உபாகமம் 24 : 1 (ERVTA)
“ஒருவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட பின்பு அவளிடத்தில் ஏதோ இரகசியமான காரியத்தைக் கண்டு, அதனால் அவள் மீது விருப்பமில்லாதவன் ஆகக்கூடும். அவன் அவளோடு மகிழ்ச்சியாய் இருக்கவில்லையென்றால், விவாகரத்து எழுதிக்கொடுத்து அவளைத் தன் வீட்டைவிட்டு அனுப்பிவிட வேண்டும்.
உபாகமம் 24 : 2 (ERVTA)
அவள் அவனது வீட்டைவிட்டுப் போனபின்பு வேறு ஒருவனுக்கு மனைவியாகலாம்.
உபாகமம் 24 : 3 (ERVTA)
(3-4)ஆனால் அவளின் அந்த புதிய கணவனும் அவளை விரும்பாது, மீண்டும் அனுப்பிவிட்டால், அவனும் அவளுக்கு விவாகரத்து எழுதிக்கொடுக்கவேண்டும். அல்லது அவன் மரித்துப் போக நேரிட்டால், அதன் பின்பு அவளின் முதல் கணவன் அவளை மீண்டும் மனைவியாக்கிக்கொள்ளக் கூடாது. அவள் அவனுக்கு அசுத்தமானவளாகிவிட்டவள். அப்படி அவன் அவளை மீண்டும் மணந்துகொள்வான் என்றால், அவன் கர்த்தர் வெறுக்கின்ற காரியங்களைச் செய்கின்றான் என்பதாகும். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கின்ற இந்த தேசத்தில் அப்படிப்பட்ட பாவத்தைச் செய்யக்கூடாது.
உபாகமம் 24 : 4 (ERVTA)
உபாகமம் 24 : 5 (ERVTA)
“ஒருவன் ஒரு பெண்ணைப் புதிதாய் திருமணம் செய்திருந்தால், அவன் தரைப் படையில் சேவை செய்யப் புறப்பட்டு செல்லவேண்டாம். அதுமட்டுமின்றி வேறு எந்த சிறப்புப் பணியிலும் அவன் ஈடுப்படக் கூடாது. அவன் ஓராண்டிற்குத் தன் வீட்டில் தான் விரும்பியபடி இருந்து, தான் திருமணம் செய்து கொண்ட மனைவியை சந்தோஷப்படுத்த வேண்டும்.
உபாகமம் 24 : 6 (ERVTA)
“நீங்கள் எந்த காரணத்தைக் கொண்டும் மற்றவர்களுக்குக் கொடுக்கும் கடனுக்கு அடமானமாக அவர்களது மாவு அரைக்கும் திரிகையின் அடிக்கல்லையாவது மேற்கல்லையாவது வாங்கக்கூடாது. ஏனென்றால் அது அவர்களின் உணவையே அவர்களிடமிருந்து எடுத்துப் போடுவதற்கு சமமாகும்.
உபாகமம் 24 : 7 (ERVTA)
“ஒருவன் தன் சொந்த ஜனங்களாகிய இஸ்ரவேல் சகோதரன் ஒருவனை கடத்திச் சென்று அவனை அடிமையாக விற்று ஆதாயம் தேடினால், அந்த ஆட்களைக் கடத்தும் திருடனைக் கொன்றுவிட வேண்டும். அவ்வாறாக இந்தத் தீமையை உங்களிடமிருந்து விலக்கிவிட வேண்டும்.
உபாகமம் 24 : 8 (ERVTA)
“நீங்கள் தொழுநோய் போன்ற கொடிய நோய்களுக்கு ஆளானால் லேவியராகிய ஆசாரியர்கள் உங்களுக்கு சொல்வதைப் பின்பற்றுவதில் எச்சரிக்கையுடன் இருங்கள். இதற்காக நான் ஆசாரியரிடம் கொடுத்த கட்டளையின்படியே நீங்கள் செய்ய எச்சரிக்கையுடன் இருங்கள்.
உபாகமம் 24 : 9 (ERVTA)
நீங்கள் எகிப்திலிருந்து வெளியேறி புறப்பட்டு வருகின்ற வழியிலே உங்கள் தேவனாகிய கர்த்தர் மிரியாமுக்குச் செய்ததை நினைத்துக்கொள்ளுங்கள்.
உபாகமம் 24 : 10 (ERVTA)
“நீங்கள் பிறருக்குக் கொடுக்கின்ற எந்த வகையான கடனுக்கும் அடமானத்தைப் பெற அவனது வீட்டிற்குள் செல்லவேண்டாம்.
உபாகமம் 24 : 11 (ERVTA)
வெளியே நின்றுவிடுங்கள். பின் அவன் நீங்கள் கொடுத்த கடனுக்கான அடமானத்தை வெளியில் வந்து தருவான்.
உபாகமம் 24 : 12 (ERVTA)
ஒருவேளை அவன் ஏழையாக இருந்தால், (அவன் போர்த்திக்கொள்ள வைத்திருந்த ஆடைகளை கொடுக்க முன் வந்தால்), நீங்கள் அவற்றை இரவு முழுவதும் வைத்துக்கொள்ளாதீர்கள்.
உபாகமம் 24 : 13 (ERVTA)
நீங்கள் அவற்றை ஒவ்வொரு நாள் மாலையிலும் அவனிடம் கொடுத்துவிட வேண்டும். அது அவன் தூக்கத்திற்கு அவசியமானதாகும். அவன் உங்களை ஆசீர்வதிப்பான். உங்கள் தேவனாகிய கர்த்தர் முன்பு இத்தகைய நல்ல செயல் உன் வாழ்வின் நியாயத்தை ஏற்கச் செய்திடும்.
உபாகமம் 24 : 14 (ERVTA)
“நீங்கள் உங்களிடம் காண்கின்ற ஏழை எளிய கூலிக்காரனை வஞ்சனை செய்யக் கூடாது. உங்கள் நகரங்களில் வசிக்கின்ற அந்நியர்களிடமும் அல்லது உங்களது இஸ்ரவேல் சகோதரர்களிடமும் இத்தகைய வஞ்சனை செயல்களைச் செய்யாதீர்கள்.
உபாகமம் 24 : 15 (ERVTA)
அவர்களது ஊதியத்தை ஒவ்வொரு நாள் சாயங்காலத்திலும் கொடுத்துவிட வேண்டும். ஏனென்றால் அவன் அந்த சம்பளத்தையே எதிர்ப் பார்த்து வாழ்கின்ற ஏழையாக இருக்கின்றான். நீங்கள் அப்படி அவனுக்கு கொடுக்கவில்லையென்றால் அவன் கர்த்தரிடம் உங்களுக்கு எதிராக முறையிடுவான். நீங்கள் பாவம் செய்தவராகிவிடுவீர்கள்.
உபாகமம் 24 : 16 (ERVTA)
“பிள்ளைகள் செய்தக் காரியத்திற்காகப் பெற்றோர்கள் கொலைசெய்யப்படக் கூடாது. அதுபோன்று பெற்றோர்கள் செய்த காரியங்களுக்காகப் பிள்ளைகள் கொலை செய்யப்படக் கூடாது. அவனவன் செய்த பாவச் செயல்களுக்கு ஏற்ப அவனவன் கொலைசெய்யப்பட வேண்டும்.
உபாகமம் 24 : 17 (ERVTA)
“உங்களைச் சார்ந்துள்ள அந்நியர்களையும், அநாதைகளையும், நியாயமாகவே நடத்துவதில் உறுதிகொண்டு இருக்க வேண்டும். விதவைகளின் ஆடைகள் துணிமணிகளை அடமானமாக ஒருபோதும் வாங்கிகொள்ளக்கூடாது.
உபாகமம் 24 : 18 (ERVTA)
எகிப்தில் நீங்கள் ஏழை அடிமைகளாக இருந்ததை மறந்துவிடாதீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் அங்கிருந்து உங்களை மீட்டுவந்து நீங்கள் சுதந்திரமாக வாழ அமைத்துக் கொடுத்ததை மறந்துவிடாதீர்கள். அதனால்தான் ஏழை ஜனங்களிடம் நீங்கள் இவ்வாறாக நடந்து கொள்ளவேண்டும் என்று சொல்லுகிறேன்.
உபாகமம் 24 : 19 (ERVTA)
“நீங்கள் உங்கள் விளைநிலங்களில் அறுவடை செய்து எடுத்து வரும்போது கொஞ்சம் தானியத்தை மறந்து அங்கேயே விட்டுவிட்டு வந்தீர்கள் என்றால் அவற்றை எடுக்க நீங்கள் திரும்பிச் செல்லக்கூடாது. அவை அந்நியர்களுக்கும் ஆதரவற்ற அநாதைகளுக்கும், விதவைகளுக்கும் இருக்கட்டும். கொஞ்சம் தானியத்தை அவர்களுக்காக அங்கேயேவிட்டு வந்தால், உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் செய்கின்ற எல்லாக் காரியங்களையும் ஆசீர்வதிப்பார்.
உபாகமம் 24 : 20 (ERVTA)
நீங்கள் உங்கள் ஒலிவ மரத்தை உதிர்த்துவிட்டுத் திரும்பிய பின்பு மீண்டும் அதன் கிளைகளிலே தப்பியவற்றைப் பறிப்பதற்குத் திரும்பிப்போக வேண்டாம். அவற்றை உங்களைச் சார்ந்த அந்நியர்களுக்கும், ஆதரவற்ற அநாதைகளுக்கும், விதவைகளுக்கும் விட்டு வைப்பீர்களாக.
உபாகமம் 24 : 21 (ERVTA)
நீங்கள் உங்கள் திராட்சைத் தோட்டங்களில் திராட்சைப் பழங்களைப் பறித்து சேர்த்த பின்பு தப்பிக்கிடக்கும் பழங்களைப் பறிப்பதற்கு மீண்டும் அங்கே செல்ல வேண்டாம். அந்தத் திராட்சைப் பழங்கள் உங்களைச் சார்ந்த அந்நியர்களுக்கும், ஆதரவற்ற அநாதைகளுக்கும், விதவைகளுக்கும் விட்டு வைப்பீர்களாக.
உபாகமம் 24 : 22 (ERVTA)
நீங்கள் எகிப்தில் ஏழை அடிமைகளாக இருந்ததை நினைத்துப்பாருங்கள். அதனால்தான் இந்த ஏழை ஜனங்களுக்காக இவைகளைச் செய்யுங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22