ஓசியா 6 : 1 (ERVTA)
கர்த்தரிடம் திரும்பி வருவதன் பலன்கள் “வா, நாம் கர்த்தரிடம் திரும்பிப் போவோம். அவர் நம்மைப் புண்படுத்தினார். ஆனால் அவர் நம்மைக் குணப்படுத்துவார். அவர் நம்மைக் காயப்படுத்தினார். ஆனால் அவர் நமக்குக் கட்டுகளைப் போடுவார்.
ஓசியா 6 : 2 (ERVTA)
இரண்டு நாட்களுக்குப் பிறகு நமக்கு அவர் திருப்பவும் உயிரைக் கொண்டுவருவார். அவர் மூன்றாவது நாள் நம்மை எழுப்புவார். பிறகு நாம் அவரருகில் வாழ முடியும்.
ஓசியா 6 : 3 (ERVTA)
கர்த்தரைப்பற்றி கற்றுக்கொள்வோம். கர்த்தரை அறிந்துக்கொள்ள மிகக் கடுமையாக முயல்வோம். அவர் வந்துக்கொண்டிருக்கிறார் என்பதை நாம் காலைநேரம் வந்துக்கொண்டிருக்கிறது என்பதைப் போன்று அறிகிறோம். கர்த்தர் நம்மிடம் பூமியை நனைக்க வரும் மழையைப்போன்று வருவார்.”
ஓசியா 6 : 4 (ERVTA)
ஜனங்கள் விசுவாசமற்றவர்கள் “எப்பிராயீமே. நான் உன்னை என்ன செய்வது? யூதா, நான் உன்னை என்ன செய்வது? உனது விசுவாசம் காலை மூடுபனியைப் போன்று உள்ளது. உனது விசுவாசத் தன்மை காலையில் மறையும் பனித்துளியைப் போன்று உள்ளது.
ஓசியா 6 : 5 (ERVTA)
நான் தீர்க்கதரிசிகளைப் பயன்படுத்தி ஜனங்களுக்காக சட்டங்களைச் செய்தேன். எனது கட்டளைகளால் ஜனங்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால் அந்த முடிவுகளிலிருந்து நன்மைகள் வரும்.
ஓசியா 6 : 6 (ERVTA)
ஏனென்றால் நான் பலிகளை அல்ல. விசுவாசமுள்ள அன்பையே விரும்புகிறேன். நான் ஜனங்கள் தகன பலிகளை கொண்டு வருவதையல்ல ஜனங்கள் தேவனை அறிந்துகொள்வதையே விரும்புகிறேன்.
ஓசியா 6 : 7 (ERVTA)
ஆனால் ஜனங்கள் ஆதாமைப்போன்று உடன்படிக்கையை உடைத்தார்கள் அவர்கள் தமது நாட்டில் எனக்கு விசுவாசம் இல்லாதவர்களாய் இருந்தார்கள்.
ஓசியா 6 : 8 (ERVTA)
கீலேயாத். தீமை செய்கிறவர்களின் நகரமாயிருக்கிறது. அங்கு ஜனங்கள் மற்றவர்களைத் தந்திரம் செய்து கொல்லுகிறார்கள்.
ஓசியா 6 : 9 (ERVTA)
வழிப்பறிக்காரர்கள் மறைந்திருந்து மற்றவர்களைத் தாக்கக் காத்திருக்கிறார்கள். அதைப் போலவே, சீகேமுக்குப் போகும் சாலையில் அவ்வழியில் செல்லும் ஜனங்களைத் தாக்க ஆசாரியர்கள் காத்திருக்கின்றார்கள். அவர்கள் தீமைகளைச் செய்திருக்கிறார்கள்.
ஓசியா 6 : 10 (ERVTA)
நான் இஸ்ரவேல் நாட்டில் பயங்கரமானவற்றைப் பார்த்திருக்கிறேன். எப்பிராயீம் தேவனுக்கு விசுவாசம் இல்லாமல் போனான். இஸ்ரவேல் பாவத்தால் அழுக்கானது.
ஓசியா 6 : 11 (ERVTA)
யூதா, உனக்கும் அறுவடைகாலம் இருக்கிறது. நான் எனது ஜனங்களைச் சிறைமீட்டு வரும்போது இது நிகழும்”

1 2 3 4 5 6 7 8 9 10 11