ஆதியாகமம் 22 : 1 (ERVTA)
ஆபிரகாம், தேவனால் சோதிக்கப்படுதல் இதற்குப் பிறகு, தேவன் ஆபிரகாமின் விசுவாசத்தைச் சோதிக்க விரும்பினார். எனவே தேவன் “ஆபிரகாமே” என்று அழைத்தார். ஆபிரகாமும், “நான் இங்கே இருக்கிறேன்” என்றான்.
ஆதியாகமம் 22 : 2 (ERVTA)
தேவன் அவனிடம், “உன்னுடைய அன்பிற்குரிய, ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு மோரியா தேசத்திற்குச் செல். அங்கு உன் மகனை எனக்கு தகன பலியாகக் கொடு. எந்த இடத்தில் அதைச் செய்ய வேண்டுமென்று நான் உனக்குச் சொல்வேன்” என்றார்.
ஆதியாகமம் 22 : 3 (ERVTA)
காலையில் ஆபிரகாம் எழுந்து தனது கழுதையைத் தயார் செய்தான். ஈசாக்கையும் இரண்டு வேலைக்காரர்களையும் அழைத்துக்கொண்டான். பலிக்கு விறகுகளையும் எடுத்துக்கொண்டான். தேவன் போகச் சொன்ன இடத்திற்கு அவர்கள் போனார்கள்.
ஆதியாகமம் 22 : 4 (ERVTA)
அவர்கள் மூன்று நாட்கள் பயணம் செய்தபின் தொலைவில் தேவன் குறிப்பிட்ட இடம் தெரிந்தது.
ஆதியாகமம் 22 : 5 (ERVTA)
ஆபிரகாம் தனது வேலைக்காரர்களிடம், “கழுதையோடு நீங்கள் இங்கேயே தங்கியிருங்கள், நானும் என் மகனும் அவ்விடத்திற்கு தொழுதுகொள்ளப் போகிறோம். பிறகு உங்களிடம் திரும்பி வருவோம்” என்றான்.
ஆதியாகமம் 22 : 6 (ERVTA)
பலிக்கான விறகுகளை எடுத்து மகனின் தோள் மீது வைத்தான். ஆபிரகாம் கத்தியையும், நெருப்பையும் எடுத்துக்கொண்டு, அவனும் அவனது மகனும் சேர்ந்து போனார்கள்.
ஆதியாகமம் 22 : 7 (ERVTA)
ஈசாக்கு தன் தந்தையைப் பார்த்து, “அப்பா” என்று அழைத்தான். ஆபிரகாமும், “என்ன மகனே” எனக் கேட்டான். ஈசாக்கு அவனிடம், “விறகும், நெருப்பும் நம்மிடம் உள்ளது. பலியிடுவதற்கான ஆட்டுக்குட்டி எங்கே?” என்று கேட்டான்.
ஆதியாகமம் 22 : 8 (ERVTA)
அதற்கு ஆபிரகாம், “தேவனே தனக்கான பலிக்குரிய ஆட்டுக்குட்டியைக் கொடுப்பார் மகனே” என்று பதில் சொன்னான். ஆபிரகாமும் அவனது மகனும்
ஆதியாகமம் 22 : 9 (ERVTA)
தேவன் போகச் சொன்ன இடத்திற்கு போய்ச் சேர்ந்தனர். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை கட்டி அதின்மேல் விறகுகளை அடுக்கினான். பின் தன் மகன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் கிடத்தினான்.
ஆதியாகமம் 22 : 10 (ERVTA)
பிறகு ஆபிரகாம் கத்தியை எடுத்து மகனை வெட்டுவதற்குத் தயாரானான்.
ஆதியாகமம் 22 : 11 (ERVTA)
அப்போது கர்த்தருடைய தூதன் ஆபிரகாமைத் தடுத்து நிறுத்தி, “ஆபிரகாமே ஆபிரகாமே” என்று அழைத்தார். ஆபிரகாம், “நான் இங்கே இருக்கிறேன்” என்று பதிலளித்தான்.
ஆதியாகமம் 22 : 12 (ERVTA)
தேவதூதன்: “உனது மகனைக் கொல்ல வேண்டாம். அவனை எவ்விதத்திலும் காயப்படுத்த வேண்டாம். நீ தேவனை மதிப்பவன் என்றும், கீழ்ப்படிபவன் என்பதையும் நான் தெரிந்துகொண்டேன். நீ எனக்காக உன் ஒரே ஒரு மகனையும் கொல்லத் தயாராக உள்ளாய் என்பதையும் தெரிந்துகொண்டேன்” என்றார்.
ஆதியாகமம் 22 : 13 (ERVTA)
ஆபிரகாம் தொலைவில் தன் கண் முன் ஒரு ஆட்டுக் கடாவைக் கண்டான். அதன் கொம்புகள் புதரில் சிக்கிக்கொண்டிருந்தன. ஆபிரகாம் அதனை விடுவித்து தேவனுக்குப் பலியிட்டான். ஆபிரகாமின் மகன் காப்பாற்றப்பட்டான்.
ஆதியாகமம் 22 : 14 (ERVTA)
அதனால் ஆபிரகாம் அந்த இடத்திற்கு, “யேகோவா யீரே”* யேகோவா யீரே “கர்த்தர் பார்க்கிறார்” அல்லது “கர்த்தர் கொடுக்கிறார்” என்று அர்த்தம். என்று பெயரிட்டான். “கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும்” என்று இன்றைக்கும் கூட ஜனங்கள் கூறுகின்றனர்.
ஆதியாகமம் 22 : 15 (ERVTA)
கர்த்தருடைய தூதன் இரண்டாவது முறையும் வானத்திலிருந்து ஆபிரகாமை அழைத்து,
ஆதியாகமம் 22 : 16 (ERVTA)
“எனக்காக உன் மகனைக் கொல்லத் தயாராக இருந்தாய், இவன் உனது ஒரே மகன். இதை எனக்காகச் செய்தாய்.
ஆதியாகமம் 22 : 17 (ERVTA)
கர்த்தராகிய நான் உண்மையாகவே உன்னை ஆசீர்வதிப்பேன். வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப்போன்று நான் உன் சந்ததியைப் பெருகச் செய்வேன். கடற்கரையிலுள்ள மணலைப் போன்று எண்ணற்ற வாரிசுகளையும் தருவேன். உனது ஜனங்கள் தங்கள் பகைவர்களை வெல்லுவார்கள்.
ஆதியாகமம் 22 : 18 (ERVTA)
பூமியிலுள்ள ஒவ்வொரு நாடும் உனது சந்ததி மூலம் ஆசீர்வாதத்தைப்பெறும். நீ எனக்குக் கீழ்ப்படிந்தாய். அதனால் இதை நான் உனக்குச் செய்வேன்” என்றார்.
ஆதியாகமம் 22 : 19 (ERVTA)
பிறகு, ஆபிரகாம் தன் வேலைக்காரர்கள் இருக்குமிடத்திற்குச் சென்றான், அவர்கள் அனைவரும் பெயெர்செபாவுக்குத் திரும்பினார்கள். ஆபிரகாம் அங்கேயே தங்கியிருந்தான்.
ஆதியாகமம் 22 : 20 (ERVTA)
இவை எல்லாம் நடந்து முடிந்த பிறகு ஆபிரகாமுக்கு ஒரு செய்தி வந்தது. அதில், “உனது சகோதரன் நாகோருக்கும் அவனது மனைவி மில்காளுக்கும் குழந்தைகள் பிறந்துள்ளனர்.
ஆதியாகமம் 22 : 21 (ERVTA)
முதல் மகனின் பெயர் ஊத்ஸ். இரண்டாவது மகனின் பெயர் பூஸ். மூன்றாவது மகனின் பெயர் கேமுவேல். இவன் ஆராமின் தந்தை.
ஆதியாகமம் 22 : 22 (ERVTA)
மேலும் கேசேத், ஆசோ, பில்தாஸ், இத்லாப், பெத்துவேல் என்பவர்களும் உள்ளனர். பெத்துவேல் ரெபெக்காளைப் பெற்றான்” என்று கூறப்பட்டிருந்தது.
ஆதியாகமம் 22 : 23 (ERVTA)
அந்த எட்டு பேரை மில்க்காள் ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோருக்குப் பெற்றாள். நாகோர் ஆபிரகாமின் சகோதரன்.
ஆதியாகமம் 22 : 24 (ERVTA)
ரேயுமாள் என்ற அவனது வேலைக்காரி தேபா, காகாம், தாகாஸ், மாகா என்பவர்களைப் பெற்றாள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24