ஆதியாகமம் 44 : 1 (ERVTA)
யோசேப்பின் தந்திரமான திட்டம் பிறகு யோசேப்பு வேலைக்காரர்களிடம்: “இவர்களின் பைகளில் எவ்வளவு தானியம் போட முடியுமோ அவ்வளவு போடுங்கள். அவர்களால் கொண்டுபோக முடிகிறவரை போடுங்கள். தானியத்தோடு அவர்களின் பணத்தையும் போட்டுவிடுங்கள்.
ஆதியாகமம் 44 : 2 (ERVTA)
இளைய சகோதரனின் பைக்குள் பணத்தோடு குறிப்பாக எனது வெள்ளிக் கோப்பையையும் போடுங்கள்” என்றான். வேலைக்காரர்களும் அவ்வாறே செய்தார்கள்.
ஆதியாகமம் 44 : 3 (ERVTA)
மறுநாள் அதிகாலையில் சகோதரர்களும் அவர்களின் கழுதைகளும் அவர்களின் நாட்டுக்குத் திரும்பி அனுப்பப்பட்டனர்.
ஆதியாகமம் 44 : 4 (ERVTA)
அவர்கள் புறப்பட்டுப் போனதும் அவன் வேலைக்காரர்களிடம் “போய் அவர்களைப் பின் தொடருங்கள். அவர்களை நிறுத்தி, ‘நாங்கள் நல்லபடியாக நடந்துகொண்டோம். நீங்கள் ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறீர்கள், எங்கள் எஜமானின் வெள்ளிக் கோப்பையை ஏன் திருடினீர்கள்?
ஆதியாகமம் 44 : 5 (ERVTA)
எங்கள் எஜமானர் அந்தக் கோப்பையில்தான் திராட்சைரசம் குடிப்பார். அவர் இதனைக் குறிகூறவும் பயன்படுத்துவார். நீங்கள் என்ன செய்தீர்களோ அது தவறு என்று கேளுங்கள்’ ” என்றான்.
ஆதியாகமம் 44 : 6 (ERVTA)
வேலைக்காரர்களும் அவ்வாறே செய்து, யோசேப்பு சொல்லச் சொன்னதைச் சொன்னார்கள்.
ஆதியாகமம் 44 : 7 (ERVTA)
ஆனால் சகோதரர்களோ வேலைக்காரர்களிடம், “ஏன் இவ்வாறு ஆளுநர் சொன்னார்? நாங்கள் எதுவும் அவ்வாறு செய்யவில்லையே.
ஆதியாகமம் 44 : 8 (ERVTA)
எங்கள் பைகளில் கண்டுபிடித்த பணத்தைத் திரும்பக்கொண்டு வந்திருக்கிறோம். நாங்கள் ஏன் உங்கள் எஜமானரின் வெள்ளியையும் தங்கத்தையும் திருடுகிறோம்?
ஆதியாகமம் 44 : 9 (ERVTA)
எங்களில் எவராவது ஒருவரது பையில் அந்த வெள்ளிக் கோப்பை இருக்குமானால் அவன் சாகட்டும். நீங்கள் அவனைக் கொல்லுங்கள். நாங்கள் உங்கள் அடிமையாகிறோம்” என்றனர்.
ஆதியாகமம் 44 : 10 (ERVTA)
வேலைக்காரனோ, “நீங்கள் சொல்வது போலவே செய்வோம். ஆனால் அந்த மனிதனை நான் கொல்லமாட்டேன். அந்த வெள்ளிக் கோப்பை யாரிடம் உள்ளதோ அவன் எங்கள் அடிமையாவான். மற்றவர்களை விட்டுவிடுவேன்” என்றான்.
ஆதியாகமம் 44 : 11 (ERVTA)
பென்யமீன் சிக்கிக்கொள்ளுதல் ஒவ்வொருவரும் தங்கள் பையை விரைவாக அவிழ்த்து தானியத்தைத் தரையில் கொட்டினர்.
ஆதியாகமம் 44 : 12 (ERVTA)
வேலைக்காரன் ஒவ்வொரு பையிலும் தேடினான். மூத்தவனிலிருந்து இளையவன் வரை என வரிசையாகத் தேடினான். அவன் பென்யமீனின் பையில் கோப்பையைக் கண்டு பிடித்தான்.
ஆதியாகமம் 44 : 13 (ERVTA)
சகோதரர்கள் மிகவும் துக்கப்பட்டனர். தம் துயரத்தை வெளிப்படுத்தும்படி தங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொண்டனர். தங்கள் பைகளைக் கழுதைகளின்மீது வைத்துக்கொண்டு நகரத்திற்குத் திரும்பினார்கள்.
ஆதியாகமம் 44 : 14 (ERVTA)
யூதாவும் பிற சகோதரர்களும் யோசேப்பின் வீட்டிற்கு வந்தனர். யோசேப்பு அங்கேயே இருந்தான். அவர்கள் அவனுக்கு முன்னால் விழுந்து வணங்கினார்கள்.
ஆதியாகமம் 44 : 15 (ERVTA)
யோசேப்பு, “ஏன் இவ்வாறு செய்தீர்கள்? நான் இரகசியங்களை அறிந்துகொள்ள சிறப்பான வழிகள் உண்டு என்று உங்களுக்குத் தெரியாதா? என்னைத் தவிர வேறு எவராலும் சிறப்பாகச் செய்ய முடியாது!” என்றான்.
ஆதியாகமம் 44 : 16 (ERVTA)
யூதா, ஐயா, “நாங்கள் சொல்வதற்கு எதுவுமில்லை. விளக்கிச் சொல்லவும் வழியில்லை. நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க முடியவில்லை. நாங்கள் எப்போதோ செய்த தவறுக்கு இப்போது தேவன் தண்டிக்கிறார். நாங்களும் பென்யமீனும் இனி உங்கள் அடிமைகள்” என்றான்.
ஆதியாகமம் 44 : 17 (ERVTA)
ஆனால் யோசேப்போ, “உங்கள் அனைவரையும் அடிமையாக்க நான் விரும்பவில்லை. என் கோப்பையைத் திருடியவனை மட்டுமே அடிமையாக்குவேன். உங்கள் தந்தையிடம் நீங்கள் அனைவரும் சமாதானமாகத் திரும்பிப் போகலாம்” என்றான்.
ஆதியாகமம் 44 : 18 (ERVTA)
யூதா பென்யமீனுக்காக வாதாடுதல் யூதா யோசேப்பிடம் போய், “ஐயா! எங்களை வெளிப்படையாகப் பேச விடுங்கள். எங்களிடம் கோபப்படாதீர்கள். நீங்கள் பார்வோன் மன்னரைப் போன்றவர் என்பதை அறிவோம்.
ஆதியாகமம் 44 : 19 (ERVTA)
முன்பு இங்கு வந்தபோது ‘உங்களுக்குத் தந்தையோ சகோதரரோ இருக்கிறார்களா’ என்று கேட்டீர்கள்.
ஆதியாகமம் 44 : 20 (ERVTA)
நாங்கள் எங்களுக்குத் தந்தை இருக்கிறார், அவர் முதியவர். இளைய சகோதரன் இருக்கிறான். அவன் எங்கள் தந்தையின் முதிய வயதில் பிறந்ததால் அவனைப் பெரிதும் நேசிக்கிறார். அவனோடு கூடப்பிறந்தவன் மரித்துப் போனான். இவன் ஒருவன் தான் அத்தாயின் மகன்களில் உயிரோடு இருக்கிறான். எனவே எங்கள் தந்தை இவனைப் பெரிதும் நேசிக்கிறார் என்றோம்.
ஆதியாகமம் 44 : 21 (ERVTA)
பிறகு நீங்கள், ‘அவனையும் அழைத்துக்கொண்டு வாருங்கள். நான் அவனைப் பார்க்க விரும்புகிறேன்’ என்றீர்கள்.
ஆதியாகமம் 44 : 22 (ERVTA)
அதற்கு நாங்கள், ‘அவனால் வரமுடியாது அவனைத் தந்தை விடமாட்டார். அவனைப் பிரிந்தால் எங்கள் தந்தை மரித்துபோவார்’ என்றோம்.
ஆதியாகமம் 44 : 23 (ERVTA)
ஆனால் நீங்களோ எங்களிடம், ‘நீங்கள் அவனை அழைத்துக்கொண்டு வரவேண்டும் இல்லாவிட்டால் இனிமேல் தானியம் தரமுடியாது’ என்றீர்கள்.
ஆதியாகமம் 44 : 24 (ERVTA)
அதனால் நாங்கள் எங்கள் தந்தையிடம் போய் நீங்கள் சொன்னதையெல்லாம் சொன்னோம்.
ஆதியாகமம் 44 : 25 (ERVTA)
“இறுதியில் எங்கள் தந்தை, ‘போய் இன்னும் தானியம் வாங்கிக்கொண்டு வாருங்கள்’ என்றார்.
ஆதியாகமம் 44 : 26 (ERVTA)
நாங்கள் எங்கள் தந்தையிடம் ‘நாங்கள் எங்கள் இளைய சகோதரன் இல்லாமல் போகமாட்டோம். ஆளுநர் இவனைப் பார்க்காவிட்டால் தானியம் தர முடியாது என்று கூறியிருக்கிறார்’ என்றோம்.
ஆதியாகமம் 44 : 27 (ERVTA)
பிறகு என் தந்தை, ‘என் மனைவி ராகேல் எனக்கு இரண்டு மகன்களைக் கொடுத்தாள்.
ஆதியாகமம் 44 : 28 (ERVTA)
ஒரு மகனை வெளியே அனுப்பினேன். அவனைக் காட்டு மிருகங்கள் கொன்றுவிட்டன. அவனை இன்றுவரை காணவில்லை.
ஆதியாகமம் 44 : 29 (ERVTA)
அடுத்த மகனையும் நீங்கள் அழைத்துப் போய் அவனுக்கு ஏதாவது நடந்தால் நான் மரணமடையுமளவுக்கு வருத்தமடைவேன்’ என்றார்.
ஆதியாகமம் 44 : 30 (ERVTA)
இப்போதும் எங்களின் இளைய சகோதரன் இல்லாமல் நாங்கள் போகும்பொழுது என்ன நடக்கும் என்பதைக் கற்பனை செய்யுங்கள். அவனே எங்கள் தந்தையின் வாழ்வில் மிக முக்கியமானவன்.
ஆதியாகமம் 44 : 31 (ERVTA)
அவன் எங்களுடன் இல்லை என்பதை எங்கள் தந்தை அறிந்தால் அவர் மரித்துவிடுவார். மேலும் அது எங்களுடைய தவறாகும். நாங்கள் எங்கள் தந்தையை மிகக் கவலைகொண்ட மனிதராக அவரது கல்லறைக்கு அனுப்புவோம்!
ஆதியாகமம் 44 : 32 (ERVTA)
“நான் என் தந்தையிடம் இவனுக்காக பொறுப் பேற்று வந்துள்ளேன். ‘நான் இவனைத் திரும்ப அழைத்துக்கொண்டு வராவிட்டால் என் வாழ்க்கை முழுவதும் என்னைப் பழிக்கலாம்’ என்றேன்.
ஆதியாகமம் 44 : 33 (ERVTA)
எனவே நான் உங்களை கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். இவனை இவர்களோடு அனுப்பி வையுங்கள். நான் இங்கே உங்களுக்கு அடிமையாக இருக்கிறேன்.
ஆதியாகமம் 44 : 34 (ERVTA)
இவன் இல்லாமல் நான் என் தந்தையிடம் போகமாட்டேன். என் தந்தைக்கு என்ன நேருமோ என்று எனக்கு அச்சமாக இருக்கிறது” என்றான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34