1 சாமுவேல் 23 : 1 (ERVTA)
கேகிலாவில் தாவீது ஜனங்கள் தாவீதிடம், “பாருங்கள் பெலிஸ்தியர்கள் கேகிலாவிற்கு எதிராகப் போரிடுகிறார்கள். அவர்கள் அறுவடை களத்திலிருந்து தானியங்களைக் கொள்ளையிடுகிறார்கள்” என்றனர்.
1 சாமுவேல் 23 : 2 (ERVTA)
உடனே தாவீது கர்த்தரிடம், “நான் போய் பெலிஸ்தியர்களோடு போரிடட்டுமா?” என்று கேட்டான். கர்த்தர், “ஆமாம் நீ பெலிஸ்தியர்களோடு போரிட்டு கேகிலாவைக் காப்பாற்று” என்று பதிலுரைத்தார்.
1 சாமுவேல் 23 : 3 (ERVTA)
ஆனால் தாவீதைச் சேர்ந்தவர்கள், “பாருங்கள், யூதாவில் உள்ள நாங்களே பயந்து போயுள்ளோம். பெலிஸ்தியர்கள் இருக்கும் இடத்திற்குப் போனால் எவ்வளவு பயப்படுவோம் என எண்ணிப்பாரும்” என்றனர்.
1 சாமுவேல் 23 : 4 (ERVTA)
தாவீது மீண்டும் கர்த்தரிடம் கேட்டான். கர்த்தர், “கேகிலாவிற்குப் போ, பெலிஸ்தியர்களை வெல்ல நான் உதவுவேன்” என்றார்.
1 சாமுவேல் 23 : 5 (ERVTA)
எனவே, தாவீதும் அவனது ஆட்களும் கேகிலாவிற்கு சென்றனர். அவர்கள் பெலிஸ்தியரோடு சண்டையிட்டு தோற்கடித்து, அவர்களின் மந்தைகளைக் கவர்ந்துகொண்டனர். இவ்வாறு, தாவீது கேகிலாவைக் காப்பாற்றினான்.
1 சாமுவேல் 23 : 6 (ERVTA)
(அபியத்தார் தாவீதிடம் ஓடிப்போனபோது அவன் தன்னோடு ஏபோத்தையும் கொண்டு சென்றான்.)
1 சாமுவேல் 23 : 7 (ERVTA)
ஜனங்கள் சவுலிடம் வந்து தாவீது கேகிலாவில் இருப்பதை அறிவித்தனர். அதற்கு சவுல் “தேவன் தாவீதை எனக்குக் கொடுத்தார்! அவன் தானே வலைக்குள் விழுந்திருக்கிறான். அவன் பூட்டிப் போடக்கூடிய கோட்டைக் கதவுகளை உடைய நகரத்திற்குள் போய்விட்டான்” என்றான்.
1 சாமுவேல் 23 : 8 (ERVTA)
சவுல் தனது படை வீரர்களைப் போரிடுவதற்காகக் கூட்டினான். அவர்கள் கேகிலாவிற்கு சென்று தாவீதையும் அவனது ஆட்களையும் தாக்கத் தயாரானார்கள்.
1 சாமுவேல் 23 : 9 (ERVTA)
தனக்கு எதிரான சவுலின் திட்டங்களைத் தாவீது அறிந்துக்கொண்டான். பிறகு ஆசாரியனாகிய அபியத்தாரிடம், “ஏபோத்தை கொண்டு வா” என்றான்.
1 சாமுவேல் 23 : 10 (ERVTA)
தாவீது, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, எனக்காக சவுல் இந்நகரத்திற்கு வந்து அதை அழிக்கப்போவதாக அறிந்தேன்.
1 சாமுவேல் 23 : 11 (ERVTA)
சவுல் கேகிலாவிற்கு வருவாரா? இங்குள்ள ஜனங்கள் என்னை சவுலிடம் ஒப்படைப்பார்களா? இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தாவே! நான் உமது தாசன்! தயவு செய்து சொல்லும்!” என்று வேண்டினான். “சவுல் வருவான்” என்று கர்த்தர் பதிலுரைத்தார்.
1 சாமுவேல் 23 : 12 (ERVTA)
மீண்டும் தாவீது, “என்னையும் எனது ஆட்களையும் கேகிலா ஜனங்கள் சவுலிடம் ஒப்படைத்துவிடுவார்களா?” என்று கேட்டான். “அவர்கள் செய்வார்கள்” என்று கர்த்தர் சொன்னார்.
1 சாமுவேல் 23 : 13 (ERVTA)
எனவே தாவீதும் அவனது ஆட்களும் கேகிலாவை விட்டு விலகினார்கள். அவனோடு 600 பேர் சென்றனர். அவர்கள் ஒவ்வொரு இடமாக நகர்ந்தனர். கேகிலாவிலிருந்து தாவீது தப்பிவிட்டதை சவுல் அறிந்தான். எனவே அவன் அந்நகரத்திற்குப் போகவில்லை.
1 சாமுவேல் 23 : 14 (ERVTA)
சவுல் தாவீதைத் துரத்துகிறான் பாலைவனத்தின் கோட்டைகளில் தாவீது மறைந்திருந்தான். அவன் சீப் பாலைவனத்தில் உள்ள மலை நகரத்திற்குச் சென்றான். ஒவ்வொரு நாளும் சவுல் தாவீதைத்தேடினான். ஆனால் சவுல் தாவீதைப் பிடிக்கும்படி கர்த்தர் அனுமதிக்கவில்லை.
1 சாமுவேல் 23 : 15 (ERVTA)
சீப் பாலைவனத்தில் உள்ள ஓரேஷில் தாவீது இருந்தான். சவுல் அவனைக் கொல்ல முயன்றதால் அவன் பயந்தான்.
1 சாமுவேல் 23 : 16 (ERVTA)
ஆனால் சவுலின் மகனான யோனத்தான் ஓரேஷில் தாவீதை சந்தித்தான். தேவனில் உறுதியான நம்பிக்கையை வைக்கும்படி யோனத்தான் தாவீதுக்கு உதவினான்.
1 சாமுவேல் 23 : 17 (ERVTA)
யோனத்தான், “பயப்படாதே என் தந்தையான சவுல் உன்னைக் கொல்லமாட்டார். நீ இஸ்ரவேலின் அரசனாவாய். நான் உனக்கு அடுத்தவனாக இருப்பேன். இதுவும் என் தந்தைக்குத் தெரியும்” என்றான்.
1 சாமுவேல் 23 : 18 (ERVTA)
யோனத்தானும், தாவீதும் கர்த்தருக்கு முன்னால் ஒரு ஒப்பந்தம் செய்துக் கொண்டனர். யோனத்தான் தன் வீட்டிற்குப் போக, தாவீது ஓரேஷிலேயே தங்கினான்.
1 சாமுவேல் 23 : 19 (ERVTA)
சீப்பிலுள்ள ஜனங்கள் தாவீதைப் பற்றி சவுலிடம் சொல்கின்றனர் சீப்பிலுள்ள ஜனங்கள் சவுலைப் பார்க்க கிபியாவிற்குச் சென்றனர். அவர்கள், “எங்கள் பகுதியில் தான் தாவீது ஒளிந்திருக்கிறான். அவன் ஆகிலா மேட்டில் உள்ள, ஓரேஷ் கோட்டைக்குள் இருக்கிறான். அது யெஷிமோனின் தெற்கில் உள்ளது.
1 சாமுவேல் 23 : 20 (ERVTA)
இப்போது அரசே நீர் விரும்பும் எந்தக் காலத்திலும் இறங்கி வாரும். தாவீதை உங்களிடம் ஒப்படைப்பது எங்கள் கடமை” என்றார்கள்.
1 சாமுவேல் 23 : 21 (ERVTA)
சவுலோ, “எனக்கு உதவினதற்காக கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
1 சாமுவேல் 23 : 22 (ERVTA)
போய், அவனைப்பற்றி அதிகமாகத் தெரிந்துக்கொள்ளுங்கள். தாவீது எங்கே தங்கியிருக்கிறான்? அவனை யார் யார் வந்து சந்திக்கின்றனர். தாவீது தந்திரக்காரன். அவன் என்னை ஏமாற்ற விரும்புகிறான் என்று நினைத்தான்,
1 சாமுவேல் 23 : 23 (ERVTA)
தாவீது ஒளிந்துள்ள எல்லா இடங்களையும் அறிந்துகொள்ளுங்கள். பின் என்னிடம் வந்து எல்லாவற்றையும் கூறுங்கள். பின் நான் உங்களோடு வருவேன். தாவீது அந்தப் பகுதியில் இருந்தால் அவனைக் கண்டுபிடிப்பேன். யூதாவில் உள்ள அனைத்துக் குடும்பங்களிலும் அவனைத் தேடிக் கண்டுபிடிப்பேன்” என்றான்.
1 சாமுவேல் 23 : 24 (ERVTA)
பின்னர் சீப்பிலுள்ள ஜனங்கள் திரும்பிப் போனார்கள். சவுல் தாமதமாகப் போனான். தாவீதும் அவனது ஆட்களும் மாகோன் பாலைவனத்தில் இருந்தனர். அவர்கள் இருந்த பகுதி எஷிமோனின் தென் பகுதியில் இருந்தது.
1 சாமுவேல் 23 : 25 (ERVTA)
சவுல் தன் ஆட்களோடு தாவீதைத் தேடிச் சென்றான். சவுல் தேடுவதாக ஜனங்கள் தாவீதை எச்சரித்தனர். அதனால் மாவோனில் உள்ள “கன்மலையில்” தாவீது இறங்கினான். சவுல் இதனை அறிந்து அங்கும் தாவீதைத் தேடிப்போனான்.
1 சாமுவேல் 23 : 26 (ERVTA)
சவுல் மலையின் ஒரு பகுதியில் இருந்த போது தாவீதும் அவனது ஆட்களும் அடுத்த பகுதியில் இருந்தனர். தாவீது சவுலை விட்டு விரைவாக விலகினான். சவுலும் அவனது ஆட்களும் மலையைச் சுற்றிப் போய் தாவீதையும் அவனது ஆட்களையும் பிடிக்க முயன்றனர்.
1 சாமுவேல் 23 : 27 (ERVTA)
அப்போது ஒரு தூதுவன் சவுலிடம் வந்து, “வேகமாக வாருங்கள்! பெலிஸ்தியர் நம்மை தாக்கப் போகின்றனர்!” என்றான்.
1 சாமுவேல் 23 : 28 (ERVTA)
எனவே சவுல் தாவீதைத் துரத்துவதை விட்டு பெலிஸ்தியரோடு சண்டையிடப் போனான். எனவே ஜனங்கள் இந்த மலையை “வழுக்கும் பாறை” அல்லது “சேலா அம்மாலிகோத்” என்று அழைக்கின்றனர்.
1 சாமுவேல் 23 : 29 (ERVTA)
தாவீது அவ்விடத்தை விட்டு என்கேதியிலுள்ள கோட்டைகளுக்குச் சென்றான்.
❮
❯