எசேக்கியேல் 36 : 1 (ERVTA)
இஸ்ரவேல் நாடு மீண்டும் கட்டப்படும் “மனுபுத்திரனே, எனக்காக இஸ்ரவேல் மலைகளிடம் பேசு. கர்த்தருடைய வார்த்தையைக் கேட்குமாறு இஸ்ரவேல் மலைகளிடம் கூறு.
எசேக்கியேல் 36 : 2 (ERVTA)
கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார் என்று அவர்களிடம் கூறு: ‘பகைவர்கள் உனக்கு விரோதமாகத் தீயவற்றைச் சொன்னார்கள். அவர்கள் சொன்னார்கள்: ஆ, ஆ! இஸ்ரவேலின் பழங்காலத்து மலைகள் எங்கள் வசமாகும்!’
எசேக்கியேல் 36 : 3 (ERVTA)
“எனக்காக இஸ்ரவேல் மலைகளிடம் பேசு. கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார் என்று அவர்களிடம் சொல்: ‘பகைவர்கள் உன் நகரங்களை அழித்தனர். அவர்கள் உன்னைச் சுற்றிலும் எல்லாத் திசைகளிலும் நின்று தாக்கினார்கள். அவர்கள் இதனைச் செய்தனர். எனவே நீ பிற நாடுகளுக்கு உரியவனானாய். பிறகு ஜனங்கள் உன்னைப்பற்றி பேசி அவதூறு உரைத்தனர்.’ ”
எசேக்கியேல் 36 : 4 (ERVTA)
எனவே, இஸ்ரவேல் மலைகளே, எனது கர்த்தரும் ஆண்டவருமானவரின் வார்த்தையைக் கேளுங்கள்! கர்த்தரும் ஆண்டவருமானவர் கொள்ளையடிக்கப்பட்டு, சுற்றியுள்ள நாடுகளால் பரிகாசம் செய்யப்பட்ட மலைகளுக்கும் குன்றுகளுக்கும், ஓடைகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும், பாழாக்கப்பட்ட இடங்களுக்கும் வெறுமையாய் விடப்பட்ட நகரங்களுக்கும் இவற்றைக் கூறுகிறார்.
எசேக்கியேல் 36 : 5 (ERVTA)
எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “நான் எனது பலமான உணர்ச்சிகளை எனக்காகப் பேச அனுமதிப்பேன்! நான், ஏதோமையும் மற்ற நாடுகளையும் என் கோபத்தை உணரச் செய்வேன். ஏதோம் ஜனங்கள் எனது நாட்டை அழிக்கும் நோக்கத்துடன் எடுத்துக்கொண்டனர். அவர்கள் அந்த நாட்டை வெறுப்பதில் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவர்கள் அந்நாட்டை அழிப்பதற்காக தமக்கே எடுத்துக் கொண்டனர்!”
எசேக்கியேல் 36 : 6 (ERVTA)
“எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: எனவே இஸ்ரவேலின் நாட்டிடம் எனக்காகப் பேசு. மலைகளுக்கும், குன்றுகளுக்கும், ஆறுகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும் சொல். கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார் என்று கூறு: ‘நான் என் எரிச்சலினாலும் உக்கிரத்தினாலும் பேசுவேன். ஏனென்றால், அந்நாடுகள் செய்த நிந்தையினால் துன்பப்பட்டீர்கள்.’ ”
எசேக்கியேல் 36 : 7 (ERVTA)
எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “உங்களைச் சுற்றிலும் இருக்கிற நாடுகள் அந்த நிந்தைகளுக்காக துன்பப்பட வேண்டும் என்று நானே வாக்களிக்கிறேன்!
எசேக்கியேல் 36 : 8 (ERVTA)
“ஆனால் இஸ்ரவேல் மலைகளே, நீங்கள் புதிய மரங்களை வளர்த்து என் இஸ்ரவேல் ஜனங்களுக்குப் பழங்களைக் கொடுப்பீர்கள். என் ஜனங்கள் விரைவில் திரும்பி வருவார்கள்.
எசேக்கியேல் 36 : 9 (ERVTA)
நான் உங்களோடு இருப்பேன். நான் உங்களுக்கு உதவுவேன். ஜனங்கள் உங்கள் மண்ணைப் பண்படுத்துவார்கள். ஜனங்கள் உங்களில் விதைகளை விதைப்பார்கள்.
எசேக்கியேல் 36 : 10 (ERVTA)
உங்களில் ஏராளமான ஜனங்கள் வாழ்வார்கள். இஸ்ரவேல் வம்சத்தார் முழுவதும் அங்கே வாழ்வார்கள். நகரங்களில் ஜனங்கள் குடியேற்றப்படுவார்கள். அழிந்து போன இடங்கள் புதிதாகக் கட்டப்படும்.
எசேக்கியேல் 36 : 11 (ERVTA)
நான் உங்களுக்குப் பல ஜனங்களையும், மிருகங்களையும் கொடுப்பேன். அவர்கள் மேலும் பெருகுவார்கள். முற்காலத்தில் இருந்ததுபோல, வாழ்வதற்காக ஜனங்களை இங்கு நான் கொண்டுவருவேன். நான் உங்களைத் தொடக்கத்தில் இருந்ததை விட சிறப்பாகச் செய்வேன். பின்னர் நான் கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
எசேக்கியேல் 36 : 12 (ERVTA)
ஆம், நான் என் ஜனங்கள் பலரையும் உன் நாட்டிற்கு, வழிநடத்துவேன். அவர்கள் உன்னை எடுத்துக்கொள்வார்கள். நீ அவர்களுக்கு உரியவளாவாய். நீ மீண்டும் என்றும் என் ஜனங்கள் மீது மரணத்தைக் கொண்டு வரமாட்டாய்.”
எசேக்கியேல் 36 : 13 (ERVTA)
எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “இஸ்ரவேல் பூமியே, ஜனங்கள் உன்னிடம் கெட்டவற்றைக் கூறுகிறார்கள். நீ உனது ஜனங்களை அழித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். நீ உனது பிள்ளைகளைச் மரிக்க கொடுத்தாய் என்று கூறுகிறார்கள்.
எசேக்கியேல் 36 : 14 (ERVTA)
நீ இனிமேல் ஜனங்களை அழிக்கமாட்டாய். நீ இனிமேல் உன் பிள்ளைகளை மரிக்க கொடுப்பதில்லை” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்:
எசேக்கியேல் 36 : 15 (ERVTA)
“நான் இனிமேல் பிறநாட்டார் உன்னை அவமானம் செய்யும்படிவிடமாட்டேன். நீ இனிமேல் அந்த ஜனங்களால் பாதிக்கப்படமாட்டாய். நீ அவர்களை இனிமேல் குழந்தை இல்லாமல் இருக்கும்படிச் செய்யமாட்டாய்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.
எசேக்கியேல் 36 : 16 (ERVTA)
கர்த்தர் அவரது சொந்த நல்ல நாமத்தைக் காத்துக்கொள்வார் பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்:
எசேக்கியேல் 36 : 17 (ERVTA)
“மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தார் தம் சொந்த நாட்டில் வாழ்ந்தார்கள். ஆனால் அவர்கள் அந்த நாட்டை தமது கெட்டச் செயல்களால் தீட்டுப்படுத்தினார்கள். எனக்கு அவர்கள் மாதவிலக்கால் தீட்டான பெண்ணைப் போன்று இருந்தார்கள்.
எசேக்கியேல் 36 : 18 (ERVTA)
அவர்கள் அந்த நாட்டில் ஜனங்களைக் கொன்றபோது இரத்தத்தை தரையில் சிந்தினார்கள். அவர்கள் அந்த நாட்டைத் தங்கள் அசுத்த விக்கிரகங்களால் தீட்டாக்கினார்கள். எனவே நான் எவ்வளவு கோபமாய் இருக்கிறேன் என்பதைக் காட்டினேன்.
எசேக்கியேல் 36 : 19 (ERVTA)
நான் பிற நாடுகளுக்குள்ளே அவர்களைக் சிதறடித்தேன். பல தேசங்களில் அவர்கள் தூற்றிப் போடப்பட்டார்கள். அவர்கள் செய்த கெட்ட செயல்களுக்காக நான் தண்டித்தேன்.
எசேக்கியேல் 36 : 20 (ERVTA)
அவர்கள் பிற நாடுகளுக்குச் சென்றனர். அவர்கள் அந்த நாடுகளிலும் என் நாமத்தைக் கெடுத்தார்கள். எப்படி? அந்நாடுகளில் உள்ளவர்கள் இவர்களைப் பற்றிப் பேசினார்கள். அவர்கள், ‘இவர்கள் கர்த்தருடைய ஜனங்கள். ஆனால் அவர்கள் அவரது நாட்டைவிட்டு வந்தார்கள். அதனால் கர்த்தரிடம் ஏதோ தவறு இருக்கவேண்டும்!’ என்று பேசினார்கள்.
எசேக்கியேல் 36 : 21 (ERVTA)
“இஸ்ரவேல் ஜனங்கள் அவர்கள் சிதறடிக்கப்பட்டிருந்த நாடுகளில் எனது பரிசுத்தமான நாமத்தை பாழாக்கினார்கள். நான் என் நாமத்திற்காக வருத்தப்பட்டேன்.
எசேக்கியேல் 36 : 22 (ERVTA)
எனவே, இஸ்ரவேல் வம்சத்தாரிடம், கர்த்தரும் ஆண்டவருமானவர் இவற்றைக் கூறுகிறார், என்று சொல்: ‘இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் எங்கெல்லாம் போனீர்களோ அங்கெல்லாம் என் பரிசுத்தமான நாமத்தைக் கெடுத்தீர்கள். இதனை நிறுத்த நான் சிலவற்றைச் செய்யப்போகிறேன். இஸ்ரவேலே நான் இதனை உனக்காகச் செய்யவில்லை. நான் இதனை எனது பரிசுத்தமான நாமத்திற்காகவே செய்வேன்.
எசேக்கியேல் 36 : 23 (ERVTA)
எனது பெரும் நாமம் உண்மையில் பரிசுத்தமானது என்பதை அந்த நாடுகளுக்குக் காட்டப்போகிறேன். நீங்கள் அந்நாடுகளில் என் நாமத்தைப் பாழாக்கீனீர்கள். ஆனால் நான் பரிசுத்தமானவர் என்பதை காட்டுவேன். நீங்கள் என் நாமத்தை மதிக்கும்படி செய்வேன். பிறகு அந்த நாட்டவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்’ ” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.
எசேக்கியேல் 36 : 24 (ERVTA)
தேவன் சொன்னார்: “நான் அந்நாடுகளிலிருந்து உங்களை வெளியே கொண்டுவந்து, ஒன்று சேர்த்து, உங்கள் சொந்த நாட்டிற்கு அழைத்து வருவேன்.
எசேக்கியேல் 36 : 25 (ERVTA)
பின்னர் நான் உங்கள் மேல் சுத்தமான தண்ணீரைத் தெளிப்பேன். நான் உங்களை சுத்தமாக்குவேன். நான் உங்களது எல்லா அசுத்தங்களையும் கழுவுவேன். நான் உங்களது பாவங்களாலும், அருவருப்பான விக்கிரகங்களாலும் வந்த அசுத்த்தையும் கழுவுவேன்.
எசேக்கியேல் 36 : 26 (ERVTA)
நான் உங்களில் புதிய ஆவியை வைத்து, உங்கள் சிந்தனை முறையையும் மாற்றுவேன். நான் உங்கள் உடலில் உள்ள கல் போன்ற இருதயத்தை எடுத்துவிட்டு மென்மையான மனித இருதயத்தைக் கொடுப்பேன்.
எசேக்கியேல் 36 : 27 (ERVTA)
நான் உங்களுக்குள் எனது ஆவியை வைப்பேன். நான் உங்களை மாற்றுவேன். எனவே நீங்கள் என் சட்டங்களுக்கு அடிபணிவீர்கள். நீங்கள் கவனமாக என் கட்டளைகளுக்கு அடிபணிவீர்கள்.
எசேக்கியேல் 36 : 28 (ERVTA)
பின்னர் நீங்கள் உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுக்கப்பட்ட நாட்டில் வாழ்வீர்கள். நீங்கள் என் ஜனங்களாயிருப்பீர்கள். நான் உங்களது தேவனாயிருப்பேன்.
எசேக்கியேல் 36 : 29 (ERVTA)
நான் உங்களைப் பாதுகாப்பேன், அசுத்தமாகாமல் இரட்சிப்பேன். நான் தானியத்தை முளைக்கும்படி கட்டளையிடுவேன். உங்களுக்கு விரோதமாகப் பஞ்சம் ஏற்படும்படிச் செய்யமாட்டேன்.
எசேக்கியேல் 36 : 30 (ERVTA)
நான் உங்கள் மரங்களிலிருந்து நிறைய பழங்கள் கிடைக்கும்படியும் உங்கள் வயல்களிலிருந்து நல்ல விளைச்சல் கிடைக்கும்படியும் செய்வேன். எனவே நீங்கள் பிற நாடுகளில் பசியால் அவமானப்பட்டதைப் போன்று இனிமேல் மீண்டும் படமாட்டீர்கள்.
எசேக்கியேல் 36 : 31 (ERVTA)
நீங்கள் செய்த கெட்டவற்றை நினைப்பீர்கள். நீங்கள் அவை நல்லவை அல்ல என நினைப்பீர்கள். பிறகு நீங்களே உங்களை வெறுப்பீர்கள். ஏனென்றால், நீங்கள் செய்த பாவங்களும் பயங்கரமான செயல்களும் மிகுதி.”
எசேக்கியேல் 36 : 32 (ERVTA)
எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “நீங்கள் இவற்றை நினைவுகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் இவற்றை உங்கள் நன்மைக்காக செய்யவில்லை! எனது நல்ல நாமத்திற்காகவே நான் இதனைச் செய்தேன்! எனவே இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வாழ்ந்த முறையை எண்ணி வெட்கப்படுங்கள்!”
எசேக்கியேல் 36 : 33 (ERVTA)
எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார், “நான் உங்கள் பாவங்களைக் கழுவும் நாளில் நான் உங்களை உங்களது நாட்டிற்குத் திரும்பக் கொண்டு வருவேன். அந்த அழிந்துபோன நகரங்கள் மீண்டும் கட்டப்படும்.
எசேக்கியேல் 36 : 34 (ERVTA)
காலியான நிலங்கள் பயிரிடப்படும். அந்த வழியாகப் போகிறவர்களின் பார்வையில் இனி பாழாக இராது.
எசேக்கியேல் 36 : 35 (ERVTA)
அவர்கள் சொல்வார்கள், ‘முன்பு இந்நிலம் பாழாகக் கிடந்தது, ஆனால் இப்பொழுது ஏதேன் தோட்டம் போல் ஆகியிருக்கிறது. நகரங்கள் அழிக்கப்பட்டிருந்தன. அவை பாழாகி வெறுமையாயிற்று. ஆனால் இப்பொழுது அவை பாதுகாக்கப்பட்டன. அவற்றில் ஜனங்கள் வாழ்கின்றனர்.’ ”
எசேக்கியேல் 36 : 36 (ERVTA)
தேவன் சொன்னார்: “பின்னர் உன்னைச் சுற்றியுள்ள அந்நாடுகள் நானே கர்த்தர் என்பதையும் நான் பாழான இடங்களை மீண்டும் கட்டினேன் என்பதையும் அறிவார்கள். காலியாக இருந்த இந்த நிலத்தில் நான் நட்டுவைத்தேன். நானே கர்த்தர் நான் இவற்றைக் கூறினேன் இவை நடக்கும்படிச் செய்வேன்!”
எசேக்கியேல் 36 : 37 (ERVTA)
எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “இஸ்ரவேல் ஜனங்களையும் கூட என்னிடம் வந்து தங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்க அனுமதிப்பேன். அவர்கள் மேலும் மேலும் பெருகும்படிச் செய்வேன். அவர்கள் ஆட்டு மந்தைகளைப் போன்றிருப்பார்கள்.
எசேக்கியேல் 36 : 38 (ERVTA)
எருசலேமில் அதன் சிறப்பான திருவிழாக்களில் வருகிற மந்தைக் கூட்டம்போன்று ஜனங்கள் மிகுதியாக இருப்பார்கள். அதைப் போலவே நகரங்களும் பாழான இடங்களும் ஜனங்கள் கூட்டத்தால் நிரம்பும். பின்னர் அவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்.”

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38