1 கொரிந்தியர் 3 : 1 (ERVTA)
மனிதனைப் பின்பற்றுவது தவறு சகோதர சகோதரிகளே, கடந்த காலத்தில்ஆன்மீகமானவர்களிடம் பேசுவதைப் போல நான் உங்களிடம் பேச முடியாமல் போயிற்று. கிறிஸ்துவில் குழந்தைகளைப் போன்று, உலகின் சாதாரண மக்களிடம் பேசுவதைப் போன்று உங்களிடம் பேச வேண்டியதாயிற்று.
1 கொரிந்தியர் 3 : 2 (ERVTA)
நான் உங்களுக்குக் கற்பித்தவை பாலைப் போன்றது, திட உணவைப் போன்றவை அல்ல. ஏனெனில் திட உணவை உட்கொள்ளுமளவிற்கு நீங்கள் பக்குவம் பெறவில்லை. இப்போதும்கூட திட உணவை ஏற்கும் தகுதியை நீங்கள் பெறவில்லை.
1 கொரிந்தியர் 3 : 3 (ERVTA)
நீங்கள் இன்னும் ஆன்மீகமான மக்கள் அல்ல. உங்களுக்குப் பொறாமையும், வாதாடுகிற குணமும் உண்டு. இது நீங்கள் ஆன்மீகமானவர்கள் அல்ல என்பதைக் காட்டுகிறது. உலகின் சாதாரண மக்களைப் போலவே நீங்களும் நடந்துகொள்கின்றீர்கள்.
1 கொரிந்தியர் 3 : 4 (ERVTA)
உங்களில் ஒருவன் “நான் பவுலைப் பின்பற்றுகிறேன்”எனவும், இன்னொருவன் “அப்பொல்லோவைப் பின்பற்றுகிறேன்” எனவும் கூறுகிறீர்கள். நீங்கள் அப்படிப்பட்டவற்றைக் கூறும்போது நீங்களும் உலகின் சாதாரண மக்களைப் போல நடந்துகொள்கிறீர்கள்.
1 கொரிந்தியர் 3 : 5 (ERVTA)
அப்பொல்லோ முக்கியமானவனா? இல்லை. பவுல் முக்கியமானவனா? இல்லை. நீங்கள் விசுவாசிப்பதற்கு உதவிய தேவனுடைய பணியாட்களே நாங்கள். தேவன் எங்களுக்கு இட்ட பணியையே நாங்கள் ஒவ்வொருவரும் செய்தோம்.
1 கொரிந்தியர் 3 : 6 (ERVTA)
நான் விதையை விதைத்தபோது, அப்பொல்லோ நீரூற்றினான். ஆனால் தேவன் ஒருவரே விதையைத் துளிர்த்து வளரும்படியாகச் செய்தார்.
1 கொரிந்தியர் 3 : 7 (ERVTA)
எனவே விதையை விதைக்கின்ற மனிதன் முக்கியமானவன் அல்ல. அதற்கு நீரூற்றுகின்ற மனிதனும் முக்கியமானவன் அல்ல. எல்லாவற்றையும் வளர்ச்சியுறும்படி செய்கின்றவராகிய தேவன் ஒருவரே முக்கியமானவர்.
1 கொரிந்தியர் 3 : 8 (ERVTA)
விதையை விதைப்பவனுக்கும், நீரூற்றிப் பேணுபவனுக்கும் குறிக்கோள் ஒன்றே. தன் வேலைக்குரிய வெகுமதியை ஒவ்வொருவனும் பெறுவான்.
1 கொரிந்தியர் 3 : 9 (ERVTA)
நாங்கள் தேவனுக்காக ஒருமித்து உழைக்கிற வேலையாட்கள். நீங்களே தேவனுக்குரிய ஒரு நிலத்தைப் போன்றவர்கள். நீங்களே தேவனுக்குரிய ஒரு வீட்டைப் போன்றவர்கள்.
1 கொரிந்தியர் 3 : 10 (ERVTA)
சிறந்த வீட்டைக் கட்டும் வேலையாளைப் போன்று நான் வீட்டின் அஸ்திபாரத்தைக் கட்டினேன். தேவன் எனக்கு அளித்த வரத்தை நான் அதற்குப் பயன்படுத்தினேன். மற்றவர்கள் அந்த அஸ்திபாரத்தின் மீது கட்டுகிறார்கள். ஆனால் ஒவ்வொருவனும் அதனை எவ்வாறு கட்டுகிறான் என்பதில் கவனம் செலுத்தவேண்டும்.
1 கொரிந்தியர் 3 : 11 (ERVTA)
அஸ்திபாரம் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ளது. வேறெந்த அஸ்திபாரத்தையும் ஒருவரும் அமைக்க முடியாது. ஏற்கெனவே கட்டப்பட்ட அஸ்திபாரம் இயேசு கிறிஸ்துவாகும்.
1 கொரிந்தியர் 3 : 12 (ERVTA)
பொன், வெள்ளி, மணிகள், மரம், புல், வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தி ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மீது கட்டமுடியும்.
1 கொரிந்தியர் 3 : 13 (ERVTA)
ஒவ்வொருவனின் வேலையும் இறுதியில் (கிறிஸ்து மக்களை நியாயம் தீர்க்கிற நாளில்) பகிரங்கப்படுத்தப்படும். அந்த நாளில் ஒவ்வொருவனின் பணியையும் அக்கினி சோதிக்கும்.
1 கொரிந்தியர் 3 : 14 (ERVTA)
அஸ்திபாரத்தில் ஒருவன் கட்டிய கட்டிடம் நிலைக்குமாயின் அவன் தகுந்த நற்பலன் பெறுவான்.
1 கொரிந்தியர் 3 : 15 (ERVTA)
ஆனால், ஒருவனின் கட்டிடம் எரிந்து போகுமானால் அவன் நஷ்டம் அடைவான். அந்த மனிதன் காப்பாற்றப்படுவான். எனினும் அக்கினியினின்று தப்பி வந்தாற்போன்று ஒரு நிலையை அவன் அடைவான்.
1 கொரிந்தியர் 3 : 16 (ERVTA)
நீங்களே தேவனுடைய ஆலயம் என்பதை நீங்கள் அறிவீர்கள். தேவனுடைய ஆவியானவர் உங்களில் வாழ்கிறார்.
1 கொரிந்தியர் 3 : 17 (ERVTA)
தேவனுடைய ஆலயத்தை அழிக்கும் ஒருவனை தேவன் அழிப்பார். ஏன்? தேவனுடைய ஆலயம் பரிசுத்தமானது. நீங்கள் தேவனுடைய ஆலயமாவீர்கள்.
1 கொரிந்தியர் 3 : 18 (ERVTA)
உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள். உங்களில் ஒருவன் தன்னை இவ்வுலகில் ஞானமுள்ளவனாக நினைத்தால் அவன் முட்டாளாக வேண்டும். இந்த வகையில் அவன் உண்மையான ஞானியாகிறான்.
1 கொரிந்தியர் 3 : 19 (ERVTA)
ஏன்? ஏனெனில் இந்த உலகத்து ஞானத்தை தேவன் மடமையானதாகவே கருதுகிறார். அது வேத வாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது. “அவர் ஞானிகள் தங்கள் தந்திர வழிகளைப் பயன்படுத்துகையில் அவர்களை மடக்கிப் பிடிக்கிறார்” யோபு 5:13-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. என்று எழுதப்பட்டிருக்கிறது.
1 கொரிந்தியர் 3 : 20 (ERVTA)
தேவன் ஞானிகளின் எண்ணத்தை அறிவார். அவர்களுடைய எண்ணங்கள் பயனற்றவை என்பதை தேவன் அறிவார். சங்கீதம் 94:11-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
1 கொரிந்தியர் 3 : 21 (ERVTA)
எனவே, நீங்கள் மனிதரைப்பற்றி பெருமைப் பாராட்டாதீர்கள். எல்லாப் பொருள்களும் உங்களுக்கு உரியனவே.
1 கொரிந்தியர் 3 : 22 (ERVTA)
பவுல், அப்பொல்லோ, கேபா, உலகம், வாழ்வு, மரணம், நிகழ்காலம், எதிர்காலம் இவை எல்லாம் உங்களுடையவையே.
1 கொரிந்தியர் 3 : 23 (ERVTA)
நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள். கிறிஸ்து தேவனுக்கு உரியவர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23