ஆமோஸ் 1 : 1 (ERVTA)
முன்னுரை இது ஆமோஸின் செய்தி, ஆமோஸ் தெக்கோவா நகரைச் சேர்ந்த மேய்ப்பர்களில் ஒருவன். ஆமோஸ் இஸ்ரவேலைப்பற்றி, யூதாவின் அரசனாக உசியா இருந்த காலத்திலும் இஸ்ரவேலின் அரசனாக யோவாசின் மகன் யெரொபெயாமின் காலத்திலும் தரிசனங்களைக் கண்டான். இது பூமி அதிர்ச்சி ஏற்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.
ஆமோஸ் 1 : 2 (ERVTA)
சீரியாவிற்கு எதிரான தண்டனை ஆமோஸ் சொன்னான்: கர்த்தர் சீயோனில் ஒரு சிங்கத்தைப் போன்று சத்தமிடுவார். அவரது உரத்த சப்தம் எருசலேமிலிருந்து கெர்ச்சிக்கும். மேய்ப்பர்களின் பசுமையான மேய்ச்சல் இடம் வறண்டு மடியும். கர்மேல் மலையும் காய்ந்து போகும்.
ஆமோஸ் 1 : 3 (ERVTA)
கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: “நான் தமஸ்குவின் ஜனங்களை அவர்கள் செய்த பல குற்றங்களுக்காக நிச்சயம் தண்டிப்பேன். ஏனென்றால் அவர்கள் கீலேயாத் ஜனங்களை இரும்பு ஆயுதங்களினால் நசுக்கினார்கள்.
ஆமோஸ் 1 : 4 (ERVTA)
எனவே நான் ஆசகேலின் வீட்டில் நெருப்பை பற்றவைப்பேன். அந்த நெருப்பு பெனாதாதின் மிகப்பெரிய அரண்மனைகளை அழிக்கும்.
ஆமோஸ் 1 : 5 (ERVTA)
“நான் தமஸ்குவின் வாசலில் போடப்பட்டுள்ள தாழ்ப்பாளை உடைப்பேன். நான் ஆவேன் பள்ளதாக்கின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருப்பவனை அழிப்பேன். நான் பெத்ஏதேனிலிருந்து வல்லமையின் சின்னத்தை விலக்கிப்போடுவேன். சீரியாவின் ஜனங்கள் தோற்றகடிக்கப்படுவார்கள். ஜனங்கள் அவர்களைக் கீர் நாட்டுக்குக் கொண்டு செல்வார்கள்” என்று கர்த்தர் கூறினார்.
ஆமோஸ் 1 : 6 (ERVTA)
பெலிஸ்தியர்களுக்கான தண்டனை கர்த்தர் இதனைக் கூறுகிறார்: “நான் நிச்சயமாக காத்சா ஜனங்களை அவர்களின் பல குற்றங்களுக்காகத் தண்டிப்பேன். ஏனென்றால் அவர்கள் நாட்டு ஜனங்களையெல்லாம் சிறைபிடித்து ஏதோமுக்குக் கைதிகளாகக் கொண்டுபோனார்கள்.
ஆமோஸ் 1 : 7 (ERVTA)
எனவே நான் காத்சாவின் மதிலுக்குள் நெருப்பை அனுப்புவேன். இந்த நெருப்பு காத்சாவின் உயர்ந்த கோபுரங்களை அழிக்கும்.
ஆமோஸ் 1 : 8 (ERVTA)
நான் அஸ்தோத்தின் சிங்காசனத்தில் இருப்பவனை அழிப்பேன். நான் அஸ்கலோனின் செங்கோலைத் தாங்கியிருப்பவனை அழிப்பேன். நான் எக்ரோன் ஜனங்களைத் தண்டிப்பேன் பிறகு மீதமுள்ள பெலிஸ்தியர்களும் மரிப்பார்கள்” தேவனாகிய கர்த்தர் கூறினார்.
ஆமோஸ் 1 : 9 (ERVTA)
பொனிசியாவின் தண்டனை கர்த்தர் இவற்றைச் சொல்கிறார்: “நான் நிச்சயமாக தீரு ஜனங்களை அவர்களது பல குற்றங்களுக்காகத் தண்டிப்பேன். ஏனென்றால் அவர்கள் ஒரு நாடு முழுவதையும் சிறைபிடித்து ஏதோமுக்கு அடிமைகளாக அனுப்பினார்கள். அவர்கள் தம் சகோதரர்களோடு (இஸ்ரவேல்) செய்த உடன்படிக்கையை நினைவு கொள்ளவில்லை.
ஆமோஸ் 1 : 10 (ERVTA)
எனவே நான் தீருவின் சுவர்களில் நெருப்பைப் பற்றவைப்பேன். அந்த நெருப்பு தீருவின் உயர்ந்த கோபுரங்களை அழிக்கும்.”
ஆமோஸ் 1 : 11 (ERVTA)
ஏதோமியர்களுக்கான தண்டனை கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: “நான் ஏதோம் ஜனங்களை அவர்களின் பல குற்றங்களுக்காக நிச்சயம் தண்டிப்பேன். ஏனென்றால் ஏதோம் தன் சகோதரன் இஸ்ரவேலை வாளோடு துரத்தினான். ஏதோம் இரக்கம் காட்டவில்லை. ஏதோமின் கோபம் இடைவிடாமல் தொடர்ந்து காட்டு மிருகங்களைப்போல இஸ்ரவேலர்களைக் கிழித்துக் கொண்டிருந்தான்.
ஆமோஸ் 1 : 12 (ERVTA)
எனவே, நான் தேமானில் நெருப்பைப் பற்ற வைப்பேன். அந்நெருப்பு போஸ்றாவின் உயர்ந்த கோபுரங்களை எரித்துப்போடும்.”
ஆமோஸ் 1 : 13 (ERVTA)
அம்மோனியர்களுக்கான தண்டனை கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: “நான் நிச்சயமாக அம்மோன் ஜனங்களை அவர்கள் செய்த பல குற்றங்களுக்காகத் தண்டிப்பேன். ஏனென்றால் அவர்கள் கீலேயாத் நாட்டில் கர்ப்பிணிப் பெண்களைக் கொன்றார்கள். அம்மோனியர்கள் இதனைச் செய்து தங்கள் நாட்டு எல்லைகளை விரித்தார்கள்.
ஆமோஸ் 1 : 14 (ERVTA)
எனவே நான் ரப்பாவின் மதிலில் நெருப்பைப் பற்றவைப்பேன். அந்நெருப்பு ரப்பாவின் உயர்ந்த கோபுரங்களை எரித்து அழிக்கும். அவர்களின் நாட்டிற்குள் துன்பமானது சுழல்காற்றைப்போன்று வரும்.
ஆமோஸ் 1 : 15 (ERVTA)
பிறகு அவர்களின் அரசனும் தலைவர்களும் சிறைபிடிக்கப்படுவார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றாகப் பிடிக்கப்படுவார்கள்”. என்று கர்த்தர் கூறினார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15