2 சாமுவேல் 19 : 1 (ERVTA)
யோவாப் தாவீதைக் கடிந்துக் கொள்கின்றான் ஜனங்கள் யோவாபுக்குச் செய்தியைத் தெரிவித்தனர். அவர்கள் யோவாபை நோக்கி, “பாருங்கள் அரசர் அப்சலோமுக்காக மிகவும் அழுது துக்கமாய் இருக்கிறார்” என்றார்கள்.
2 சாமுவேல் 19 : 2 (ERVTA)
அன்றைய போரில் தாவீதின் படை வெற்றி பெற்றது, ஆனால் அந்த நாள் எல்லோருக்கும் துக்க நாளாக அமைந்தது. “அரசன் தனது மகனுக்காக அதிக துக்கமடைந்துள்ளான்” என்பதை ஜனங்கள் கேள்விப்பட்டதால் அது மிகுந்த துக்க நாள் ஆயிற்று.
2 சாமுவேல் 19 : 3 (ERVTA)
ஜனங்கள் அமைதியாக நகரத்திற்குள் வந்தனர். போரில் தோற்கடிக்கப்பட்டு, ஓடிப்போன ஜனங்களைப்போல் அவர்கள் இருந்தார்கள்.
2 சாமுவேல் 19 : 4 (ERVTA)
அரசன் முகத்தை மூடிக் கொண்டிருந்தான். “எனது மகன் அப்சலோமே, ஓ அப்சலோமே, என் மகனே, என் மகனே!” என்று அவன் சத்தமிட்டு அழுதுக் கொண்டிருந்தான்.
2 சாமுவேல் 19 : 5 (ERVTA)
அரசனின் அரண்மனைக்குள் யோவாப் வந்தான். யோவாப் அரசனைப் பார்த்து, “உங்கள் ஒவ்வொரு அதிகாரிகளையும் நீங்கள் புண்படுத்துகிறீர்கள். பாருங்கள் அந்த அதிகாரிகள் இன்று உங்கள் உயிரைக் காப்பாற்றினார்கள். அவர்கள் உங்கள் மகன்கள், மகள்கள், மனைவிகள், வேலைக்காரிகள் ஆகியோரின் உயிர்களையும் காப்பாற்றினார்கள்.
2 சாமுவேல் 19 : 6 (ERVTA)
உங்களைப் பகைக்கிறவர்களை நீர் நேசிக்கிறீர். உங்களை நேசிக்கிறவர்களை நீர் வெறுக்கிறீர். உங்கள் அதிகாரிகளும் உங்கள் வீரர்களும் உங்களுக்கு ஒரு பொருட்டல்ல என்பதை இன்று வெளிப்படுத்திவிட்டீர்கள். அப்சலோம் உயிரோடிருந்து, நாங்கள் அனைவரும் கொல்லப்பட்டிருந்தால் நீர் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பீர் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது!
2 சாமுவேல் 19 : 7 (ERVTA)
இப்போது எழுந்து போய் உங்கள் அதிகாரிகளிடம் பேசுங்கள். அவர்களை உற்சாகப்படுத்துங்கள்! இப்போதே எழுந்து நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால், இன்றிரவு உம்மோடு ஒருவன்கூட இருக்கமாட்டான் என்று கர்த்தர் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். நீங்கள் குழந்தையாயிருந்ததிலிருந்து அனுபவித்த எல்லா துன்பங்களையும்விட அது தீமையானதாக இருக்கும்” என்றான்.
2 சாமுவேல் 19 : 8 (ERVTA)
அப்போது அரசன் நகரவாயிலுக்குச் சென்றான். அரசன் வாயிலருகே வந்துள்ளான் என்ற செய்தி பரவியது. எனவே எல்லோரும் அரசனைக் காண வந்தனர். அப்சலோமைப் பின்பற்றிய இஸ்ரவேலர் வீடுகளுக்கு ஓடிப்போய் விட்டனர்.
2 சாமுவேல் 19 : 9 (ERVTA)
தாவீது மீண்டும் அரசனாகுதல் எல்லா இஸ்ரவேல் கோத்திரங்களைச் சேர்ந்த ஜனங்களும் விவாதிக்கக் தொடங்கினார்கள். அவர்கள், “பெலிஸ்தியரிடமிருந்தும் பிற பகைவரிடமிருந்தும் தாவீது அரசர் நம்மைக் காப்பாற்றினார். தாவீது, அப்சலோமிடமிருந்து ஓடிப்போனார்.
2 சாமுவேல் 19 : 10 (ERVTA)
நம்மை ஆள்வதற்கு அப்சலோமைத் தேர்ந்தெடுத்தோம், ஆனால் அவன் போரில் மரித்துப் போனான். நாம் தாவீதை மீண்டும் அரசனாக்க வேண்டும்” என்றார்கள்.
2 சாமுவேல் 19 : 11 (ERVTA)
தாவீது அரசன் ஆசாரியர்களாகிய சாதோக்குக்கும் அபியத்தாருக்கும் செய்தியனுப்பினர். தாவீது, “யூதாவின் தலைவர்களிடம் பேசுங்கள். அவர்களிடம் கூறுங்கள், ‘தாவீதை தன் வீட்டிற்கு அழைத்து வரும் கடைசி கோத்திரமாக நீங்கள் இருப்பதேன்? பாருங்கள், இஸ்ரவேலர் எல்லோரும் அரசனை மீண்டும் அரண்மனைக்கு அழைத்து வருவதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
2 சாமுவேல் 19 : 12 (ERVTA)
நீங்கள் எனது சகோதரர்கள், நீங்கள் என் குடும்பம். அவ்வாறிருக்கையில் அரசனை வீட்டிற்குத் திரும்ப அழைப்பதற்கு நீங்கள் கடைசி கோத்திரமாக இருப்பதேன்?’ என்று சொல்லுங்கள்.
2 சாமுவேல் 19 : 13 (ERVTA)
அமாசாவிடம், ‘நீங்கள் எனது குடும்பத்தின் ஒரு பகுதியினர். யோவாபின் இடத்தில் உங்களைப் படை தலைவன் ஆக்காவிட்டால் தேவன் என்னைத் தண்டிக்கட்டும்’ என்று சொல்லுங்கள்” என்றான்.
2 சாமுவேல் 19 : 14 (ERVTA)
தாவீது யூதாவின் ஜனங்களின் இருதயங்களைத் தொட்டான், அவர்கள் ஒரே மனிதனைப்போன்று அவன் கூறியதற்குச் சம்மதித்தனர். யூதா ஜனங்கள் அரசனுக்குச் செய்தியனுப்பினார்கள். அவர்கள், “நீங்களும் உங்கள் அதிகாரிகளும் திரும்பி வாருங்கள்” என்றனர்.
2 சாமுவேல் 19 : 15 (ERVTA)
பின்பு தாவீது அரசன் யோர்தான் நதிக்கு வந்தான். யூதா ஜனங்கள் அரசனைக் காண கில்காலுக்கு வந்தனர். அரசனை யோர்தான் நதியைத் தாண்டி அழைத்துச் செல்வதற்காக அவர்கள் அங்கு வந்தனர்.
2 சாமுவேல் 19 : 16 (ERVTA)
சீமேயி தாவீதிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டுகிறான் கேராவின் மகனாகிய சீமேயி பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். அவன் பகூரிமில் வாழ்ந்தான். தாவீது அரசனைச் சந்திப்பதற்குச் சீமேயி விரைந்தான். யூதாவின் ஜனங்களோடு சீமேயி வந்தான்.
2 சாமுவேல் 19 : 17 (ERVTA)
பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த 1,000 ஆட்களும் சீமேயியோடு வந்தனர். சவுலின் குடும்பத்தைச் சேர்ந்த சீபா என்னும் பணியாளும் வந்தான். சீபா தன் 15 மகன்களையும் 20 பணியாட்களையும் தன்னோடு அழைத்து வந்தான். தாவீது அரசனைச் சந்திப்பதற்கு இவர்கள் எல்லோரும் யோர்தான் நதிக்கு விரைந்தனர்.
2 சாமுவேல் 19 : 18 (ERVTA)
அரசனின் குடும்பத்தை மீண்டும் யூதாவுக்கு அழைத்து வருவதில் உதவுவதற்காக ஜனங்கள் யோர்தான் நதியைக் கடந்தனர். அரசன் விரும்பியவாறே ஜனங்கள் செயல்பட்டனர். அரசன் நதியைக் கடந்துகொண்டிருக்கும்போது, கேராவின் மகனாகிய சீமேயி அவனைச் சந்திப்பதற்கு வந்தான். அரசனுக்கு முன் சீமேயி தரையில் விழுந்து வணங்கினான்.
2 சாமுவேல் 19 : 19 (ERVTA)
சீமேயி அரசனிடம், “என் ஆண்டவனே, நான் செய்த தவறுகளை மனதில் வைத்துக்கொள்ளாதீர்கள். எனது அரசனாகிய ஆண்டவனே, நீர் எருசலேமை விட்டுப் போனபோது நான் செய்த தீய காரியங்களை நினைவில் வைத்துக்கொள்ளாதீர்கள்.
2 சாமுவேல் 19 : 20 (ERVTA)
நான் பாவம் செய்தேன் என்பதை நீர் அறிவீர். யோசேப்பின் குடும்பத்திலிருந்து வந்து உங்களைச் சந்திக்கிற முதல் மனிதன் நான், எனது ஆண்டவனாகிய அரசனே” என்றான்.
2 சாமுவேல் 19 : 21 (ERVTA)
ஆனால் செருயாவின் மகனாகிய அபிசாய், “கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனுக்குத் தீமை நிகழவேண்டுமென்று வேண்டிக்கொண்டதால் நாம் சீமேயியைக் கொல்லவேண்டும்” என்றான்.
2 சாமுவேல் 19 : 22 (ERVTA)
தாவீது, “செருயாவின் மகன்களே, நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும்? இன்று நீங்கள் என் எதிராளி. ஆனால் இஸ்ரவேலில் ஒருவனும் இன்று கொல்லப்படமாட்டான். இஸ்ரவேலுக்கு நான் அரசன் என்பது இன்று எனக்குத் தெரியும்” என்றான்.
2 சாமுவேல் 19 : 23 (ERVTA)
பிறகு அரசன் சீமேயியை நோக்கி, “நீ மரிக்கமாட்டாய்” என்றான். அரசன் சீமேயியைக் கொல்லப் போவதில்லை என்று சீமேயிக்கு வாக்களித்தான்.[* அரசன்...வாக்களித்தான் தாவீது சீமேயியைக் கொல்லவில்லை. ஆனால் சில ஆண்டுகளுக்கு பிறகு, தாவீதின் மகன் சாலமோன் சீமேயியை மரணத்துக்குட்படுத்தும்படி கட்டளையிட்டான். பார்க்க: 1 இராஜா. 2:44- 46 ]
2 சாமுவேல் 19 : 24 (ERVTA)
மேவிபோசேத் தாவீதைப் பார்க்கப் போகிறான் தாவீது அரசனைக் காண சவுலின் பேரனாகிய மேவிபோசேத் வந்தான். மேவிபோசேத் அரசன் எருசலேமிலிருந்து போனதிலிருந்து அமைதியோடு திரும்பி வரும் வரைக்கும் அவனது கால்களைச் சுத்தம் பண்ணவில்லை. தாடியை சவரம் செய்து கொள்ளவில்லை. அவனது ஆடைகளை வெளுக்கவுமில்லை.
2 சாமுவேல் 19 : 25 (ERVTA)
மேவிபோசேத் எருசலேமிலிருந்து அரசனைச் சந்திக்க வந்தான். அரசன் மேவிபோசேத்தை நோக்கி, “மேவிபோசேத், நான் எருசலேமிலிருந்து ஓடிப் போனபோது நீ ஏன் என்னோடு வரவில்லை?” என்று கேட்டான்.
2 சாமுவேல் 19 : 26 (ERVTA)
மேவிபோசேத் பதிலாக, “எனது அரசனாகிய ஆண்டவனே, எனது வேலையாள் (சீபா) என்னை ஏமாற்றிவிட்டான். நான் சீபாவிடம், ‘நான் முடவன் எனவே கழுதையில் ஏற்றி வை. நான் கழுதையின் மேலேறி அரசனோடு போவேன்’ என்றேன்.
2 சாமுவேல் 19 : 27 (ERVTA)
ஆனால் எனது வேலையாள் என்னை ஏமாற்றிவிட்டான். என்னைக் குறித்து தீய செய்திகளை உங்களிடம் சொல்லி இருக்கிறான். தேவதூதனைப் போன்றவன் எனது அரசனாகிய ஆண்டவன் என்பது என் எண்ணம், உங்களுக்கு நல்லதென்று தோன்றுவதைச் செய்யுங்கள்.
2 சாமுவேல் 19 : 28 (ERVTA)
எனது பாட்டனாரின் குடும்பத்தார் எல்லோரையும் நீங்கள் கொன்றிருக்க முடியும். ஆனால் நீங்கள் அதைச் செய்யவில்லை. உங்கள் மேசையில் உண்கிறவர்களோடு என்னையும் வைத்தீர்கள். எனவே எதைக் குறித்தும் அரசனோடு முறையிட எனக்கு உரிமையில்லை” என்றான்.
2 சாமுவேல் 19 : 29 (ERVTA)
அரசன் மேவிபோசேத்தை நோக்கி, “உனது கஷ்டங்களைக் குறித்து அதிகமாக எதுவும் சொல்லாதே. இதுவே நான் செய்த முடிவு: நீயும் சீபாவும் தேசத்தைப் பிரித்துக் கொள்ளுங்கள்” என்றான்.
2 சாமுவேல் 19 : 30 (ERVTA)
மேவிபோசேத் அரசனிடம், “நிலம் முழுவதையும் சீபாவே எடுத்துக்கொள்ளட்டும், ஏனெனில் எனது அரசனாகிய ஆண்டவன் சமாதானத்தோடு சொந்த வீட்டிற்கே மீண்டும் வந்து சேர்ந்திருக்கிறீர்கள்! இதுவே எனக்குப் போதும்” என்றான்.
2 சாமுவேல் 19 : 31 (ERVTA)
பர்சிலாவைத் தன்னோடு வரும்படியாக தாவீது கேட்கிறான் கீலேயாத்தின் பர்சிலா ரோகிலிமிலிருந்து வந்தான். தாவீது அரசனோடு அவன் யோர்தான் நதிக்கு வந்தான். நதியைக் கடந்து அரசனை அழைத்துச் செல்வதற்காக அவன் அரசனோடு போனான்.
2 சாமுவேல் 19 : 32 (ERVTA)
பர்சிலா மிகவும் வயது முதிர்ந்தவன். அவனுக்கு 80 வயது. மக்னாயீமில் தாவீது தங்கியிருந்தபோது அவனுக்கு உணவும் பிற பொருட்களும் கொடுத்தான். அவன் செல்வந்தனாக இருந்தபடியால் அவனால் இதைச் செய்யமுடிந்தது.
2 சாமுவேல் 19 : 33 (ERVTA)
தாவீது பர்சிலாவிடம், “என்னோடு நதியைக் கடந்துவா. என்னோடு எருசலேமில் நீ வாழ்ந்தால் நான் உன்னைப் பராமரிப்பேன்” என்றான்.
2 சாமுவேல் 19 : 34 (ERVTA)
ஆனால் பர்சிலா அரசனிடம், “நான் எவ்வளவு வயது முதிர்ந்தவன் என்பது உனக்குத் தெரியுமா? நான் உன்னோடு எருசலேமுக்குப் போகமுடியும் என நீ நினைக்கிறாயா?
2 சாமுவேல் 19 : 35 (ERVTA)
எனக்கு 80 வயது! எது நல்லது, எது கெட்டது என்று கூறுவதற்கும் இயலாத முதிர்ந்த வயது. நான் உண்ணும், பருகும் உணவுகளின் சுவையறிய இயலாதவன். பாடுகிற ஆண்களின், பெண்களின் சத்தத்தைக் கேட்கவும் இயலாத அளவிற்கு வயதில் முதிர்ந்தவன். நீ ஏன் என்னைப்பற்றிக் கவலைப்படுகிறாய்?
2 சாமுவேல் 19 : 36 (ERVTA)
உன்னிடமிருந்து எனக்கு எந்த பரிசும் வேண்டாம். நான் உன்னோடு யோர்தான் நதியைத் தாண்டுவேன்.
2 சாமுவேல் 19 : 37 (ERVTA)
ஆனால் நான் திருப்பிப் போக அனுமதியுங்கள். அப்போது நான் எனது நகரத்தில் மரித்து எனது தந்தை, தாய் ஆகியோரின் கல்லறையில் அடக்கம் செய்யப்படுவேன். கிம்காம் உங்களுக்குப் பணியாளாயிருப்பான். எனது அரசனாகிய ஆண்டவனே, அவன் உங்களோடு வரட்டும். உங்கள் விருப்பப்படியே அவனை நடத்தும்” என்றான்.
2 சாமுவேல் 19 : 38 (ERVTA)
அரசன் பதிலாக, “கிம்காம் என்னோடு வருவான். உனக்காக நான் அவனிடம் இரக்கம் காட்டுவேன். நான் உனக்காக எதையும் செய்வேன்” என்றான்.
2 சாமுவேல் 19 : 39 (ERVTA)
தாவீது வீட்டிற்குப் போகிறான் அரசன் பர்சிலாவை முத்தமிட்டு வாழ்த்தினான். பர்சிலா வீட்டிற்குத் திரும்பிப் போனான். அரசனும் அவனது ஜனங்கள் எல்லோரும் நதியைக் கடந்தனர்.
2 சாமுவேல் 19 : 40 (ERVTA)
அரசன் யோர்தான் நதியைத் தாண்டி, கில்காலுக்குப் போனான். கிம்காம் அவனோடு சென்றான். யூதா ஜனங்கள் எல்லோரும் இஸ்ரவேலில் பாதிப் பகுதியினரும் தாவீதை நதியைத் தாண்டி அழைத்துச் சென்றனர்.
2 சாமுவேல் 19 : 41 (ERVTA)
யூதா மக்களோடு இஸ்ரவேலர் வாதாடுகின்றனர் இஸ்ரவேலர் எல்லோரும் அரசனிடம் வந்தனர். அவர்கள் அரசனைப் பார்த்து, “ஏன் எங்கள் சகோதரராகிய யூதா ஜனங்கள் உங்களைத் திருடிச் சென்று, இப்போது உங்களையும் உங்கள் குடும்பத்தையும், உங்கள் ஆட்களோடு யோர்தான் ஆற்றைத் தாண்டி அழைத்து வந்திருக்கின்றனர்!” என்றார்கள்.
2 சாமுவேல் 19 : 42 (ERVTA)
யூதாவின் ஜனங்கள் எல்லோரும் இஸ்ரவேலருக்குப் பதிலாக, “ஏனெனில் அரசன் எங்களுக்கு நெருங்கிய உறவினர் என்பதே அதன் காரணம். இந்த விஷயம் குறித்து நீங்கள் ஏன் கோபப்படுகிறீர்கள்? நாங்கள் ஒன்றும் அரசனின் செலவில் சாப்பிடவில்லை. அரசன் எங்களுக்கு எந்தப் பரிசும் தரவில்லை” என்றார்கள்.
2 சாமுவேல் 19 : 43 (ERVTA)
இஸ்ரவேலர் பதிலாக, “தாவீதிடம் எங்களுக்குப் பத்துப் பங்குகள் உள்ளன. எனவே உங்களைக் காட்டிலும் தாவீதிடம் எங்களுக்கு அதிக உரிமை உண்டு. ஆனால் நீங்கள் எங்களை மதிக்கவில்லை. நாங்கள் தாம் அரசரை அழைத்து வருவதைக்குறித்து முதலில் எடுத்துரைத்தோம்” என்றார்கள். ஆனால் யூதா ஜனங்கள் இஸ்ரவேலரிடம் கடுமையாக நடந்துக்கொண்டனர். யூத ஜனங்களுடைய வார்த்தைள் இஸ்ரவேல் ஜனங்களுடைய வார்த்தைகளைக்காட்டிலும் மிகவும் கடுமையாக இருந்தது.
❮
❯