எஸ்தர் 4 : 1 (ERVTA)
மொர்தெகாய் உதவிக்காக எஸ்தரை தூண்டுகிறான் நடந்த அனைத்தையும் மொர்தெகாய் கேள்விப்பட்டான். யூதர்களுக்கு எதிரான அரசனது கட்டளையைக் கேட்டதும் அவன் தனது ஆடையைக் கிழித்தான். துக்கத்திற்கு அடையாளமான ஆடையை அணிந்து தலையில் சாம்பலை போட்டுக்கொண்டான். பிறகு அவன் நகரத்திற்குள் உரத்தக்குரலில் அழுதவண்ணம் சென்றான்.
எஸ்தர் 4 : 2 (ERVTA)
ஆனால் மொர்தெகாய் அரசனது வாசல் வரைதான் போனான். துக்கத்திற்குரிய ஆடையை அணிந்திருந்த எவரையும் வாசலில் நுழைய அனுமதிக்கமாட்டார்கள்.
எஸ்தர் 4 : 3 (ERVTA)
எல்லா நாடுகளிலும் அரசனது கட்டளை போய்ச் சேர்ந்தது. அதனால் யூதர்களிடம் அழுகையும், துக்கமும், அதிகரித்தன. அவர்கள் உரத்த அழுகையுடன் உபவாசத்தை கடைப்பிடித்தனர். பல யூதர்கள் துக்கத்திற்கான ஆடையை அணிந்தும் தலைகளில் சாம்பலைப் போட்டுக்கொண்டும் தரையில் விழுந்துகிடந்தனர்.
எஸ்தர் 4 : 4 (ERVTA)
எஸ்தரின் பெண் வேலைக்காரிகளும், பிரதானிகளும் வந்து அவளிடம் மொர்தெகாயைப் பற்றிச் சொன்னார்கள். அது எஸ்தர் அரசியைக் கலங்கவும் துக்கப்படவும் வைத்தது. அவள் அவனுக்கு துக்கத்திற்குரிய ஆடையை எடுத்துவிட்டு அணிந்துகொள்ள வேறு ஆடைகளைக் கொடுத்து அனுப்பினாள். ஆனால் அவன் அந்த ஆடைகளை ஏற்றுக்கொள்ளவில்லை.
எஸ்தர் 4 : 5 (ERVTA)
பிறகு, எஸ்தர் ஆத்தாகை அழைத்தாள். ஆத்தாகு அரசனின் பிரதானிகளுள் ஒருவன். அவன் அவளுக்கு சேவைச் செய்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். மொர்தெகாயை அழவைத்து துக்கப்படுத்தியது எதுவென அறிந்து வரும்படி அவள் அவனுக்கு கட்டளையிட்டாள்.
எஸ்தர் 4 : 6 (ERVTA)
எனவே, அவன் வெளியே போய் வாசலுக்கு முன்னால் திறந்த வெளியில் மொர்தெகாய் இருக்கும் இடத்தை அடைந்தான்.
எஸ்தர் 4 : 7 (ERVTA)
பிறகு, மொர்தெகாய் ஆத்தாகிடம் அவனுக்கு ஏற்பட்டதைப்பற்றி சொன்னான். அதோடு அவன் ஆத்தாகிடம் ஆமான் யூதர்களைக் கொல்வதற்கு எவ்வளவு பணம் அரசின் பொக்கிஷ சாலைக்குக் கொடுப்பதாக வாக்களித்துள்ளான் என்பதையும் சொன்னான்.
எஸ்தர் 4 : 8 (ERVTA)
மொர்தெகாய் ஆத்தாகிடம் யூதர்களைக் கொல்வதற்குரிய அரசனது கட்டளைப் பிரதிகளையும் கொடுத்தான். அக்கட்டளை சூசான் தலைநகரம் முழுவதும் போயிருந்தது. அவன் ஆத்தாகிடம், அதனை எஸ்தருக்குக் காட்டி எல்லாவற்றையும் சொல்லும்படி கூறினான். எஸ்தர் அரசனிடம் சென்று, அரசனிடம் மொர்தெகாய்க்கும், அவளது ஜனங்களுக்கும் இரக்கம் காட்டிக் காக்குமாறு வேண்டிக்கொள்ளச் சொன்னான்.
எஸ்தர் 4 : 9 (ERVTA)
ஆத்தாகு எஸ்தரிடம் போய் மொர்தெகாய் சொன்னவற்றையெல்லாம் சொன்னான்.
எஸ்தர் 4 : 10 (ERVTA)
பிறகு எஸ்தர் ஆத்தாகிடம், மொர்தெகாயிடம் சொல்லுமாறு சொல்லியனுப்பினது இதுவே:
எஸ்தர் 4 : 11 (ERVTA)
“மொர்தெகாய் அரசனின் தலைவர்கள் அனைவரும் அரசனது நாடுகளில் உள்ள ஜனங்கள் அனைவரும் இதனை அறிவார்கள். அரசனிடம் ஒரு சட்டம் உள்ளது. அதாவது, ஒரு ஆணோ, பெண்ணோ அழைக்கப்படாமல் அரசனிடம் போகக்கூடாது. போனால், அவன் மரணத்திற்குள்ளாவான். அந்த ஆள் மீது அரசனது பொற் செங்கோல் நீட்டப்பட்டால் ஒழிய அவன் அச்சட்டத்திலிருந்து தப்பமுடியாது. அரசன் அவ்வாறு செய்தால், பிறகு அவனது உயிர் காப்பாற்றப்படும். 30 நாட்களாக நான் அரசனைப் போய் பார்க்க அழைக்கப்படவில்லை” என்று சொல்லச்சொன்னாள்.
எஸ்தர் 4 : 12 (ERVTA)
(12-13)எஸ்தரின் செய்தி மொர்தெகாய்க்குக் கொடுக்கப்பட்டது. மொர்தெகாய் அவளது செய்தியைப் படித்து விட்டு, அவன் அவளுக்குப் பதில் அனுப்பினான். அதில், “எஸ்தர், நீ அரசனது அரண் மனையில் வாழ்வதால் யூத பெண்ணாகிய நீ மட்டும் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்காதே.
எஸ்தர் 4 : 13 (ERVTA)
எஸ்தர் 4 : 14 (ERVTA)
நீ இப்போது அமைதியாக இருந்தால், யூதர்களுக்கான உதவியும் விடுதலையும் வேறு இடத்திலிருந்து வரும், ஆனால் நீயும் உனது தந்தையின் குடும்பமும் அழியும். யாருக்குத் தெரியும்? ஒருவேளை நீ இப்படிப்பட்ட காலத்தில் உதவுவதற்காகவே இராணியாகத் தோந்தெடுக்கப்பட்டிருக்கலாம்” என்று எழுதியிருந்தான்.
எஸ்தர் 4 : 15 (ERVTA)
(15-16)பிறகு, எஸ்தர் மொர்தெகாய்க்கு இந்த பதிலை அனுப்பினாள்: “மொர்தெகாய் சூசானிலுள்ள எல்லா யூதர்களையும் ஒன்றுசேர்த்து எனக்காக உபவாசம் இருங்கள். மூன்று நாட்கள் இரவும் பகலும் உண்ணாமலும் குடிக்காமலும் இருங்கள். நானும் உங்களைப் போன்றே உபவாசம் இருப்பேன். என் வேலைக்காரப் பெண்களும் உபவாசம் இருப்பார்கள். நான் உபவாசம் இருந்த பிறகு அரசனிடம் செல்வேன். அரசன் அழைக்காமல் போவது என்பது சட்டத்திற்கு எதிரானது என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் எவ்வாறாகிலும் செய்வேன். நான் மரித்தால் மரிக்கிறேன்.”
எஸ்தர் 4 : 16 (ERVTA)
எஸ்தர் 4 : 17 (ERVTA)
எனவே மொர்தெகாய் வெளியே போனான். அவன் எஸ்தர் சொன்னபடி எல்லாவற்றையும் செய்தான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17