யாத்திராகமம் 2 : 1 (ERVTA)
குழந்தையான மோசே லேவியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் லேவியின் குடும்பத்திலிருந்த ஒரு பெண்ணை மணந்தான்.
யாத்திராகமம் 2 : 2 (ERVTA)
அப்பெண் கருவுற்று ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். தாய் அக்குழந்தையின் அழகைக் கண்டு அதை மூன்று மாதங்கள் மறைத்து வைத்தாள்.
யாத்திராகமம் 2 : 3 (ERVTA)
அது ஆணாக இருந்ததால், அக்குழந்தை கண்டுபிடிக்கப்பட்டு கொல்லப்படுமோ என்று தாய் பயந்தாள். மூன்று மாதங்களுக்குப் பிறகு அவள் ஒரு கூடையைச் செய்து, அது மிதக்கும்படியாக கீல் பூசி, குழந்தையை அக்கூடையில் வைத்து, நதியில் உயரமான புற்களிடையே கூடையை மிதக்கவிட்டாள்.
யாத்திராகமம் 2 : 4 (ERVTA)
குழந்தையின் சகோதரி அங்கு நின்று நடப்பதைக் கவனித்தாள். குழந்தைக்கு நிகழப்போவதைப் பார்க்க விரும்பினாள்.
யாத்திராகமம் 2 : 5 (ERVTA)
அப்போதுதான் பார்வோனின் மகள் குளிப்பதற்காக நதிக்கு வந்தாள். உயர்ந்த புற்களிடையே இருந்த கூடையை அவள் கண்டாள். நதியருகே அவளது வேலைக்காரிகள் நடந்துகொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரிடம் கூடையை எடுத்து வருமாறு அவள் கூறினாள்.
யாத்திராகமம் 2 : 6 (ERVTA)
அரசனின் மகள் கூடையைத் திறந்து அதில் ஒரு ஆண் குழந்தையைக் கண்டாள். அக்குழந்தை அழுதுகொண்டிருந்தது. அவள் அதற்காக மனமிரங்கினாள். அது எபிரெயக் குழந்தைகளில் ஒன்று என்பதை அவள் அறிந்தாள்.
யாத்திராகமம் 2 : 7 (ERVTA)
அங்கே நின்றுகொண்டிருந்த குழந்தையின் சகோதரி அரசனின் மகளை நோக்கி, “நான் போய் குழந்தைக்குப் பாலூட்டுவதற்கும், அதைக் கவனித்துக்கொள்வதற்கும் ஒரு எபிரெயப் பெண்ணை அழைத்து வரட்டுமா?” என்றாள்.
யாத்திராகமம் 2 : 8 (ERVTA)
அரசனின் மகளும், “தயவு செய்து அவ்வாறே செய்” என்றாள். எனவே அப்பெண் சென்று, குழந்தையின் தாயையே அழைத்து வந்தாள்.
யாத்திராகமம் 2 : 9 (ERVTA)
அரசனின் மகள் அத்தாயை நோக்கி, “குழந்தையை எடுத்து எனக்காக அதற்குப் பாலூட்டு. அவனைக் கவனித்துக்கொள்வதற்காக உனக்குப் பணம் கொடுப்பேன்” என்றாள். எனவே, அப்பெண் குழந்தையை எடுத்துச் சென்று, அதனை வளர்த்தாள்.
யாத்திராகமம் 2 : 10 (ERVTA)
குழந்தை வளர்ந்தது. சில காலத்திற்குப் பிறகு, அவள் அக்குழந்தையை அரசனின் மகளிடம் கொடுத்தாள். அரசனின் மகள் குழந்தையைத் தன் சொந்த மகனாகவே ஏற்றுக்கொண்டாள். அக்குழந்தையை தண்ணீரிலிருந்து எடுத்ததால் அவனுக்கு மோசே என்று பெயரிட்டாள்.
யாத்திராகமம் 2 : 11 (ERVTA)
மோசே தன் ஜனங்களுக்கு உதவுதல் மோசே வளர்ந்து, பெரியவனானான். அவனது சொந்த ஜனங்களாகிய எபிரெயர்கள் கடினமாக உழைப்பதற்கு வற்புறுத்தப்படுவதைக் கண்டான். ஒரு நாள் ஒரு எபிரெய மனிதனை, எகிப்திய மனிதன் ஒருவன் அடித்துக்கொண்டிருப்பதைக் கண்டான்.
யாத்திராகமம் 2 : 12 (ERVTA)
மோசே சுற்றிலும் நோக்கி, யாரும் தன்னைக் கவனிக்கவில்லை என்பதைக் கண்டான். பின் மோசே, எகிப்தியனைக் கொன்று, அவனை மண்ணில் புதைத்தான்.
யாத்திராகமம் 2 : 13 (ERVTA)
மறுநாள் இரண்டு எபிரெய மனிதர்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக்கொண்டிருப்பதையும், அவர்களில் ஒருவன் செய்தது தவறாயிருப்பதையும் மோசே பார்த்தான். மோசே அம்மனிதனை நோக்கி, “நீ ஏன் உனது அயலானை அடிக்கிறாய்?” என்று கேட்டான்.
யாத்திராகமம் 2 : 14 (ERVTA)
அம்மனிதன் அதற்குப் பதிலாக, “எங்களுக்கு அதிகாரியாகவும், நியாயாதிபதியாகவும் இருக்கும்படியாக உன்னிடம் யாராவது கூறினார்களா? நீ எகிப்தியனை நேற்று கொன்றதுபோல என்னையும் கொல்லப் போகிறாயா?” என்றான். இதைக் கேட்டு மோசே அஞ்சினான். மோசே தனக்குள், “நான் செய்ததை எல்லோரும் இப்போது அறிந்திருக்கிறார்கள்” என்று நினைத்துக்கொண்டான்.
யாத்திராகமம் 2 : 15 (ERVTA)
மோசே செய்ததைக் குறித்து பார்வோன் கேள்விப்பட்டு, அவன் மோசேயைக் கொல்ல முடிவு செய்தான். ஆனால் பார்வோனிடமிருந்து மோசே தப்பி ஓடி, மீதியான் தேசத்திற்குச் சென்றான். மீதியானில் மோசே மீதியானின் ஒரு கிணற்றருகே மோசே நின்றான்.
யாத்திராகமம் 2 : 16 (ERVTA)
ஏழு பெண்களைப் பெற்ற ஒரு ஆசாரியன் மீதியானில் இருந்தான். அப் பெண்கள் வந்து தம்முடைய தந்தையின் ஆடுகளுக்கு தண்ணீர் காட்டும்படிக்கு கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்து தொட்டிகளை நிரப்பிக்கொண்டிருந்தார்கள்.
யாத்திராகமம் 2 : 17 (ERVTA)
ஆனால் அங்கிருந்த சில மேய்ப்பர்கள் அப்பெண்களைத் துரத்தி, அவர்கள் தண்ணீர் இறைக்க முடியாதபடி செய்தனர். மோசே அப்பெண்களுக்கு உதவி, அவர்களின் ஆடுகளுக்கு தண்ணீர் கொடுத்தான்.
யாத்திராகமம் 2 : 18 (ERVTA)
பின் அப்பெண்கள் தங்கள் தந்தையாகிய ரெகுவேலிடம் சென்றனர். அவர்கள் தந்தை அவர்களிடம், “இன்று சீக்கிரமாக வந்துவிட்டீர்களே!” என்று கேட்டான்.
யாத்திராகமம் 2 : 19 (ERVTA)
அப்பெண்கள், “மேய்ப்பர்கள் எங்களைத் துரத்திவிட முயன்றதால் ஒரு எகிப்திய மனிதன் எங்களுக்கு உதவினான். அவன் எங்களுக்கும் எங்கள் ஆடுகளுக்கும் தண்ணீர் கொடுத்தான்” என்று பதில் சொன்னார்கள்.
யாத்திராகமம் 2 : 20 (ERVTA)
எனவே, ரெகுவேல் அவனது பெண்களை நோக்கி, “அம்மனிதன் எங்கே? ஏன் அவனை விட்டு வந்தீர்கள்? அவனை அழையுங்கள், அவன் நம்மோடு சாப்பிடட்டும்” என்றான்.
யாத்திராகமம் 2 : 21 (ERVTA)
மோசே அம்மனிதனோடு தங்குவதில் மகிழ்ச்சியடைந்தான். ரெகுவேல், தனது மகளாகிய சிப்போராளை மோசேக்குத் திருமணம் செய்து வைத்தான்.
யாத்திராகமம் 2 : 22 (ERVTA)
சிப்போராள் கர்ப்பவதியாகி, ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். மோசே அவனுக்குக் கெர்சோம் என்று பேரிட்டான். தனக்குச் சொந்தமில்லாத நாட்டில் அந்நியனாக இருந்தமையால் மோசே அவனுக்கு இப்பெயரை வைத்தான்.
யாத்திராகமம் 2 : 23 (ERVTA)
இஸ்ரவேலுக்கு உதவ தேவன் முடிவு செய்தல் நீண்டகாலம் கழிந்தது. எகிப்தின் மன்னன் மரித்தான். ஆனால் இஸ்ரவேல் ஜனங்களோ கடினமாக உழைப்பதற்கு தொடர்ந்து வற்புறுத்தப்பட்டனர். உதவிக்காக அவர்கள் அழுதார்கள்.
யாத்திராகமம் 2 : 24 (ERVTA)
தேவன் அவர்கள் ஜெபத்தைக் கேட்டார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரோடு செய்த உடன்படிக்கையை அவர் நினைவுகூர்ந்தார்.
யாத்திராகமம் 2 : 25 (ERVTA)
இஸ்ரவேல் ஜனங்கள் அடைந்த துயரங்களைத் தேவன் கண்டார். விரைவில் அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதை தீர்மானித்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25