2 இராஜாக்கள் 9 : 1 (ERVTA)
யெகூவை அபிஷேகம் செய்யும்படி எலிசா இளம் தீர்க்கதரிசிக்கு சொல்கிறான் தீர்க்கதரிசிகளின் குழுவிலிருந்து தீர்க்கதரிசியான எலிசா ஒருவனை அழைத்தான். அவனிடம், “புறப்படத் தயாராகு. இச்சிறிய குப்பியில் உள்ள எண்ணெயை உன் கையில் எடுத்துக்கொண்டு ராமோத் கீலே யாத்துக்குப் போ!
2 இராஜாக்கள் 9 : 2 (ERVTA)
நீ அங்கு போனதும், நிம்சியின் மகனான யோசபாத்தின் குமாரன் யெகூவைக் கண்டுபிடி. அவன் வீட்டிற்குள் போ. அவனது சகோதரர்களிடமிருந்து அழைத்து உள் அறைக்குப் போ.
2 இராஜாக்கள் 9 : 3 (ERVTA)
இந்த சிறிய எண்ணெய்க் குப்பியை எடுத்துக்கொண்டு எண்ணெயை அவன் தலையில் ஊற்றி, ‘இது கர்த்தர் சொன்னது: உன்னை இஸ்ரவேலுக்கு அரசன் ஆக்குகிறேன்’ என்று சொல். பிறகு கதவைத் திறந்துக்கொண்டு ஓடிவந்துவிடு. அங்கே தங்காதே” என்றான்.
2 இராஜாக்கள் 9 : 4 (ERVTA)
எனவே இந்த இளம் தீர்க்கதரிசி, ராமோத் கிலேயாத்திற்குச் சென்றான்.
2 இராஜாக்கள் 9 : 5 (ERVTA)
அவன் அங்கு நுழைந்ததும், படைத் தளபதி உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான். இவன் அவனிடம், “தலைவரே, உங்களுக்காக என்னிடம் ஒரு செய்தி உண்டு” என்றான். அதற்கு யெகூ, “இங்கு இருக்கிற அனைவரிலும் உமது செய்தி யாருக்குரியது?” என்று கேட்டான். உடனே இளம் தீர்க்கதரிசி, “இந்த செய்தி உங்களுக்குரியதுதான் தளபதியே” என்றான்.
2 இராஜாக்கள் 9 : 6 (ERVTA)
யெகூ எழுந்து வீட்டிற்குள் சென்றான். இளம் தீர்க்கதரிசி அவனது தலையில் எண்ணெயை ஊற்றி, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொன்னதைக் கூறுகிறேன்: ‘நான் உன்னை இஸ்ரவேலில் கர்த்தருடைய ஜனங்களின் மேல் அரசனாக அபிஷேகம் செய்கிறேன்.
2 இராஜாக்கள் 9 : 7 (ERVTA)
நீ உனது அரசனான ஆகாபின் குடும்பத்தை அழிக்கவேண்டும். இதன் மூலம், எனது வேலைக்காரர்களான தீர்க்கதரிசிகளின் இரத்தப் பழியையும் கர்த்தருடைய மரித்துப்போன சகல தொண்டர்களின் இரத்தப்பழியையும் யேசபேலின் கையிலே வாங்குவேன்.
2 இராஜாக்கள் 9 : 8 (ERVTA)
ஆகையால், ஆகாபின் குடும்பத்திலுள்ள அனைவரும் மரிப்பார்கள். ஆகாப் குடும்பத்திலுள்ள எந்த ஆண் குழந்தையையும் உயிரோடு விடமாட்டேன். அந்த ஆண் அடிமையாக இருந்தாலும் சரி அல்லது இஸ்ரவேலில் சுதந்திரமுள்ள ஆளாக இருந்தாலும் சரியே.
2 இராஜாக்கள் 9 : 9 (ERVTA)
நான் ஆகாபின் குடும்பத்தை நேபாத்தின் மகனான யெரொபெயாமின் குடும்பத்தைப் போலவும் அகியாவின் மகனான பாஷாவின் குடும்பத்தைப் போலவும் அழிப்பேன்.
2 இராஜாக்கள் 9 : 10 (ERVTA)
நாய்கள், யெஸ்ரயேல் பகுதியில் யேசபேலை தின்னும். அவள் அடக்கம் செய்யப்படமாட்டாள்’ ” என்றான். பிறகு அந்த இளம் தீர்க்கதரிசி கதவைத் திறந்துக் கொண்டு வெளியே ஓடிவிட்டான்.
2 இராஜாக்கள் 9 : 11 (ERVTA)
யெகூவை அரசனாக வேலைக்காரர்கள் அறிவிக்கிறார்கள் அரசனின் வேலைக்காரர்கள் (அதிகாரிகள்) இருந்த இடத்திற்கு யெகூ போனான். அந்த அதிகாரிகளில் ஒருவன், “எல்லாம் சரியாக உள்ளதா? ஏன் அந்தப் பைத்தியக்காரன் உன்னிடம் வந்தான்” என்று கேட்டான். யெகூ வேலைக்காரர்களிடம், “உங்களுக்கு அவனையும் அவனது பைத்தியகாரத்தனச் செயலையும் தெரியுமே” என்றான்.
2 இராஜாக்கள் 9 : 12 (ERVTA)
அதற்கு அதிகாரிகள், “இல்லை! உண்மையைச் சொல். அவன் என்ன சொன்னான்?” என்று கேட்க, யெகூ இளந்தீர்க்கதரிசி சொன்னதைக் கூறினான்: “அவன் என்னிடம், ‘கர்த்தர் சொன்னதாவது: நான் உன்னை இஸ்ரவேலின் அரசனாக அபிஷேகம் செய்கிறேன்’ என்றான்” என்று சொன்னான்.
2 இராஜாக்கள் 9 : 13 (ERVTA)
உடனே ஒவ்வொரு அதிகாரியும் தனது ஆடையைப் படிகளின் மேல் விரித்தனர். எக்காளத்தை ஊதி, “யெகூ அரசன் ஆனான்!” என்று அறிவித்தனர்.
2 இராஜாக்கள் 9 : 14 (ERVTA)
யெகூ யெஸ்ரயேலுக்குச் சென்றது எனவே நிம்சியின் மகன் யோசபாத்தின் மகனான யெகூ யோராமுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தான். அப்போது, யோராமும் இஸ்ரவேலரும் சேர்ந்து ஆராமின் அரசனான ஆசகேலிடமிருந்து ராமோத் கீலேயாத்தை பாதுகாக்க முயன்றனர்.
2 இராஜாக்கள் 9 : 15 (ERVTA)
யோராம் அரசன் ஆசகேலுக்கு எதிராகப் போரிட்டான். ஆனால் ஆராமிய வீரர்கள் யோராமைக் காயப்படுத்தினார்கள். அவனும் குணப்படுத்திக்கொள்ள யெஸ்ரயேலுக்குப் போனான். எனவே யெகூ, அதிகாரிகளிடம, “என்னை நீங்கள் புதிய அரசனாக ஏற்றுக்கொள்வதானால் நகரத்திலிருந்து எவரும் தப்பித்துப் போய் இந்தச் செய்தியை யெஸ்ரயேலின் சொல்லாதபடிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றான்.
2 இராஜாக்கள் 9 : 16 (ERVTA)
யோராம் யெஸ்ரயேலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான். எனவே யெகூ இரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்குப் போனான். அப்போது யூதாவின் அரசனான அகசியாவும் யோராமைப் பார்க்க வந்திருந்தான்.
2 இராஜாக்கள் 9 : 17 (ERVTA)
ஒரு காவல்காரன் யெஸ்ரயேல் நகரக் கோபுரத்தின் மீது நின்று பார்த்தான். யெகூவின் பெரிய கூட்டம் வருவதைக் கவனித்து, “ஒரு பெருங்கூட்டத்தைப் பார்க்கிறேன்” என்றான். யோராம், “சிலரைக் குதிரையில் அனுப்பி அவர்களை சந்தித்து. அவர்கள் சமாதானத்தோடு வருகிறார்களா என்று விசாரியுங்கள்” என்றான்.
2 இராஜாக்கள் 9 : 18 (ERVTA)
எனவே, தூதுவன் யெகூவை சந்திக்க குதிரையில் சென்றான். தூதுவன், “நீங்கள் சமாதானத்தோடு வருகிறீர்களா? என்று அரசன் கேட்கச் சொன்னார்” என்று கேட்டான். அதற்கு யெகூ, “சமாதானத்துடன் எந்த சம்பந்தமும் உனக்கு இல்லை! என்னைப் பின்தொடர்ந்து வா” என்றான். காவல்காரன் யோராமிடம், “தூதுவன் அந்தக் கூட்டத்தோடு சேர்ந்துவிட்டான். அவன் திரும்பி வரவில்லை” என்றான்.
2 இராஜாக்கள் 9 : 19 (ERVTA)
பிறகு யோராம் இரண்டாவது தூதுவனை குதிரையில் அனுப்பினான். அவன் யெகூவிடம் சென்று, “யோராம் அரசன் ‘சமாதானம்’ சொன்னான்” என்றான். அதற்கு யெகூ, “சமாதானத்திற்கும் உனக்கும் எந்த சம்பந்தமுமில்லை! என்னைப் பின்தொடர்ந்து வா” என்றான்.
2 இராஜாக்கள் 9 : 20 (ERVTA)
காவல்காரனோ யோராமிடம், “இரண்டாவது தூதுவனும் கூட்டத்தோடு சேர்ந்துக் கொண்டான். அவனும் திரும்பி வரவில்லை. ஒரு பைத்தியக்காரனைப் போன்று ஒருவன் இரதத்தை ஓட்டுகிறான். நிம்சியின் மகனான யெகூவைப்போல அவன் தேரோட்டுகிறான்” என்றான்.
2 இராஜாக்கள் 9 : 21 (ERVTA)
யோராம், “எனது இரதத்தைக் கொண்டு வா!” என்றான். வேலைக்காரர் அரசனின் இரதத்தைக் கொண்டு வந்தான். இஸ்ரவேலின் அரசனாகிய யோராமும் யூதாவின் அரசனான அகசியாவும் யெகூவை சந்திக்கச் சென்றார்கள். அவர்கள் அவனை யெஸ்ரயேலியனாகிய நாபோத்தின் நிலத்திலே சந்தித்தனர்.
2 இராஜாக்கள் 9 : 22 (ERVTA)
யோராம் யெகூவைப் பார்த்து, “யெகூ, நீ சமாதானமாக வந்திருக்கிறாயா” என்று கேட்டான். அதற்கு யெகூ, “உன் தாயான யேசபேல் விபச்சாரமும் சூன்யமும் செய்து கொண்டிருக்கும்வரை சமாதானமாக இருக்கமுடியாது” என்றான்.
2 இராஜாக்கள் 9 : 23 (ERVTA)
யோராம் குதிரையில் வேகமாகத் திரும்பினான். அவன் அகசியாவிடம், “அகசியா, இது தந்திரம்” என்றான்.
2 இராஜாக்கள் 9 : 24 (ERVTA)
ஆனால் யெகூ தன் பலத்தையெல்லாம் கூட்டி வில்லில் அம்பை எய்தான். அம்பு அவனது முதுகில் துளைத்து இதயத்தின் வழியாகச் சென்றது. அவன் இரதத்திலிருந்து விழுந்து மரித்தான்.
2 இராஜாக்கள் 9 : 25 (ERVTA)
யெகூ தனது இரத ஓட்டியான பித்காரிடம், “யோராமின் உடலை எடுத்து யெஸ்ரயேலியனாகிய நாபோத்தின் வயலில் ஏறி. நானும் நீயும் யோரோமின் தந்தையான ஆகாபோடு பயணம் செய்யும்போது, இவனுக்கு இவ்வாறே நிகழும் என்று கர்த்தர் சென்னதை எண்ணிப்பார்.
2 இராஜாக்கள் 9 : 26 (ERVTA)
கர்த்தர், ‘நேற்று நான் நாபோத் மற்றும் அவனது பிள்ளைகளின் இரத்தத்தைப் பார்த்தேன். நான் ஆகாபை இதே வயலில் தண்டிப்பேன்’, என்று சொன்னார்! எனவே, அவர் சொன்னபடியே, யோராமின் உடலை எடுத்து வயலுக்குள் வீசு!” என்றான்.
2 இராஜாக்கள் 9 : 27 (ERVTA)
யூதாவின் அரசனான அகசியா இதனைப் பார்த்து ஓடிப்போனான். அவன் தோட்ட வீட்டிற்குப்போக, யெகூ அவனைத் துரத்திப்போனான். யெகூ, “அகசியாவை அவன் இரதத்தில் வெட்டிப் போடுங்கள்” என்றான். எனவே யெகூவின் ஆட்கள் அகசியாவை இப்லேயாம், அருகிலுள்ள கூர் மலைக்கான சாலையில் எய்தனர். அவன் மெகிதோவுக்கு ஓடிப்போய் அங்கேயே மரித்துப்போனான்.
2 இராஜாக்கள் 9 : 28 (ERVTA)
அகசியாவின் வேலைக்காரர்கள் அவனது உடலை எடுத்துக் கொண்டு எருசலேமுக்கு வந்தனர். தாவீது நகரத்தில் முற்பிதாக்களின் கல்லறையில் அவனை அடக்கம் செய்தனர்.
2 இராஜாக்கள் 9 : 29 (ERVTA)
இஸ்ரவேல் அரசன் யோராமின் 11வது ஆட்சியாண்டில் அகசியா யூதாவின் அரசனாகினான்.
2 இராஜாக்கள் 9 : 30 (ERVTA)
யேசபேலின் பயங்கரமான மரணம் யெகூ யெஸ்ரயேலுக்குப் போனான். இச்செய்தியை யேசபேல் அறிந்தாள். தலையைச் சிங்காரித்து அலங்காரம் செய்து கொண்டு பிறகு ஜன்னல் வழியாகப் பார்த்தாள்.
2 இராஜாக்கள் 9 : 31 (ERVTA)
யெகூ நகரத்து வாசலில் நுழைந்ததும் அவள், “சிம்ரி! அவனை போல நீயும் உன் எஜமானனைக் கொன்றிருக்கிறாய்” என்றாள்.
2 இராஜாக்கள் 9 : 32 (ERVTA)
யெகூ மேலே ஜன்னலைப் பார்த்து, “என் பக்கத்தில் இருப்பது யார்?” என்று கேட்டான். மேலிருந்து இரண்டு மூன்று அலிகள் அவனைப் பார்த்தார்கள்.
2 இராஜாக்கள் 9 : 33 (ERVTA)
அவர்களிடம் யெகூ, “யேசபேலைக் கீழே தள்ளுங்கள்” என்றான். அவர்களும் அவ்வாறே கீழே அவளைத் தள்ளினார்கள். அவளது இரத்தத்தில் கொஞ்சம் சுவர் மீதும் குதிரைகள் மீதும் தெளித்தது. குதிரைகள் அவள் மேலே நடந்துச் சென்றன.
2 இராஜாக்கள் 9 : 34 (ERVTA)
யெகூ, வீட்டிற்குள் போய் உண்டு குடித்தான். அவன், “இப்போது சபிக்கப்பட்ட இந்தப் பெண்ணைப் பாருங்கள். அரசனின் மகளாகையால் அவளை அடக்கம் செய்யுங்கள்” என்றான்.
2 இராஜாக்கள் 9 : 35 (ERVTA)
அந்த ஆட்கள் அவளை அடக்கம்பண்ணச் சென்றனர். ஆனால் அவளது உடலைக் கண்டு பிடிக்க முடியவில்லை. அவர்கள் அவளது கபாலம், கால்கள், கைகள், ஆகியவற்றையே கண்டுபிடித்தனர்.
2 இராஜாக்கள் 9 : 36 (ERVTA)
அவர்கள் யெகூவிடம் திரும்பிவந்தனர். பிறகு யெகூ, “இது கர்த்தர் திஸ்பியனாகிய எலியா என்னும் தமது தொண்டனைக் கொண்டு சொன்ன வார்த்தை: ‘யெஸ்ரயேலின் நிலத்தில் யேசபேலின் மாமிசத்தை நாய்கள் தின்னும், என்றும்
2 இராஜாக்கள் 9 : 37 (ERVTA)
இதுதான் யேசபேல் என்று சொல்ல முடியாதபடி அவளது பிணம் வயல் வெளியில் போடப்படும் எருவைப் போன்று ஆகும்’ ” என்றான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37