சகரியா 4 : 1 (ECTA)
விளக்குத்தண்டைக் குறித்த காட்சி என்னோடு பேசிய தூதர் மீண்டும் வந்து, உறக்கத்தில் ஆழ்ந்திருப்பவனை எழுப்புவதுபோல் என்னை எழுப்பி,
சகரியா 4 : 2 (ECTA)
“நீ என்ன காண்கிறாய்?” என்று என்னைக் கேட்க, நான், “இதோ முழுவதும் பொன்னாலான விளக்குத் தண்டு ஒன்றைக் காண்கிறேன்; அதன் உச்சியில் கிண்ணம் ஒன்று உள்ளது; அக்கிண்ணத்தின்மேல் ஏழு அகல்கள் இருக்கின்றன; மேலே உள்ள ஒவ்வோர் அகலுக்கும் ஏழு மூக்குகள் உள்ளன;
சகரியா 4 : 3 (ECTA)
விளக்குத் தண்டின் அருகில் வலப்புறம் ஒன்றும் இடப்புறம் ஒன்றுமாக இரு ஒலிவ மரங்கள் இருக்கின்றன” என்றேன். [* திவெ 11: 4 ]
சகரியா 4 : 4 (ECTA)
அப்போது என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதரை நோக்கி, நான், “என் தலைவரே! இவை எதைக் குறிக்கின்றன?” என்று வினவினேன். என்னோடு பேசிக் கொண்டிருந்த தூதர்,
சகரியா 4 : 5 (ECTA)
“இவை எதைக் குறிக்கின்றன என்பது உனக்குத் தெரியாதா?” எனக் கேட்டார். நான் “என் தலைவரே! எனக்குத் தெரியாது” என்றேன்.
சகரியா 4 : 6 (ECTA)
செருபாபேலுக்கு ஆண்டவரின் வாக்குறுதி மீண்டும் அவர் என்னிடம், “செருபாபேலுக்கு ஆண்டவர் அருளியவாக்கு இதுவே: உனது ஆற்றலாலும் அல்ல, வலிமையாலும் அல்ல; ஆனால் எனது ஆவியாலே ஆகும்,” என்கிறார் படைகளின் ஆண்டவர். [* எஸ்ரா 5: 2 ]
சகரியா 4 : 7 (ECTA)
மாபெரும் மலையே! செருபாபேலுக்குமுன் உன் நிலை என்ன? ஒரு சமவெளிக்கு ஒப்பாவாய்; அவரே தலையாய கல்லைக் கொண்டு வருவார்; அப்போது அதன்மேல் ‘அருள்பொழிக! அருள்பொழிக!’ என்ற ஆரவாரம் ஒலிக்கும்” என்றார்.
சகரியா 4 : 8 (ECTA)
ஆண்டவரின் வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது.
சகரியா 4 : 9 (ECTA)
“செருபாபேலின் கைகளே இக்கோவிலுக்கு அடித்தளம் இட்டன. அவர் கைகளே இவ்வேலையை முடித்துவைக்கும். என்னை உங்களிடம் அனுப்பியவர் படைகளின் ஆண்டவரே என்பதை அப்போது அறிந்துகொள்வீர்கள்.”
சகரியா 4 : 10 (ECTA)
வேலை தொடங்கிய நாளை அவமதித்தவர்கள் யாரோ அவர்கள் செருபாபேலின் கையில் இரு தூக்கு நூற்குண்டு இருப்பதைக் கண்டு அகமகிழ்வார்கள். [* திவெ 5: 6 ]
சகரியா 4 : 11 (ECTA)
“அந்த அகல்கள் ஏழும் நிலவுலகெங்கும் சுற்றிப் பார்க்கும் ஆண்டவரின் கண்கள்” என்றார். அப்போது நான், “விளக்குத் தண்டின் அருகில் வலப்புறமும் இடப்புறமும் உள்ள இந்த இரு ஒலிவ மரங்களும் எதைக் குறிக்கின்றன?” என வினவினேன். * திவெ 11:4..
சகரியா 4 : 12 (ECTA)
மீண்டும் நானே அவரிடம், “எண்ணெய் ஊற்றுவதற்கென வைத்திருக்கும் இரண்டு பொற்குழாய்களின் அருகில் ஒலிவ மரக்கிளைகள் இரண்டு இருப்பதன் பொருள் என்ன?” எனக் கேட்டேன்.
சகரியா 4 : 13 (ECTA)
அதற்கு அவர், “இவை எதைக் குறிக்கின்றன என்பது உனக்குத் தெரியாதா?” என்றார். நான், “தெரியாது என் தலைவரே” என்றேன்.
சகரியா 4 : 14 (ECTA)
அதற்கு அவர், “இவை அனைத்துலகின் ஆண்டவர் திருமுன் நிற்கின்ற திருநிலைப்படுத்தப்பட்ட இருவரைக் குறிக்கின்றன” என மறுமொழி பகர்ந்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14