உன்னதப்பாட்டு 3 : 1 (ECTA)
பாடல் 12: தலைவி கூற்று இரவு நேரம் படுக்கையில் இருந்தேன்; என் உயிர்க்குயிரான அன்பரைத் தேடினேன்; தேடியும் அவரை நான் கண்டேன் அல்லேன்! [* 1 அர 4:32.. ]
உன்னதப்பாட்டு 3 : 2 (ECTA)
“எழுந்திடுவேன்; நகரத்தில் சுற்றிவருவேன்; தெருக்களிலும் நாற்சந்திகளிலும் சுற்றி என் உயிர்க்குயிரான அன்பரைத் தேடுவேன்” தேடினேன்; தேடியும் அவரைக் கண்டேன் அல்லேன்!
உன்னதப்பாட்டு 3 : 3 (ECTA)
ஆனால் என்னைக் கண்டனர் சாமக்காவலர்; நகரைச் சுற்றி வந்தவர்கள் அவர்கள். “என் உயிர்க்குயிரான அன்பரை நீங்களேனும் கண்டீர்களோ?” என்றேன்.
உன்னதப்பாட்டு 3 : 4 (ECTA)
அவர்களைவிட்டுச் சற்று அப்பால் சென்றதுமே கண்டேன் என் உயிர்க்குயிரான அன்பர்தமை. அவரைச் சிக்கெனப் பிடித்தேன்; விடவே இல்லை; என் தாய்வீட்டுக்கு அவரைக் கூட்டி வந்தேன்; என்னைக் கருத்தாங்கியவளின் அறைக்குள் அழைத்து வந்தேன்.
உன்னதப்பாட்டு 3 : 5 (ECTA)
எருசலேம் மங்கையரே, கலைமான்கள் மேல் ஆணை! வயல்வெளி மரைகள்மேல் ஆணை! உங்களுக்கு நான் கூறுகிறேன்; காதலைத் தட்டி எழுப்பாதீர்; தானே விரும்பும்வரை அதைத் தட்டி எழுப்பாதீர்.
உன்னதப்பாட்டு 3 : 6 (ECTA)
பாடல் 13: கண்டோர் கூற்று என்ன அது? பாலைவெளியிலிருந்து புகைத்தூண்போல், எழுந்துவருகிறதே! வெள்ளைப்போளம் மணக்க, சாம்பிராணி புகைய, வணிகர் கொணர் பல்வகைப் பொடிகள் யாவும் மணங்கமழ வருகிறதே! என்ன அது?
உன்னதப்பாட்டு 3 : 7 (ECTA)
அதுதான் சாலமோனின் பஞ்சணை! இஸ்ரயேலின் வளமையுள்ள வீரர்களுள் அறுபதுபேர் அதனைச் சூழ்ந்துள்ளனர்.
உன்னதப்பாட்டு 3 : 8 (ECTA)
அனைவரும் வாளேந்திய வீரர்! அவர்கள் போர்புரிவதில் வல்லவர்கள்! இராக்காலத் தாக்குதல்களைத் தடுக்கத் தம் இடைகளில் வாள் கொண்டுள்ளவர்கள்!
உன்னதப்பாட்டு 3 : 9 (ECTA)
மன்னர் தமக்கொரு பல்லக்கு செய்தார்; சாலமோன் லெபனோனின் மரத்தால் செய்தார்.
உன்னதப்பாட்டு 3 : 10 (ECTA)
அதன் தூண்களை வெள்ளியால் இழைத்தார்; மேற்கவிகை பொன்; இருக்கை செம்பட்டு; உட்புறம் மெல்லிய தோல்மெத்தை; எருசலேம் மங்கையரே, வாருங்கள்!
உன்னதப்பாட்டு 3 : 11 (ECTA)
சீயோன் மங்கையரே, பாருங்கள்! மன்னர் சாலமோனையும் அவர் அன்னை அவருக்கு அணிவித்த மணிமுடியையும் காணுங்கள்! அவரது திருமண நாளினிலே, அவருள்ளம் மகிழ்ந்த நாளினிலே, அவருக்கு அணிவித்த முடியதுவே!
❮
❯