1 சாமுவேல் 10 : 1 (ERVTA)
சாமுவேல் சவுலை அபிஷேகம் செய்கிறான் சாமுவேல் சிறப்புக்குரிய எண்ணெய் இருக்கும் ஜாடியை எடுத்தான். அதனைச் சவுலின் தலையில் ஊற்றி, முத்தமிட்டுச் சொன்னான், “கர்த்தர் உன்னை இஸ்ரவேல் ஜனங்களின் தலைவனாக அபிஷேகித்திருக்கிறார். கர்த்தருடைய ஜனங்களை நீ கட்டுப்படுத்துவாய். அவர்களைச் சுற்றியுள்ள எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவாய். கர்த்தர் உன்னை அவருடைய ஜனங்களின் மேல் அரசனாக்கியுள்ளார். இது உண்மை என்பதை நிரூபிக்க ஒரு அடையாளம் உள்ளது.
1 சாமுவேல் 10 : 2 (ERVTA)
இன்று நீ என்னை விட்டுப் போனதும் பென்யமீன் எல்லையில் செல்சாவில் ராகேலின் கல்லறை அருகில் இருவரைக் காண்பாய். அவர்கள் உன்னிடம், ‘நீ தேடிப் போன கழுதைகள் கிடைத்தன. உன் தந்தை கழுதைகளைப்பற்றிய கவலைகளை விட்டுவிட்டார். இப்போது அவர் உன்னைப் பற்றி கவலைப்படுகிறார். அவர், என் மகனுக்காக என்ன செய்வேன்?’ என்கிறார் என்பார்கள்” என்றான்.
1 சாமுவேல் 10 : 3 (ERVTA)
மேலும் சாமுவேல் “பின்பு தாபோரிலுள்ள பெரிய சிந்தூர மரத்தடிவரை போவாய், அங்கே மூன்று பேர் உண்னை சந்திப்பார்கள். அவர்கள் பெத்தேலுக்கு தேவனை தொழுதுகொள்ளச் செல்பவர்கள். அவர்களில் ஒருவன் மூன்று வெள்ளாட்டுக் குட்டிகளையும், இன்னொருவன் மூன்று அப்பங்களையும், மூன்றாமவன் ஒரு புட்டி திராட்சை ரசத்தையும் வைத்திருப்பார்கள்.
1 சாமுவேல் 10 : 4 (ERVTA)
அவர்கள் உனது நலனை விசாரிப்பார்கள். அவர்கள் இரண்டு அப்பங்களைத் தருவார்கள். நீ அவர்களிடம் அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
1 சாமுவேல் 10 : 5 (ERVTA)
பிறகு நீ கிபியாத் எலோகிமுக்குப் போவாய். அங்கே பெலிஸ்தரின் கோட்டை உண்டு. நீ நகரத்துக்குள் போகும் போது தீர்க்கதரிசிகளின் கூட்டம் ஒன்று வெளியே வரும். அவர்கள் ஆராதனை ஸ்தலத்திலிருந்து வருவார்கள். அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்வார்கள். அவர்கள் சுரமண்டலமும், தம்புரும், புல்லாங்குழலும், இரட்டை வால் யாழும் இசைப்பார்கள்.
1 சாமுவேல் 10 : 6 (ERVTA)
அப்பொழுது கர்த்தருடைய ஆவியானவர் மிகுந்த வல்லமையோடு உன் மீது இறங்குவார். நீயும் அவர்களோடு சேர்ந்து தீர்க்கதரிசனம் சொல்லி வேறு மனிதன் ஆவாய்.
1 சாமுவேல் 10 : 7 (ERVTA)
இவை ஆனதும், தேவன் உன்னோடு இருப்பதால் சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி செய்ய ஆரம்பி.
1 சாமுவேல் 10 : 8 (ERVTA)
“நீ எனக்கு முன்னால் கில்காலுக்கு இறங்கிப்போ. நான் பிறகு அங்கு வருவேன். நான் சர்வாங்க தகன பலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்துவேன். ஆனால் நீ 7 நாட்கள் காத்திருக்க வேண்டும். பிறகு நீ செய்ய வேண்டியவற்றைப்பற்றி நான் சொல்வேன்” என்றார்.
1 சாமுவேல் 10 : 9 (ERVTA)
சவுல் தீர்க்கதரிசிகளைப் போல் ஆகிறான் சவுல் சாமுவேலை விட்டு போனபோது, தேவன் சவுலின் வாழ்க்கையை மாற்றினார். அந்த நாளில் இந்த அடையாளங்கள் எல்லாம் நடந்து முடிந்தன.
1 சாமுவேல் 10 : 10 (ERVTA)
சவுலும் அவனது வேலைக்காரனும் கிபியாத் எலோகிம் மலைக்குச் சென்றனர். அங்கே, அவன் தீர்க்கதரிசிகளின் குழுவை சந்தித்தான். தேவனுடைய ஆவியானவர் மிகுந்த வல்லமையோடு சவுலின் மேல் இறங்கினார். அவனும், தீர்க்கதரிசிகளுடன் தீர்க்கதரிசனம் சொன்னான்.
1 சாமுவேல் 10 : 11 (ERVTA)
அவனை முன்பே அறிந்திருந்தவர்கள் அவன் தீர்க்கதரிசிகளோடு சேர்ந்து தீர்க்கதரிசனம் சொல்வதைக் கண்டனர். அவர்கள், “கீஸின் மகனுக்கு என்ன ஆயிற்று? சவுலும் ஒரு தீர்க்கதரிசியா?” என்று பேசிக்கொண்டனர்.
1 சாமுவேல் 10 : 12 (ERVTA)
கிபியாத் ஏலோமில் வாழும் ஒருவன் “ஆமாம்! அவன்தான் அவர்களின் தலைவன்” என்றான். அதனால் “சவுலும் தீர்க்கதரிசிகளுள் ஒருவனோ?” என்பது மிகவும் புகழ் வாய்ந்தப் பழமொழி ஆனது.
1 சாமுவேல் 10 : 13 (ERVTA)
சவுல் வீட்டிற்கு திரும்புகிறான் சவுல் தீர்க்கதரிசனம் சொல்லி முடித்த பின், தன் வீட்டிற்கு அருகிலுள்ள தொழுதுகொள்ளுகிற இடத்திற்கு வந்தான்.
1 சாமுவேல் 10 : 14 (ERVTA)
அப்போது சவுலின் சிறிய தகப்பன் சவுலிடமும் அவனது வேலைக்காரனிடமும், “நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்?” எனக் கேட்டான். “நாங்கள் கழுதைகளைத் தேடிப் போனோம். கிடைக்காததால் சாமுவேலை சந்திக்கச் சென்றோம்” என்றான்.
1 சாமுவேல் 10 : 15 (ERVTA)
“சாமுவேல் என்ன சொன்னார் என்று தயவு செய்து சொல்?” எனச் சவுலின் சிறிய தகப்பன் கேட்டான்.
1 சாமுவேல் 10 : 16 (ERVTA)
அதற்கு சவுல், “சாமுவேல் கழுதைகள் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன என்று சொன்னார்” என்று பதிலுரைத்தான். அரசாட்சியைப்பற்றி சாமுவேல் கூறியதைப் பற்றி சவுல் எதுவும் சொல்லவில்லை.
1 சாமுவேல் 10 : 17 (ERVTA)
சவுலை அரசனாக சாமுவேல் அறிவிக்கிறான் சாமுவேல் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரிடமும் மிஸ்பாவில் கர்த்தரை சந்திக்க கூடுமாறு கூறினான்
1 சாமுவேல் 10 : 18 (ERVTA)
சாமுவேல் இஸ்ரவேலரைப் பார்த்து, “இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் கூறுகிறார். ‘நான் இஸ்ரவேலரை எகிப்திற்கு வெளியே அழைத்து வந்தேன். உங்களுக்குத் தீங்கு செய்ய முயன்ற எகிப்தியர்களிடமிருந்தும் மற்ற அரசுகளிடமிருந்தும் நான் உங்களைக் காப்பாற்றினேன்’
1 சாமுவேல் 10 : 19 (ERVTA)
ஆனால், இன்று நீங்கள் உங்கள் தேவனை ஒதுக்கிவிட்டீர்கள். உங்களது துன்பங்களிலிருந்தும் சிக்கல்களிலிருந்தும் உங்கள் தேவன் காப்பாற்றினார். ஆனால் நீங்களோ, ‘எங்களை ஆள ஒரு அரசன் வேண்டும்’ என்கிறீர்கள். இப்போது நீங்கள் உங்கள் குடும்பத்தோடும் கோத்திரங்களோடும் கர்த்தருக்கு முன்பு சேர்ந்து நில்லுங்கள்” என்றான்.
1 சாமுவேல் 10 : 20 (ERVTA)
சாமுவேல் இஸ்ரவேலர்களின் எல்லா கோத்திரங்களையும் கூட்டினான். பின் புதிய அரசனைத் தேர்ந்தெடுத்தான். முதலில் பென்யமீனின் கோத்திரத்தைத் தேர்ந்தெடுத்தான்.
1 சாமுவேல் 10 : 21 (ERVTA)
அவன் பென்யமீன் கோத்திரத்தின் ஒவ்வொரு குடும்பங்களையும் வந்து கடந்துப்போகச் சொல்லின பின்பு மாத்திரி குடும்பம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அவர்களின் குடும்பம் கடந்துபோகும்போது கீசின் மகனாகிய சவுலும் தேர்ந்தெடுக்கப்பட்டான். ஆனால் ஜனங்கள் அவனைத் தேடியபோது அவன் காணப்படவில்லை
1 சாமுவேல் 10 : 22 (ERVTA)
பிறகு அவர்கள் கர்த்தரிடம், “அவன் இன்னும் இங்கே வரவில்லையா?” எனக் கேட்டனர். அதற்கு கர்த்தர், “சவுல் கிடங்கில் பொருட்களுக்கு மறைவில் ஒளிந்துக் கொண்டிருக்கிறான்” என்றார்.
1 சாமுவேல் 10 : 23 (ERVTA)
ஜனங்கள் ஓடிப்போய் அவனை அழைத்துக் கொண்டு வந்தனர். அவன் அவர்கள் மத்தியில் நின்றான். அவனது தலை மற்றவர்களைவிட உயர்ந்திருந்தது.
1 சாமுவேல் 10 : 24 (ERVTA)
சாமுவேல் அனைத்து ஜனங்களிடமும், “கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதனைப் பாருங்கள். அவனைப் போன்று சிறப்புடையவன் வேறுயாருமில்லை” என்றார். பிறகு ஜனங்கள் “அரசனே நீடுழி வாழ்க!” என்று குரலெழுப்பினார்கள்.
1 சாமுவேல் 10 : 25 (ERVTA)
சாமுவேல் அரசாங்கத்தின் விதிகளை ஜனங்களுக்கு விளக்கிக் கூறினான். அவன் ஒரு புத்தகத்தில் அவ்விதிகளை எழுதினான். அந்த புத்தகத்தை கர்த்தருக்கு முன்பு வைத்தான். பின் ஜனங்களை வீட்டிற்கு போகுமாறு கூறினான்.
1 சாமுவேல் 10 : 26 (ERVTA)
சவுலும் கிபியாவிலுள்ள தன் வீட்டிற்குப் போனான். தேவன் சில வீரர்களின் இதயத்தைத் தொட அவர்கள் அவனைப் பின்தொடர்ந்துச் சென்றார்கள்
1 சாமுவேல் 10 : 27 (ERVTA)
ஆனால் சில கயவர்கள், “இவன் எவ்வாறு நம்மைக் காப்பாற்றுவான்?” என்றனர். அவர்கள் சவுலைப் பற்றி கெட்டவற்றைக் கூறி அவனுக்கு அன்பளிப்புக்களைக் கொடுக்க மறுத்தனர். சவுல் ஒன்றும் கூறவில்லை. நாகாஸ் எனும் அம்மோனிய அரசன் நாகாஸ் அம்மோனிய அரசன், காத் மற்றும் ரூபன் கோத்திரங்களை காயப்படுத்திக் கொண்டிருந்தான். அவன் ஒவ்வொரு ஆண்களின் வலது கண்ணை பிடுங்கி யாரும் அவர்களுக்கு உதவி செய்யாதபடி தடுத்தான். யோர்தான் நதி ஓரத்தில் வாழ்ந்த இஸ்ரவேல் ஆண்களுக்கும் அப்படியே செய்தான். எனவே 7,000 இஸ்ரவேலர்கள் அம்மோனியரிடமிருந்து தப்பி யாபேஸ் கீலேயாத்திற்கு வந்தனர்.
❮
❯