சகரியா 8 : 1 (ECTA)
எருசலேமைக் கட்டுவதற்கு ஆண்டவரின் வாக்குறுதி படைகளின் ஆண்டவரது வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது: படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
சகரியா 8 : 2 (ECTA)
“சீயோன்மீதுள்ள அன்பு வெறியால் நான் கனன்று கொண்டிருக்கின்றேன்; அதன் மீதுள்ள அன்புவெறியால் நான் சினமுற்றிருக்கின்றேன்.
சகரியா 8 : 3 (ECTA)
“ஆண்டவர் கூறுவது இதுவே: சீயோனுக்கு நான் திரும்பி வரப்போகிறேன்; எருசலேம் நடுவில் குடியிருக்கப் போகிறேன்; எருசலேம் ‘உண்மையுள்ள நகர்’ என்றும், படைகளின் ஆண்டவரது மலை ‘திருமலை’ என்றும் பெயர்பெற்று விளங்கும்.
சகரியா 8 : 4 (ECTA)
படைகளிள் ஆண்டவர் கூறுவது இதுவே: எருசலேமின் தெருக்களில் கிழவரும் கிழவியரும் மீண்டும் அமர்ந்திருப்பார்கள்; வயது முதிர்ந்தவர்களானதால் ஒவ்வொருவரும் தம் கையில் கோல் வைத்திருப்பார்கள்;
சகரியா 8 : 5 (ECTA)
நகரின் தெருக்களில் சிறுவரும் சிறுமியரும் நிறைந்திருப்பார்கள்; அவர்கள் அதன் தெருக்களில் விளையாடிக்கொண்டிருப்பார்கள்.
சகரியா 8 : 6 (ECTA)
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: “இம்மக்களில் எஞ்சியிருப்போரின் கண்களுக்கு இவையெல்லாம் அந்நாள்களில் விந்தையாய்த் தோன்றினாலும், என் கண்களுக்கு விந்தையாய்த் தோன்றுமோ?” என்கிறார் படைகளின் ஆண்டவர்.
சகரியா 8 : 7 (ECTA)
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: “இதோ, கீழ்த்திசை நாட்டினின்றும் மேற்றிசை நாட்டினின்றும் என் மக்களை விடுவிப்பேன்;
சகரியா 8 : 8 (ECTA)
அவர்களை அழைத்துக் கொண்டு வருவேன்; அவர்கள் எருசலேமில் குடியிருப்பார்கள்; அவர்கள் என் மக்களாயிருப்பார்கள்; உண்மையிலும் நீதியிலும் நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்.”
சகரியா 8 : 9 (ECTA)
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: “படைகளின் ஆண்டவரது கோவிலைக் கட்டியெழுப்பும்படி அதற்கு அடித்தளம் இட்ட நாளிலிருந்து பேசிய இறைவாக்கினரின் வாய்மொழிகளுக்குச் செவிசாய்ப்போரே, உங்கள் கைகள் வலிமை பெறட்டும்.
சகரியா 8 : 10 (ECTA)
ஏனெனில், இந்நாள்கள் வரை மனிதருக்கோ கால்நடைகளுக்கோ கூலிகிடைக்கவில்லை; போவார் வருவாருக்கோ பகைவரிடமிருந்து பாதுகாப்பு இல்லை. நான் எல்லா மனிதரையும் ஒருவருக்கு எதிராக ஒருவர் எழும்படி செய்துவிட்டேன்.
சகரியா 8 : 11 (ECTA)
இப்பொழுதோ, இம்மக்களில் எஞ்சியிருப்போருக்கு முன்னாளில் நான் இருந்தது போல இருக்கமாட்டேன்,” என்கிறார் படைகளின் ஆண்டவர். * எபே 4:25..
சகரியா 8 : 12 (ECTA)
ஏனெனில், அவர்கள் அமைதியில் பயிர் செய்வார்கள். திராட்சைச் செடி தன் கனியைக் கொடுக்கும்; வயல் நிலம் தன் விளைவைத் தரும்; வானம் பனியைப் பொழியும்; நானோ இம்மக்களில் எஞ்சியிருப்போர் இவற்றையெல்லாம் உரிமையாக்கிக் கொள்ளச் செய்வேன்.
சகரியா 8 : 13 (ECTA)
யூதா குடும்பத்தாரே! இஸ்ரயேல் குடும்பத்தாரே! வேற்றினத்தாரிடையே நீங்கள் ஒரு சாபச் சொல்லாய் இருந்தீர்கள்; இப்பொழுதே நான் உங்களை மீட்டருள்வேன்; நீங்களும் ஓர் ஆசி மொழி ஆவீர்கள்; அஞ்சாதீர்கள்; உங்கள் கைகள் வலிமை பெறட்டும்.”
சகரியா 8 : 14 (ECTA)
ஆகவே படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: “உங்கள் மூதாதையர் என்னைச் சினமடையச் செய்தபோது நான் கருணை காட்டாது உங்களுக்குத் தீங்கு செய்யத் திட்டமிட்டேன்,” என்கிறார் படைகளின் ஆண்டவர்.
சகரியா 8 : 15 (ECTA)
அவ்வாறே இந்நாள்களில் மீண்டும் எருசலேமுக்கும் யூதாவின் குடும்பத்தாருக்கும் நன்மை செய்யத் திட்டமிட்டுள்ளேன்; ஆகையால் அஞ்சாதீர்கள்.
சகரியா 8 : 16 (ECTA)
நீங்கள் கடைப்பிடித்து ஒழுகவேண்டியவை இவையே: ஒருவரோடு ஒருவர் உண்மை பேசுங்கள்; உங்கள் நகர வாயில்களில் நீங்கள் அளிக்கும் தீர்ப்பு நீதியாகவும் நல்லுறவுக்கு வழிகோலுவதாயும் இருக்கட்டும்;
சகரியா 8 : 17 (ECTA)
ஒருவருக்கு எதிராக மற்றொருவர் தீமை செய்ய மனத்தாலும் நினைக்க வேண்டாம்; பொய்யாணை இடுவதை விரும்பாதீர்கள்; ஏனெனில், இவற்றையெல்லாம் நான் வெறுக்கிறேன்,” என்கிறார் ஆண்டவர்.
சகரியா 8 : 18 (ECTA)
படைகளின் ஆண்டவரது வாக்கு எனக்கு மீண்டும் அருளப்பட்டது:
சகரியா 8 : 19 (ECTA)
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நான்காம் மாதத்தின் நோன்பும், ஐந்தாம் மாதத்தின் நோன்பும், ஏழாம் மாதத்தின் நோன்பும், பத்தாம் மாதத்தின் நோன்பும் யூதா குடும்பத்தார்க்கு மகிழ்ச்சியும் களிப்பும் நிறைந்த மாபெரும் திருவிழா நாள்களாக மாறிவிடும். ஆதலால் வாய்மையையும் நல்லுறவையும் நாடுங்கள்.
சகரியா 8 : 20 (ECTA)
படைகளின் ஆண்டவர் கூறுகிறார்; மக்களினங்களும் பல நகர்களில் குடியிருப்போரும்கூட வருவார்கள்.
சகரியா 8 : 21 (ECTA)
ஒருநகரில் குடியிருப்போர் மற்றொரு நகரினரிடம் சென்று, “நாம் ஆண்டவரது அருளை மன்றாடவும் படைகளின் ஆண்டவரை வழிபடவும், தேடவும், நாடவும் விரைந்து செல்வோம், வாருங்கள்; நாங்களும் வருகிறோம்” என்று சொல்வார்கள்.
சகரியா 8 : 22 (ECTA)
மக்களினங்கள் பலவும் வலிமை வாய்ந்த வேற்றினத்தாரும் படைகளின் ஆண்டவரை நாடவும் அவரது அருளை மன்றாடவும் எருசலேமுக்கு வருவார்கள்.
சகரியா 8 : 23 (ECTA)
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: “அந்நாள்களில் ஒவ்வொரு மொழி பேசும் வேற்றினத்தாரிலும் பத்துப்பேர் மேலாடையைப் பற்றிக் கொண்டு, ‘கடவுள் உங்களோடு இருக்கின்றார்’ என்று நாங்கள் கேள்விப்பட்டதால் நாங்களும் உங்களோடு வருகிறோம் என்பார்கள்.”
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23