உன்னதப்பாட்டு 4 : 1 (ECTA)
பாடல் 14: தலைவன் கூற்று என்னே உன் அழகு! “என் அன்பே, என்னே உன் அழகு! முகத்திரைக்குப் பின்னுள்ள உன் கண்கள் வெண்புறாக்கள்! கிலயாதின் மலைச்சரிவில் இறங்கி வரும் வெள்ளாட்டு மந்தை போன்றது உன் கூந்தல். [* 1 அர 4:32.. ]
உன்னதப்பாட்டு 4 : 2 (ECTA)
உன் பற்களோ மயிர் கத்தரிப்பதற்கெனக் குளித்துக் கரையேறும் பெண் ஆடுகளின் மந்தை போல்வன; அவையாவும் இரட்டைக் குட்டி போட்டவை; அவற்றுள் ஒன்றேனும் மலடு இல்லை.
உன்னதப்பாட்டு 4 : 3 (ECTA)
செம்பட்டு இழைபோன்றன உன்னிதழ்கள்; உன் வாய் எழில் மிக்கது; முகத்திரையின் பின்னிருக்கும் உன் கன்னங்கள் பிளந்த மாதுளம் பழத்திற்கு நிகரானவை.
உன்னதப்பாட்டு 4 : 4 (ECTA)
தாவீதின் கொத்தளம்போல் அமைந்துள்ளது உன் கழுத்து; வரிவரியாய் ஆயிரம் கேடயங்கள் ஆங்கே தொங்குகின்றன; அவையெலாம் வீரர்தம் படைக்கலன்களே.
உன்னதப்பாட்டு 4 : 5 (ECTA)
உன் முலைகள் இரண்டும் லீலிகள் நடுவில் மேயும் இருமான் குட்டிகளை ஒக்கும்; கலைமானின் இரட்டைக் குட்டிகளைக் ஒக்கும்.
உன்னதப்பாட்டு 4 : 6 (ECTA)
பொழுது புலர்வதற்குள் , நிழல்கள் மறைவதற்குள், வெள்ளைப்போள மலையினுக்கு விரைந்திடுவேன்; சாம்பிராணிக் குன்றுக்குச் சென்றிடுவேன்;
உன்னதப்பாட்டு 4 : 7 (ECTA)
என் அன்பே , நீ முழுவதும் அழகே! மறுவோ உன்னில் சிறிதும் இலதே!
உன்னதப்பாட்டு 4 : 8 (ECTA)
பாடல் 15: தலைவன் கூற்று லெபனோனிலிருந்து வந்திடு மணமகளே; லெபலோனிலிருந்து வந்திடு புறப்படு; அமானா மலையுச்சியினின்று — செனீர் மற்றும் எர்மோன் மலையுச்சியினின்று — சிங்கங்களின் குகைளினின்று — புலிகளின் குன்றுகளினின்று இறங்கிவா!
உன்னதப்பாட்டு 4 : 9 (ECTA)
என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாய்; என் தங்காய், மணமகளே, உன் விழிவீச்சு ஒன்றினாலே, உன் ஆரத்தின் முத்து ஒன்றினாலே, என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாய்.
உன்னதப்பாட்டு 4 : 10 (ECTA)
உன் காதல் எத்துணை நேர்த்தியானது; என் தங்காய், மணமகளே, உன் காதல் திராட்சை இரசத்தினும் இனிது! உனது பரிமளத்தின் நறுமணமோ எவ்வகைத் தைலத்தின் நறுமணத்தினும் சிறந்தது.
உன்னதப்பாட்டு 4 : 11 (ECTA)
மணமகளே, உன் இதழ்கள் அமிழ்தம் பொழிகின்றன; உன் நாவின்கீழ்த் தேனும் பாலும் சுரக்கின்றன; உன் ஆடைகளின் நறுமணம் லெபனோனின் நறுமணத்திற்கு இணையானது.
உன்னதப்பாட்டு 4 : 12 (ECTA)
பாடல் 16: தலைவன்-தலைவி உரையாடல் பூட்டியுள்ள தோட்டம் நீ; என் தங்காய், மணமகளே பூட்டியுள்ள தோட்டம் நீ; முத்திரையிட்ட கிணறு நீ!
உன்னதப்பாட்டு 4 : 13 (ECTA)
மாதுளைச் சோலையாய்த் தளிர்த்துள்ளாய்; ஆங்கே தித்திக்கும் கனிகள் உண்டு; மருதோன்றியும் நரந்தமும் உண்டு.
உன்னதப்பாட்டு 4 : 14 (ECTA)
நரந்தம், மஞ்சள், வசம்பு, இலவங்கம் எல்லாவகை நறுமண மரங்களும், வெள்ளைப்போளமும் அகிலும், லைசிறந்த நறுமணப் பொருள்கள் யாவுமுண்டு.
உன்னதப்பாட்டு 4 : 15 (ECTA)
நீ தோட்டங்களின் நீரூற்று; வற்றாது நீர்சுரக்கும் கிணறு; லெபலோனினின்று வரும் நீரோடை!
உன்னதப்பாட்டு 4 : 16 (ECTA)
வாடையே, எழு! தென்றலே, வா! என் தோட்டத்தின் மேல் வீசு! அதன் நறுமணம் பரவட்டும்! உன் காதலர் தம் தோட்டத்திற்கு வரட்டும்! அதன் தித்திக்கும் கனிகளை உண்ணட்டும்!
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16