1 தீமோத்தேயு 4 : 1 (ERVTA)
தவறான போதகர்களைப் பற்றி எச்சரிக்கை வருங்காலத்தில் சிலர் உண்மையான போதனையை நம்புவதை நிறுத்திவிடுவார்கள் என்று தூய ஆவியானவர் கூறி இருக்கிறார். அவர்கள் பொய் சொல்லும் ஆவிகளுக்குத் தலைவணங்குவார்கள். அவர்கள் பிசாசுகளின் போதனைகளைப் பின்பற்றுவார்கள்.
1 தீமோத்தேயு 4 : 2 (ERVTA)
பொய்யும், தந்திரமும் உடையவர்கள் மூலம் அத்தீய போதனைகள் வருகிறது. அந்த மக்கள் சரி எது, தவறு எது என்று பார்க்கமாட்டார்கள். அவர்களுடைய புரிந்துகொள்ளும் தன்மை, சூடு போடப்பட்டு, அழிக்கப்பட்டதைப் போன்றது.
1 தீமோத்தேயு 4 : 3 (ERVTA)
அவர்கள் திருமணம் செய்யக்கூடாது என்கின்றனர். சில உணவு வகைகளை உண்ணக் கூடாது என்று கூறுகின்றனர். ஆனால் அந்த உணவுகளை தேவனே படைத்திருக்கிறார். நம்புகிறவர்களும், உண்மையை அறிந்தவர்களும் அவற்றை நன்றியோடு உண்ணலாம்.
1 தீமோத்தேயு 4 : 4 (ERVTA)
தேவனால் படைக்கப்பட்ட அனைத்துமே நல்லதுதான். நன்றிக் கடனாகப் பெறுகிறவரையில் தேவனால் உருவாக்கப்பட்ட எதையும் மறுக்கக்கூடாது.
1 தீமோத்தேயு 4 : 5 (ERVTA)
தேவனால் படைக்கப்பட்டவை எல்லாம் தேவனுடைய வார்த்தையாலும் பிரார்த்தனைகளாலும் தூய்மையாக்கப்படும்.
1 தீமோத்தேயு 4 : 6 (ERVTA)
கிறிஸ்துவின் நல்ல வேலையாளாக இரு அங்குள்ள சகோதர சகோதரிகளிடமும் இவற்றைக் கூறு. இவை நீ இயேசு கிறிஸ்துவின் நல்ல வேலையாள் என்பதைக் காட்டும். விசுவாசமான வார்த்தைகளாலும், பின்பற்றப்படுகிற நல்ல போதனையாலும் நீ பலப்படுத்தப்படுகிறாய் என்றும் காட்டுவாய்.
1 தீமோத்தேயு 4 : 7 (ERVTA)
மக்கள் சொல்கிற அர்த்தமற்ற கதைகள் தேவனுடைய உண்மையோடு சற்றும் பொருந்தாதவை. அவற்றின் கூற்றுக்களைப் பின்பற்றாதே. தேவனுக்கு உண்மையான சேவையைச் செய்ய கற்றுக்கொள்.
1 தீமோத்தேயு 4 : 8 (ERVTA)
உடற்பயிற்சியானது சில வழிகளில் உதவிகரமானது. ஆனால் தேவபக்தியானது எல்லா வழிகளிலும் உதவுவதாகும். அது இவ்வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல் இனிவரும் வாழ்வுக்கும் ஆசீர்வாதம் தரும்.
1 தீமோத்தேயு 4 : 9 (ERVTA)
நான் சொல்வதெல்லாம் உண்மை, அவற்றை முழுமையாக நீ ஏற்றுக்கொள்ளவேண்டும்.
1 தீமோத்தேயு 4 : 10 (ERVTA)
இதற்காகத் தான் நாம் உழைக்கிறோம். போராடுகிறோம்; தேவனில் விசுவாசம் கொள்கிறோம்; அவரே அனைத்து மக்களின் மீட்பராக இருக்கிறார். அதோடு விசுவாசிகளுக்குச் சிறப்பான முறையில் மீட்பராக இருக்கிறார்.
1 தீமோத்தேயு 4 : 11 (ERVTA)
கட்டளையிட்டு இவ்விஷயங்களைப் போதனை செய்.
1 தீமோத்தேயு 4 : 12 (ERVTA)
நீ இளமையாக இருக்கிறாய். ஆனால் உன்னை முக்கியம் அற்றவனாக நடத்த யாரையும் அனுமதிக்காதே. விசுவாசம் உடையவர்கள் எப்படி வாழவேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக இரு. வார்த்தையிலும், வாழும் வகையிலும், அன்பிலும், விசுவாசத்திலும், தூய நடத்தையிலும் விசுவாசிகளுக்கு முன் மாதிரியாக இரு.
1 தீமோத்தேயு 4 : 13 (ERVTA)
மக்களுக்குத் தொடர்ந்து வேதவாக்கியங்களை வாசித்துக்காட்டு. அவர்களை பலப்படுத்து, அவர்களுக்குப் போதனைசெய். நான் வரும்வரை இவற்றைச் செய்.
1 தீமோத்தேயு 4 : 14 (ERVTA)
உனக்குக் கிடைத்துள்ள வரத்தைப் பயன்படுத்த நினைவுகொள். மூப்பராகிய சபையோர் உன் மேல் கைகளை வைத்தபோது தீர்க்கதரிசனத்தின் மூலம் இந்த வரத்தைப் பெற்றாய்.
1 தீமோத்தேயு 4 : 15 (ERVTA)
இவற்றைத் தொடர்ந்து செய். இவற்றுக்காக உன் வாழ்வைக் கொடு. பிறகு, உன் பணியின் வளர்ச்சியை அனைவரும் கண்டுகொள்வர்.
1 தீமோத்தேயு 4 : 16 (ERVTA)
உன் வாழ்விலும் போதனையைக் குறித்து எச்சரிக்கையாக இரு. சரியாய் வாழ்ந்து இவற்றைப் போதனை செய். அதனால் உன் வாழ்வையும், உன் போதனையைக் கேட்பவர்களின் வாழ்வையும் நீ காப்பாற்றிக்கொள்ள முடியும்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16