ரோமர் 2 : 1 (ECTA)
ஆகையால், பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிப்போரே, நீங்கள் யாராயினும், சாக்குப் போக்குச்சொல்வதற்கு உங்களுக்கு வழியில்லை. ஏனெனில் பிறருக்கு எதிராகத் தீர்ப்பளிக்கும் போது நீங்கள் உங்களுக்கே தண்டனைத் தீர்ப்பை அளிக்கிறீர்கள். தீர்ப்பளிக்கும் நீங்களே அந்தத் தீர்ப்பைப் பெறுவதற்கான செயல்களைச் செய்கிறீர்களே!
ரோமர் 2 : 2 (ECTA)
இத்தகையவற்றைச் செய்வோருக்குக் கடவுள் அளிக்கும் தீர்ப்பு நீதி வழுவாதது என்பது நமக்குத் தெரியும்.
ரோமர் 2 : 3 (ECTA)
இவற்றைச் செய்வோர் மேல் தீர்ப்பளிக்கும் நீங்களும் இவற்றையே செய்து வருகிறீர்கள்! நீங்கள் மட்டும் கடவுளின் தீர்ப்பிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என நினைக்கிறீர்களா?
ரோமர் 2 : 4 (ECTA)
அல்லது, அவரது அளவற்ற பரிவையும் சகிப்புத்தன்மையையும் பொறுமையையும் ஏளனம் செய்கிறீர்களா? உங்களை மனம்மாறச் செய்வதற்கே கடவுள் பரிவுகாட்டுகிறார் என்பது உங்களுக்குத் தெரியாதா?
ரோமர் 2 : 5 (ECTA)
உங்கள் கடின உள்ளம் உங்களை மனம் மாற விடவில்லை; ஆகையால் கடவுளின் சினமும் நீதித் தீர்ப்பும் வெளிப்பட வேண்டிய நாளில் உங்களுக்கு வரப்போகும் தண்டனையைச் சேமித்து வைக்கிறீர்கள்.
ரோமர் 2 : 6 (ECTA)
ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்பக் கடவுள் கைம்மாறு செய்வார்.
ரோமர் 2 : 7 (ECTA)
மனஉறுதியோடு நற்செயல் புரிந்து மாட்சி, மாண்பு, அழியாமை ஆகியவற்றை நாடுவோருக்கு அவர் நிலைவாழ்வை வழங்குவார்.
ரோமர் 2 : 8 (ECTA)
ஆனால், தன்னலம் நாடுபவர்களாய் உண்மைக்குப் பணியாமல், அநீதிக்குப் பணிபவர்களின் தலைமேல் அவருடைய சினமும் சீற்றமும் வந்து விழும்.
ரோமர் 2 : 9 (ECTA)
முதலில் யூதருக்கும் பிறகு கிரேக்கருக்கும் அதாவது, தீமை செய்யும் எல்லா மனிதருக்குமே வேதனையும் நெருக்கடியும் உண்டாகும்.
ரோமர் 2 : 10 (ECTA)
அவ்வாறே, முதலில் யூதருக்கும் அடுத்துக் கிரேக்கருக்கும் அதாவது, நன்மை செய்யும் அனைவருக்குமே பெருமையும் மாண்பும் அமைதியும் கிடைக்கும்.
ரோமர் 2 : 11 (ECTA)
ஏனெனில் கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை.
ரோமர் 2 : 12 (ECTA)
திருச்சட்டத்தை அறியாமல் பாவம் செய்யும் எவரும், அந்தச் சட்டத்தின் தீர்ப்புக்கு உட்படாமலேயே அழிவுறுவர்; திருச்சட்டத்துக்கு உட்பட்டு எவரும் பாவம் செய்தால், அச்சட்டத்தாலே தீர்ப்பளிக்கப்படுவர்.
ரோமர் 2 : 13 (ECTA)
ஏனெனில், திருச்சட்டத்தைக் கேட்பதால் மட்டும் யாரும் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவதில்லை; அதனைக் கடைப்பிடிப்பவர்களே அவருக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.
ரோமர் 2 : 14 (ECTA)
திருச்சட்டத்தைப் பெற்றிராத பிற இனத்தார் அதில் உள்ள கட்டளைகளை இயல்பாகக் கடைப்பிடிக்கும்போது, அவர்களுக்குத் திருச்சட்டம் இல்லாத போதிலும் தங்களுக்குத்தாங்களே அவர்கள் சட்டமாய் அமைகிறார்கள்.
ரோமர் 2 : 15 (ECTA)
திருச்சட்டம் கற்பிக்கும் ஒழுக்கநெறி தங்கள் உள்ளத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் தங்கள் நடத்தையில் காட்டுகிறார்கள். அவர்களது மனச்சான்றே இதற்குச் சாட்சி. ஏனெனில் அவர்கள் செய்வது குற்றமா குற்றமில்லையா என அவரவர் எண்ணங்களே வெளிப்படுத்துகின்றன.
ரோமர் 2 : 16 (ECTA)
நான் அறிவிக்கும் நற்செய்தியின்படி, மனிதர் உள்ளங்களில் மறைந்திருப்பவற்றைக் குறித்து இயேசுகிறிஸ்துவின் வாயிலாய்க் கடவுள் தீர்ப்பளிக்கும் நாளில் மேற்சொன்னவை நிகழும்.
ரோமர் 2 : 17 (ECTA)
யூதர் என்னும் பெயரைத் தாங்கித் திருச்சட்டத்தின் அடிப்படையில் வாழும் நீங்கள் கடவுளோடு கொண்டுள்ள உறவைப்பற்றிப் பெருமைப்படுகிறீர்கள்;
ரோமர் 2 : 18 (ECTA)
அவருடைய திருவுளத்தை அறிந்திருக்கிறீர்கள்; திருச்சட்டத்தைக் கற்றறிந்துள்ளதால் எது சிறந்தது எனச் சோதித்து அறிகிறீர்கள்.
ரோமர் 2 : 19 (ECTA)
அறிவையும் உண்மையும் தன்னகத்தே கொண்டுள்ள திருச்சட்டம் உங்களிடம் இருக்கிறது என்னும் உறுதியான நம்பிக்கையில் பார்வையற்றோருக்கு வழிகாட்டியாகவும்,
ரோமர் 2 : 20 (ECTA)
இருளில் இருப்போர்க்கு ஒளியாகவும், அறிவிலிகளுக்குக் கல்வி புகட்டுபவராகவும் குழந்தைகளுக்கு ஆசிரியராகவும் இருக்க முற்படுகிறீர்கள்.
ரோமர் 2 : 21 (ECTA)
ஆனால் பிறருக்குக் கற்றுக்கொடுக்கும் நீங்களே கற்றுக் கொள்ளவில்லையே! திருடாதே எனப்பறைசாற்றுகிறீர்கள்; நீங்களே திருடுவதில்லையா?
ரோமர் 2 : 22 (ECTA)
விபசாரம் செய்யாதே எனச் சொல்கிறீர்கள்; நீங்களே விபசாரம் செய்வதில்லையா? தெய்வச் சிலைகளைத் தீட்டாகக் கருதுகிறீர்கள்; நீங்களே அவற்றின் கோவில்களைக் கொள்ளையிடுவதில்லையா?
ரோமர் 2 : 23 (ECTA)
திருச்சட்டத்தைப் பற்றிப் பெருமைப்படுகிறீர்கள்; நீங்களே அச்சட்டத்தை மீறிக் கடவுளை இழிவுபடுத்துவதில்லையா?
ரோமர் 2 : 24 (ECTA)
ஆம், மறைநூலில் எழுதியுள்ளவாறு "உங்களால் கடவுளின் பெயர் பிற இனத்தாரிடையே இகழப்படுகின்றது."
ரோமர் 2 : 25 (ECTA)
நீங்கள் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்தால் விருத்தசேதனத்தால் உங்களுக்கு பயனுண்டு; ஆனால் திருச்சட்டத்தை மீறினால் நீங்கள் விருத்தசேதனம் பெற்றிருந்தும் பெறாதவர்களாகவே இருக்கிறீர்கள்.
ரோமர் 2 : 26 (ECTA)
ஆகையால், விருத்தசேதனம் செய்துகொள்ளாத ஒருவர் திருச்சட்டத்தின் ஒழுங்குகளைக் கடைப்பிடித்தால், விருத்தசேதனம் செய்துகொள்ளாவிட்டாலும் விருத்தசேதனம் செய்து கொண்டவராக அவர் கருதப்படலாம் அல்லவா?
ரோமர் 2 : 27 (ECTA)
உடலில் விருத்தசேதனம் செய்யாதிருந்தும் திருச்சட்டத்தை நிறைவேற்றுவோர், எழுதிய சட்டத்தையும் விருத்தசேதனத்தையும் பெற்றிருந்தும் அச்சட்டத்தை மீறும் நீங்கள் குற்றவாளிகளெனத் தீர்ப்பு அளிப்பர்.
ரோமர் 2 : 28 (ECTA)
ஏனெனில், புறத் தோற்றத்தில் மட்டும் யூதராய் இருப்பவர் யூதரல்ல; அவ்வாறே, புறத்தோற்றத்தில், அதாவது உடலில் மட்டும் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனம் அல்ல.
ரோமர் 2 : 29 (ECTA)
ஆனால் அகத்தில் யூதராய் இருப்பவரே உண்மையான யூதர், உள்ளத்தில் செய்யப்படும் விருத்தசேதனமே உண்மையான விருத்தசேதனம். அது எழுதிய சட்டத்தின்படி செய்யப்படுவது அல்ல, தூய ஆவியால் செய்யப்படுவதாகும். அத்தகையவர் மனிதரிடமிருந்து அல்ல, கடவுளிடமிருந்தே பாராட்டுப் பெறுவர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29

BG:

Opacity:

Color:


Size:


Font: