ERVTA)
இஸ்ரவேலர்களுக்குக் குழந்தைகள் இருக்காது ஒரு பறவையைப் போன்று, எப்பிராயீமின் மகிமை பறந்துபோகும். இனிமேல் கர்ப்பமுறுதல் இல்லாமல் போகும். பிறப்புகளும் பிள்ளைகளும் இல்லாமல் போகும்.
ஓசியா 9 : 12 (ERVTA)
ஆனால் இஸ்ரவேலர்கள் தம் பிள்ளைகளை வளர்த்தாலும் அது அவர்களுக்கு உதவாது. நான் அவர்களிடமிருந்து அவர்களது பிள்ளைகளை எடுத்துக்கொள்வேன். நான் அவர்களை விட்டுவிடுவேன். அவர்களுக்குத் தொல்லைகளைத் தவிர வேறு எதுவும் இருக்காது.
ஓசியா 9 : 13 (ERVTA)
எப்பிராயீம் தன் குழந்தைகைளைக் கண்ணிகளுக்கு வழிநடத்திச் செல்வதை நான் பார்க்க முடிகிறது. எப்பிராயீம் தன் பிள்ளைகளை கொலைக்காரர்களிடம் அழைத்து வருகிறான்.
ஓசியா 9 : 14 (ERVTA)
கர்த்தாவே, நீர் அவர்களுக்குக் கொடுப்பதைக் கொடும். நீர் அவர்களுக்குக் குழந்தைகளை இழக்கிற கர்ப்பத்தையும் பால்கொடுக்க முடியாத முலைகளையும் கொடும்.
ஓசியா 9 : 15 (ERVTA)
அவர்கள் பொல்லாப்பு கில்காலில் இருக்கிறது. நான் அங்கே அவர்களை வெறுக்கத் தொடங்கினேன். நான் அவர்களை என் வீட்டை விட்டுப் போகும்படி வற்புறுத்துவேன். ஏனென்றால் அவர்கள் பொல்லாப்புகளைச் செய்துள்ளார்கள். நான் இனிமேல் அவர்களை நேசிக்கமாட்டேன். அவர்கள் தலைவர்கள் கலகக்காரர்கள். அவர்கள் எனக்கு எதிராகத் திரும்பியிருக்கின்றார்கள்.
ஓசியா 9 : 16 (ERVTA)
எப்பிராயீம் தண்டிக்கப்படுவான். அவர்கள் வேர் செத்துக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கு இனிமேல் குழந்தைகள் இருக்காது. அவர்கள் குழந்தைகள் பெறலாம். ஆனால் நான் அவர்களது உடலிலிருந்து வருகிற குழந்தைகளைக் கொல்வேன்.
ஓசியா 9 : 17 (ERVTA)
அந்த ஜனங்கள் என்னுடைய தேவன் சொல்வதைக் கேட்கமாட்டார்கள். எனவே அவர் அவர்கள் சொல்வதைக் கேட்க மறுப்பார். அவர்கள் வீடு இல்லாமல் தேசங்கள் முழுவதும் அலைந்து திரிவார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17