2 கொரிந்தியர் 7 : 1 (ERVTA)
அன்புள்ள நண்பர்களே! தேவனிடமிருந்து இந்த வாக்குறுதிகளைப் பெற்றிருக்கிறோம். எனவே, நாம் நம் சரீரத்தையும், ஆத்துமாவையும் அசுத்தப்படுத்தும் எதனிடமிருந்தும் முழுக்க முழுக்க விலகி நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் நமது வாழ்க்கை முறையிலேயே மிகச் சரியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். ஏனென்றால் நாம் தேவனை மதிக்கிறோம்.
2 கொரிந்தியர் 7 : 2 (ERVTA)
பவுலின் மகிழ்ச்சி எங்களுக்காக உங்கள் இதயங்களைத் திறந்து வைத்திருங்கள். நாங்கள் யாருக்கும் தீமை செய்ததில்லை. நாங்கள் எவரது நம்பிக்கையையும் அழித்ததில்லை. எவரையும் ஏமாற்றியதில்லை.
2 கொரிந்தியர் 7 : 3 (ERVTA)
உங்களைக் குற்றம் சாட்டுவதற்காக இதனைக் கூறவில்லை. எங்கள் வாழ்வும் சாவும் உங்கள் உடனே இருக்கும் அளவுக்கு உங்களை நாங்கள் நேசிக்கிறோம் என்பதை ஏற்கெனவே உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன்.
2 கொரிந்தியர் 7 : 4 (ERVTA)
நான் உங்களைப் பற்றி உறுதியாக உணர்கிறேன். உங்களைப் பற்றிப் பெருமைப்படுகிறேன். நீங்கள் எனக்கு மிகுந்த தைரியம் கொடுக்கிறீர்கள். அதனால் அனைத்து துன்பங்களுக்கு இடையிலும் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.
2 கொரிந்தியர் 7 : 5 (ERVTA)
நாங்கள் மக்கதோனியாவுக்கு வந்தபோது எங்களுக்கு ஓய்வு இல்லாமல் இருந்தது. எங்களைச் சுற்றிலும் நெருக்கடிகள் இருந்தன. நாங்கள் வெளியே போராடிக்கொண்டும் உள்ளுக்குள் பயந்துகொண்டும் இருந்தோம்.
2 கொரிந்தியர் 7 : 6 (ERVTA)
ஆனால் தேவன் துன்பப்படுகிறவர்களுக்கு ஆறுதல் தருகிறார். தீத்து வந்தபோது தேவன் ஆறுதல் தந்தார்.
2 கொரிந்தியர் 7 : 7 (ERVTA)
அவனது வருகையிலும், நீங்கள் அவனுக்குக் கொடுத்த ஆறுதலாலும் நாங்கள் ஆறுதலடைந்தோம். என்னை நீங்கள் பார்க்க விரும்பியதைப் பற்றி தீத்து கூறினான். உங்களது தவறுகளுக்கு நீங்கள் வருந்தியது பற்றியும் கூறினான். என்மீது நீங்கள் கொண்ட அக்கறையைப் பற்றி அவன் சொன்னபோது மகிழ்ச்சி அடைந்தேன்.
2 கொரிந்தியர் 7 : 8 (ERVTA)
நான் உங்களுக்கு எழுதிய நிருபம் ஏதேனும் வருத்தத்தை தந்திருக்குமானால் அதை எழுதியதற்காக நான் இப்பொழுது வருத்தப்படவில்லை. அந்நிருபம் உங்களுக்கு வருத்தத்தை தந்தது என அறிவேன். அதற்காக அப்பொழுது வருந்தினேன். ஆனால் அது கொஞ்ச காலத்துக்குத்தான் உங்களுக்குத் துயரத்தைத் தந்தது.
2 கொரிந்தியர் 7 : 9 (ERVTA)
இப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது நீங்கள் துயரப்படும்படி ஆனதால் அன்று. அத்துயரம் உங்கள் இதயங்களை மாற்றியதற்காக நான் மகிழ்கிறேன். தேவனுடைய விருப்பப்படியே நீங்கள் துக்கப்பட்டீர்கள். எனவே நீங்கள் எங்களால் எவ்வகையிலும் பாதிக்கப்படவில்லை.
2 கொரிந்தியர் 7 : 10 (ERVTA)
தேவனுடைய விருப்பப்படி நேரும் வருத்தம் ஒருவனது இதயத்தை மாற்றி, வாழ்வையும் மாற்றுகிறது. அவனுக்கு இரட்சிப்பையும் தருகிறது. அதற்காக வருத்தப்படவேண்டாம். ஆனால் உலகரீதியிலான துயரங்களோ மரணத்தை வரவழைக்கின்றது.
2 கொரிந்தியர் 7 : 11 (ERVTA)
தேவனின் விருப்பப்படியே நீங்கள் வருத்தம் அடைந்தீர்கள். இப்பொழுது அவ்வருத்தம் உங்களுக்கு எதைக் கொண்டு வந்தது என்று பாருங்கள். அது உங்களிடம் ஜாக்கிரதையை உருவாக்கியது. குற்றமற்றவர்கள் என உங்களை நிரூபிக்கத் தூண்டியது. அது கோபத்தையும், பயத்தையும் தந்தது. அது என்னைக் காணத் தூண்டியது. அது உங்களை அக்கறை கொள்ளச் செய்தது. அது நல்லவற்றைச் செய்ய ஒரு காரணமாயிற்று. இக்காரியத்தில் எவ்விதத்திலும் நீங்களும் குற்றம் இல்லாதவர்கள் என்று உங்களை நிரூபித்துக்கொண்டீர்கள்.
2 கொரிந்தியர் 7 : 12 (ERVTA)
நான் உங்களுக்கு நிருபம் எழுதியதின் காரணம் ஒருவன் தவறு இழைத்துவிட்டான் என்பதாலல்ல, அதேபோல ஒருவன் பாதிக்கப்பட்டுவிட்டான் என்பதாலும் உங்களுக்கு நிருபம் எழுதவில்லை. தேவனுக்கு முன்பாக உங்களுக்காக நாங்கள் கொண்டுள்ள அக்கறையை நீங்கள் காணும்பொருட்டே அப்படி எழுதினேன். இதனால்தான் நாங்கள் ஆறுதலடைந்தோம்.
2 கொரிந்தியர் 7 : 13 (ERVTA)
நாங்கள் மிகவும் ஆறுதலடைந்தோம். தீத்து மகிழ்ச்சியாக இருப்பதை அறிந்து நாங்களும் மகிழ்ச்சியடைந்தோம். அவன் நலமடைய நீங்கள் அனைவரும் உதவினீர்கள்.
2 கொரிந்தியர் 7 : 14 (ERVTA)
உங்களைப் பற்றி தீத்துவிடம் பெருமையாகச் சொன்னவை அனைத்தும் உண்மை என்பதை நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள். உங்களுக்கு நாங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மையாகும்.
2 கொரிந்தியர் 7 : 15 (ERVTA)
நீங்கள் கீழ்ப்படியத் தயாராக இருக்கிறீர்கள். இதை நினைத்து தீத்து உங்கள் மீது உறுதியான அன்பைக் கொண்டிருக்கிறான். நீங்கள் அவனைப் பயத்தோடும் மரியாதையோடும் ஏற்றுக்கொண்டீர்கள்.
2 கொரிந்தியர் 7 : 16 (ERVTA)
நான் உங்களை முழுமையாக நம்பலாம் என்பதில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16