1 யோவான் 4 : 1 (ERVTA)
தவறான போதகர்களைக் குறித்து யோவானின் எச்சரிக்கை எனது அன்பான நண்பர்களே, இவ்வுலகில் பல தவறான போதகர்கள் இப்போது வாழ்கிறார்கள். எனவே எல்லா ஆவிகளையும் நம்பாதீர்கள். தேவனிடமிருந்து வந்தவையா எனப் பார்ப்பதற்கு அந்த ஆவிகளை சோதித்துப் பாருங்கள்.
1 யோவான் 4 : 2 (ERVTA)
தேவனின் ஆவியை அறியும் வகை இதுவே ஆகும். ஓர் ஆவி, “இயேசு பூமிக்கு வந்து மனிதனான கிறிஸ்து என்பதை நான் நம்புகிறேன்” என்று கூறும். அந்த ஆவி தேவனிடமிருந்து வந்தது.
1 யோவான் 4 : 3 (ERVTA)
இன்னோர் ஆவி இயேசுவைக் குறித்து இவ்வாறு கூற மறுக்கிறது, இது தேவனிடமிருந்து வந்த ஆவி அல்ல. போலி கிறிஸ்து வந்துகொண்டிருப்பதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். இப்போது போலி கிறிஸ்து ஏற்கெனவே உலகில் வந்திருக்கிறான்.
1 யோவான் 4 : 4 (ERVTA)
எனது அன்பான பிள்ளைகளே, நீங்கள் தேவனுக்குச் சொந்தமானவர்கள். எனவே நீங்கள் அவர்களை வெற்றிகொண்டிருக்கிறீர்கள். ஏன்? உங்களில் இருப்பவர் உலகத்து மக்களில் இருப்பவனைக் காட்டிலும் பெரியவர்.
1 யோவான் 4 : 5 (ERVTA)
அம்மக்களோ உலகத்தைச் சேர்ந்தவர்கள். எனவே அவர்கள் கூறுபவை உலகத்திற்குரியவை. அவர்கள் கூறுவதை உலகம் கேட்கிறது.
1 யோவான் 4 : 6 (ERVTA)
ஆனால் நாம் தேவனுக்குரியவர்கள். எனவே தேவனை அறிந்த மக்கள் நம் பேச்சைக் கேட்கிறார்கள். ஆனால் தேவனிடமிருந்து வராத மக்கள் நம் பேச்சைக் கேட்பதில்லை. இப்படித் தான் உண்மையான ஆவியானவரையும், பொய்யான பிற ஆவிகளையும் தெரிந்துகொள்கிறோம்.
1 யோவான் 4 : 7 (ERVTA)
அன்பு தேவனிடமிருந்து வருகிறது அன்பான நண்பர்களே, தேவனிடமிருந்து அன்பு வருவதால் நாம் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும். பிறரை நேசிக்கிறவன் தேவனின் பிள்ளையாயிருக்கிறான். எனவே பிறரை நேசிக்கிறவன் தேவனை அறிகிறான்.
1 யோவான் 4 : 8 (ERVTA)
பிறரை நேசிக்காதவன் தேவனை அறியமாட்டான். ஏனெனில் தேவன் அன்பாயிருக்கிறார்.
1 யோவான் 4 : 9 (ERVTA)
தேவன் அவரது ஒரே குமாரனை அவர் மூலமாக நமக்கு வாழ்வளிக்கும் பொருட்டு இவ்வுலகத்திற்கு அனுப்பினார். தேவன் தன் அன்பை இவ்விதம் நமக்குப் புலப்படுத்தினார்.
1 யோவான் 4 : 10 (ERVTA)
தேவன் நம்மிடம் காட்டும் அன்பே உண்மையான அன்பாகும். நாம் தேவனிடம் காட்டும் அன்பல்ல. தேவன் நமது பாவங்களை நீக்கும் வழியாக அவரது குமாரனை அனுப்பினார்.
1 யோவான் 4 : 11 (ERVTA)
அன்பான நண்பர்களே, தேவன் நம்மை இவ்வளவு அதிகமாக நேசித்தார்! எனவே நாமும் ஒருவரையொருவர் நேசிக்கவேண்டும்.
1 யோவான் 4 : 12 (ERVTA)
எந்த மனிதனும் தேவனைக் கண்டதில்லை. ஆனால் நாம் ஒருவரையொருவர் நேசித்தால், அப்போது தேவன் நம்மில் வசிப்பார். நாம் ஒருவரையொருவர் நேசித்தால் அப்போது தேவனின் அன்பு அதன் குறிக்கோளை அடைகிறது. அது நம்மில் முழுமை பெறுகிறது.
1 யோவான் 4 : 13 (ERVTA)
நாம் தேவனிலும் தேவன் நம்மிலும் வாழ்வதை அறிந்திருக்கிறோம். தேவன் நமக்கு அவரது ஆவியானவரைக் கொடுத்ததால் நாம் இதனை அறிகிறோம்.
1 யோவான் 4 : 14 (ERVTA)
தேவன் குமாரனை இவ்வுலகின் மீட்பராக அனுப்பினார் என்பதை நாம் கண்டிருக்கிறோம். இப்போது மக்களுக்கு அதையே நாம் கூறுகிறோம்.
1 யோவான் 4 : 15 (ERVTA)
ஒரு மனிதன், “இயேசு தேவனின் குமாரன் என்பதை நம்புகிறேன்” என்று சொன்னால் அப்போது தேவன் அம்மனிதனில் வாழ்கிறார். அம்மனிதனும் தேவனில் வாழ்கிறான்.
1 யோவான் 4 : 16 (ERVTA)
தேவன் நமக்காகக் கொண்டுள்ள அன்பை அதனால் அறிகிறோம். அந்த அன்பை நாம் நம்புகிறோம். தேவன் அன்பாக இருக்கிறார். அன்பில் வாழ்கிற மனிதன் தேவனில் வாழ்கிறான். தேவனும் அம்மனிதனில் வாழ்கிறார்.
1 யோவான் 4 : 17 (ERVTA)
தேவனின் அன்பு நம்மில் முழுமையடைந்தால், தேவன் நம்மை நியாயந்தீர்க்கும் நாளில் நாம் அச்சமின்றி இருக்க முடியும். இவ்வுலகில் நாம் அவரைப்போல இருப்பதால், நாம் அச்சமில்லாமல் இருப்போம்.
1 யோவான் 4 : 18 (ERVTA)
தேவனின் அன்பு எங்கே இருக்கிறதோ, அங்கே அச்சம் இருக்காது. ஏன்? தேவனின் முழுமையான அன்பு அச்சத்தை அகற்றுகிறது. தேவன் தரும் தண்டனையே ஒருவனை அச்சுறுத்துகிறது. எனவே அச்சமுள்ள மனிதனிடம் தேவனின் அன்பு முழுமை பெறவில்லை.
1 யோவான் 4 : 19 (ERVTA)
முதலில் தேவன் நம்மை நேசித்ததால், நாம் நேசிக்கிறோம்.
1 யோவான் 4 : 20 (ERVTA)
ஒருவன், “நான் தேவனை நேசிக்கிறேன்” என்று கூறியும், அம்மனிதன் கிறிஸ்துவில் அவனது சகோதரனையோ, சகோதரியையோ வெறுத்தால் அப்போது அம்மனிதன் பொய்யன் ஆகிறான். அம்மனிதன் தான் காண்கிற சகோதரனை நேசிப்பதில்லை. எனவே அவன் ஒருபோதும் கண்டிராத தேவனை நேசிக்க இயலாது.
1 யோவான் 4 : 21 (ERVTA)
தேவனை நேசிக்கிற ஒருவன் அவனது சகோதரனையும் நேசிக்க வேண்டும் என்பதே அவர் நமக்கு வழங்கிய கட்டளை ஆகும்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21