எசேக்கியேல் 34 : 1 (ERVTA)
இஸ்ரவேல் ஒரு ஆட்டு மந்தைப் போன்றது கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்:
எசேக்கியேல் 34 : 2 (ERVTA)
“மனுபுத்திரனே, எனக்காக இஸ்ரவேலின் மேய்ப்பர்களுக்கு (தலைவர்கள்) விரோதமாகப் பேசு. எனக்காக நீ அவர்களிடம் பேசு. எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று அவர்களிடம் கூறு: ‘இஸ்ரவேலின் மேய்ப்பர்களாகிய நீங்கள் உங்களுக்கு மட்டுமே உணவு ஊட்டுகிறீர்கள். இது உங்களுக்கு மிகத் தீமையாகும்! நீங்கள் ஏன் உங்கள் மந்தையை மேய்க்கவில்லை?
எசேக்கியேல் 34 : 3 (ERVTA)
நீங்கள் கொழுத்த ஆடுகளைத் தின்றுவிட்டு அதன் மயிரால் உங்களுக்குக் கம்பளி செய்துகொள்கிறீர்கள். நீங்கள் கொழுத்த ஆடுகளைக் கொன்று உண்கிறீர்கள். நீங்கள் மந்தைக்கு உணவளிப்பதில்லை.
எசேக்கியேல் 34 : 4 (ERVTA)
நீங்கள் பலவீனமான ஆடுகளைப் பலப்படுத்துவதில்லை. நீங்கள் நோயுற்ற ஆடுகளைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. நீங்கள் காயம்பட்ட ஆடுகளுக்குக் கட்டுப்போடுவதில்லை. சில ஆடுகள் எங்கோ அலைந்து காணாமல் போகும். அவற்றைத் தேடிப்போய் நீங்கள் திரும்பக்கொண்டு வருவதில்லை. காணாமல் போன ஆடுகளைத் தேடி நீங்கள் போகவில்லை. இல்லை. நீங்கள் கொடூரமானவர்களாகவும் கடுமையானவர்களாகவும் இருந்தீர்கள். இவ்வாறுதான் நீங்கள் உங்கள் ஆடுகளை வழி நடத்தினீர்கள்!
எசேக்கியேல் 34 : 5 (ERVTA)
“ ‘இப்பொழுது மேய்ப்பன் இல்லாததால் ஆடுகள் சிதறிப் போய்விட்டன. அவை ஒவ்வொரு காட்டு மிருகங்களுக்கும் உணவாயின. எனவே அவை சிதறிப்போயின.
எசேக்கியேல் 34 : 6 (ERVTA)
என் மந்தை எல்லா மலைகளிலும் உயரமான குன்றுகளிலும் அலைந்து திரிகின்றது, பூமியின் எல்லாப் பாகங்களிலும் எனது மந்தை சிதறிப்போயிற்று. அவற்றைத் தேடிப் போவதற்கும் கவனித்துக்கொள்ளவும் யாருமில்லை.’ ”
எசேக்கியேல் 34 : 7 (ERVTA)
ஆகையால், மேய்ப்பர்களே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்,
எசேக்கியேல் 34 : 8 (ERVTA)
“என் உயிரைக் கொண்டு, நான் உனக்கு இந்த வாக்கையளிக்கிறேன். காட்டு மிருகங்கள் என் மந்தையைப் பிடித்தது. ஆம், எனது மந்தை காட்டு மிருகங்களுக்கு உணவாகியது. ஏனென்றால், அவற்றுக்கு உண்மையான மேய்ப்பன் இல்லை. எனது மேய்ப்பர்கள் எனது மந்தையை கவனிக்கவில்லை. இல்லை, அம்மேய்ப்பர்கள் ஆடுகளைத் தின்று தமக்கு உணவாக்கிக் கொண்டார்கள். அவர்கள் என் மந்தையை மேய்க்கவில்லை”.
எசேக்கியேல் 34 : 9 (ERVTA)
எனவே, மேய்ப்பர்களே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்!
எசேக்கியேல் 34 : 10 (ERVTA)
கர்த்தர் கூறுகிறார்: “நான் அம்மேய்ப்பர்களுக்கு விரோதமானவன்! நான் என் ஆடுகளை அவர்களிடமிருந்து வற்புறுத்தி உரிமையுடன் கேட்பேன்! நான் அவர்களை வேலையைவிட்டு நீக்குவேன். அவர்கள் இனி என் மேய்ப்பர்களாக இருக்கமாட்டார்கள். எனவே மேய்ப்பர்களால் தங்களுக்கே உணவளித்துக்கொள்ள முடியாது. நான் அவர்களின் வாயிலிருந்து என் மந்தையைக் காப்பேன். பிறகு என் மந்தை அவர்களுக்கு உணவாகாது.”
எசேக்கியேல் 34 : 11 (ERVTA)
எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “நான், நானே, அவர்களின் மேய்ப்பன் ஆவேன். நான் என் ஆடுகளைத் தேடுவேன். நான் அவர்களைக் கவனிப்பேன்.
எசேக்கியேல் 34 : 12 (ERVTA)
மேய்ப்பன் தன் ஆடுகளோடு இருக்கும்போது ஆடுகள் வழிதவறிப் போனால் அவன் அவற்றைத் தேடி அலைவான். அதைப்போன்று நானும் என் ஆடுகளைத் தேடுவேன். நான் என் ஆடுகளைக் காப்பாற்றுவேன். அந்த இருளான, மங்கலான நாட்களில் அவர்கள் சிதறிப்போன எல்லா இடங்களிலிருந்தும் அவர்களை நான் திரும்பக் கொண்டுவருவேன்.
எசேக்கியேல் 34 : 13 (ERVTA)
நான் அவற்றை அந்நாடுகளிலிருந்து கொண்டுவருவேன். நான் அந்நாடுகளிலிருந்து அவற்றை ஒன்று சேர்ப்பேன். நான் அவற்றைத் தம் சொந்த நாட்டுக்குக் கொண்டுவருவேன். நான் அவற்றை இஸ்ரவேல் மலைகளிலும், ஓடைக் கரைகளிலும், ஜனங்கள் வாழ்கிற இடங்களிலும் மேய்ப்பேன்.
எசேக்கியேல் 34 : 14 (ERVTA)
நான் அவற்றைப் புல்வெளிகளுக்கு வழிநடத்துவேன். அவை இஸ்ரவேல் மலைகளின் உச்சிக்குப் போகும். அங்கே அவை தரையில் படுத்துக்கிடந்து புல்லை மேயும். அவை இஸ்ரவேல் மலைகளில் உள்ள வளமான புல்லை மேயும்.
எசேக்கியேல் 34 : 15 (ERVTA)
ஆம், நான் என் மந்தையை நன்றாக மேய்த்து ஓய்விடங்களுக்கு நடத்திச்செல்வேன்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.
எசேக்கியேல் 34 : 16 (ERVTA)
“நான் காணாமல்போன ஆடுகளைத் தேடுவேன். நான் சிதறிப்போன ஆடுகளைத் திரும்பக் கொண்டுவருவேன். நான் புண்பட்ட ஆடுகளுக்குக் கட்டுப்போடுவேன். நான் பலவீனமான ஆடுகளைப் பலப்படுத்துவேன். ஆனால் நான் கொழுத்த ஆற்றலுடைய மேய்ப்பர்களை அழிப்பேன். நான் அவர்களுக்கு ஏற்ற தண்டனையைக் கொடுப்பேன்.”
எசேக்கியேல் 34 : 17 (ERVTA)
எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “என் மந்தையே, நான் ஒரு ஆட்டுக்கும் இன்னொரு ஆட்டுக்கும் நியாயந்தீர்ப்பேன். நான் ஒரு ஆட்டுக்கடாவுக்கும் வெள்ளாட்டுக்கடாவுக்கும் நியாயம்தீர்ப்பேன்.
எசேக்கியேல் 34 : 18 (ERVTA)
நீங்கள் நல்ல நிலத்தில் வளர்ந்த புல்லை உண்ணலாம். ஆனால் நீங்கள் எதற்காக இன்னொரு ஆடு உண்ண விரும்புகிற புல்லை மிதித்துத் துவைக்கிறீர்கள். நீங்கள் ஏராளமான தெளிந்த தண்ணீரைக் குடிக்கலாம். ஆனால், நீங்கள் எதற்காக மற்ற ஆடுகள் குடிக்கிற தண்ணீரைக் கலக்குகிறீர்கள்?
எசேக்கியேல் 34 : 19 (ERVTA)
எனது ஆடுகள் உங்களால் மிதித்து துவைக்கப்பட்டப் புல்லை மேயவேண்டும். அவை உங்களால் கலக்கப்பட்ட தண்ணீரைக் குடிக்க வேண்டும்!”
எசேக்கியேல் 34 : 20 (ERVTA)
எனவே, எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றிடம் கூறுகிறார்: “நான், நானே கொழுத்த ஆட்டிற்கும் மெலிந்த ஆட்டிற்கும் இடையில் நியாயம் தீர்ப்பேன்!
எசேக்கியேல் 34 : 21 (ERVTA)
நீங்கள் பக்கவாட்டினாலும் தோள்களாலும் தள்ளுகிறீர்கள். நீங்கள் உங்கள் கொம்புகளால் பலவீனமான ஆடுகளை முட்டித் தள்ளுகிறீர்கள். நீங்கள் அவை வெளியேறும்வரை தள்ளுகிறீர்கள்.
எசேக்கியேல் 34 : 22 (ERVTA)
எனவே நான் எனது மந்தையைக் காப்பேன். அவை இனி காட்டு மிருகங்களால் கைப்பற்றப்படாது, நான் ஒரு ஆட்டிற்கும் இன்னொரு ஆட்டிற்கும் இடையில் நியாயம் தீர்ப்பேன்.
எசேக்கியேல் 34 : 23 (ERVTA)
பிறகு நான் அவற்றுக்கு மேலாக ஒரு மேய்ப்பனை நியமிப்பேன். அவனே என் தாசனாகிய தாவீது. அவன் அவற்றுக்கு உணவளித்து அவர்கள் மேய்ப்பனாக இருப்பான்.
எசேக்கியேல் 34 : 24 (ERVTA)
பிறகு கர்த்தரும் ஆண்டவருமான நான் அவர்களின் தேவனாயிருப்பேன். என் தாசனாகிய தாவீது அவர்களிடையில் வாழ்கிற அதிபதியாவன். கர்த்தராகிய நான் பேசினேன்.
எசேக்கியேல் 34 : 25 (ERVTA)
“நான் எனது ஆடுகளோடு ஒரு சமாதான உடன்படிக்கையைச் செய்வேன். நான் தீமை தருகிற மிருகங்களை அந்த இடத்தை விட்டு அகற்றுவேன். பிறகு அந்த ஆடுகள் வனாந்தரத்தில் பாதுகாப்பாக இருக்கும், காடுகளில் நன்றாகத் தூங்கும்.
எசேக்கியேல் 34 : 26 (ERVTA)
நான் ஆடுகளை ஆசீர்வதிப்பேன். எனது மலையைச் (எருசலேம்) சுற்றியுள்ள இடங்களையும் ஆசீர்வதிப்பேன். சரியான நேரத்தில் நான் மழையைப் பொழியச் செய்வேன். அவை அவர்கள்மேல் ஆசீர்வாதத்தைப் பொழியும்.
எசேக்கியேல் 34 : 27 (ERVTA)
வயல்களில் வளர்ந்த மரங்கள் கனிகளைத் தரும். பூமி தன் விளைச்சலைத் தரும். எனவே ஆடுகள் தன் நிலத்தில் பாதுகாப்பாக இருக்கும். நான் அவற்றின் நுகத்தை உடைப்பேன். நான் அவற்றை அடிமையாக்கிய ஜனங்களின் வல்லமையிலிருந்து காப்பேன். பின் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்.
எசேக்கியேல் 34 : 28 (ERVTA)
அவர்கள் எந்த நாடுகளாலும் மிருகங்களைப்போன்று பிடிக்கப்படமாட்டார்கள். அந்த மிருகங்கள் இனி இவற்றை உண்ணாது. ஆனால் அவை பாதுகாப்பாக வாழும். எவரும் அவற்றைப் பயப்படுத்த முடியாது.
எசேக்கியேல் 34 : 29 (ERVTA)
நான் அவர்களுக்குத் தோட்டம் இடத்தக்க நல்ல நிலத்தைக் கொடுப்பேன். பிறகு அவர்கள் பசியால் துன்பப்படவேண்டாம். பிற நாட்டினர் செய்யும் நிந்தனைகளை இனி அவர்கள் தாங்கவேண்டாம்.
எசேக்கியேல் 34 : 30 (ERVTA)
பின் அவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள். நான் அவர்களோடு இருக்கிறேன் என்பதையும் அறிவார்கள். இஸ்ரவேல் வம்சத்தார் எனது ஜனங்கள் என்பதையும் அவர்கள் அறிவார்கள்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்!
எசேக்கியேல் 34 : 31 (ERVTA)
“நீங்கள் எனது ஆடுகள். என் புல்வெளியில் மேய்கிற ஆடுகள். நீங்கள் மனிதர்கள். நான் உங்கள் தேவன்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31