வெளிபடுத்தல் 6 : 1 (ECTA)
ஏழு முத்திரைகள் பின்னர், ஆட்டுக்குட்டி ஏழு முத்திரைகளுள் முதலாவதை உடைக்கக் கண்டேன். அப்பொழுது நான்கு உயிர்களுள் முதலாவது “வா” என்று இடிமுழக்கம் போன்ற குரலில் அழைக்கக் கேட்டேன்.
வெளிபடுத்தல் 6 : 2 (ECTA)
உடனே, ஒரு வெள்ளைக் குதிரையைக் கண்டேன். அதன்மேல் ஏறியிருந்தவரிடம் ஒரு வில் இருந்தது. அவருக்கு வாகை சூட்டப்பட்டது. வெற்றிமேல் வெற்றி கொள்ள அவர் வெளியே புறப்பட்டுச் சென்றார். [* செக் 1:8; 6:3, 6 ]
வெளிபடுத்தல் 6 : 3 (ECTA)
ஆட்டுக்குட்டி இரண்டாவது முத்திரையை உடைத்தபொழுது அவ்வுயிர்களுள் இரண்டாவது, “வா” என்று அழைக்கக் கேட்டேன்.
வெளிபடுத்தல் 6 : 4 (ECTA)
அப்பொழுது சிவப்புக் குதிரை ஒன்று வெளியே வந்தது. அதன்மேல் ஏறியிருந்தவருக்கு, உலகில் அமைதியைக் குலைக்க அதிகாரம் கொடுக்கப்பட்டது; பெரியதொரு வாளும் அளிக்கப்பட்டது. மனிதர் தம்முள் ஒருவரை ஒருவர் படுகொலை செய்ய வேண்டுமென்றே இவை அவருக்குக் கொடுக்கப்பட்டன. [* செக் 1:8; 6: 2 ]
வெளிபடுத்தல் 6 : 5 (ECTA)
ஆட்டுக்குட்டி மூன்றாவது முத்திரையை உடைத்தபொழுது, அவ்வுயிர்களுள் மூன்றாவது “வா” என்று அழைக்கக் கேட்டேன்; தொடர்ந்து ஒரு கறுப்புக் குதிரையைக் கண்டேன். அதன்மேல் ஏறியிருந்தவருடைய கையில் ஒரு நிறைகோல் இருந்தது. [* செக் 6:2, 6 ]
வெளிபடுத்தல் 6 : 6 (ECTA)
நான்கு உயிர்களின் நடுவில் மனிதக் குரல் போன்ற ஓசை ஒன்று கேட்டது. அது, “ஒரு தெனாரியத்துக்கு* கோதுமை அரைப்படி; வாற்கோதுமை ஒன்றரைப் படி; எண்ணெயையும் திராட்சை இரசத்தையும் சேதப்படுத்தவேண்டாம்” என்றது. * ‘தெனாரியம்’ என்பது ஒரு நாள் கூலிக்கு இணையான உரோமை வெள்ளி நாணயம்..
வெளிபடுத்தல் 6 : 7 (ECTA)
ஆட்டுக்குட்டி நான்காவது முத்திரையை உடைத்தபொழுது அவ்வுயிர்களுள் நான்காவது, “வா” என்று அழைக்கக் கேட்டேன்.
வெளிபடுத்தல் 6 : 8 (ECTA)
தொடர்ந்து வெளிறிய பச்சைக் குதிரை ஒன்றைக் கண்டேன். அதன்மேல் ஏறியிருந்தவரின் பெயர் சாவு. பாதாளமும் அவரோடு சென்றது. வாள், பஞ்சம், கொள்ளைநோய் ஆகியவற்றாலும் மண்ணுலகின் விலங்குகளாலும் உலகின் கால் பகுதியை அழிக்க சாவுக்கும் பாதாளத்துக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டது. [* எசே 14: 21 ]
வெளிபடுத்தல் 6 : 9 (ECTA)
ஆட்டுக்குட்டி ஐந்தாவது முத்திரையை உடைத்தபொழுது, கடவுளின் வாக்கை அறிவித்துச் சான்று பகர்ந்ததற்காகக் கொலை செய்யப்பட்டவர்களின் ஆன்மாக்களைப் பலிபீடத்தின் அடியில் கண்டேன்.
வெளிபடுத்தல் 6 : 10 (ECTA)
அவர்கள் உரத்த குரலில், “தூய்மையும் உண்மையும் உள்ள தலைவரே, எவ்வளவு காலம் உலகில் வாழ்வோருக்கு நீர் தீர்ப்பு அளிக்காமல் இருப்பீர்? எங்களைக் கொலை செய்ததன் பொருட்டு எவ்வளவு காலம் அவர்களைப் பழிவாங்காமல் இருப்பீர்?” என்று கேட்டார்கள்.
வெளிபடுத்தல் 6 : 11 (ECTA)
அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வெண்மையான தொங்கலாடை அளிக்கப்பட்டது. இன்னும் சிறிது நேரம், அதாவது அவர்களின் உடன் பணியாளர்களான சகோதரர் சகோதரிகளும் அவர்களைப்போலவே கொல்லப்படவிருந்த காலம் நிறைவேறும் வரை அவர்கள் பொறுத்திருக்குமாறு அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
வெளிபடுத்தல் 6 : 12 (ECTA)
ஆட்டுக்குட்டி ஆறாவது முத்திரையை உடைக்கக் கண்டேன். அப்பொழுது பெரியதொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. கதிரவன் கறுப்புச் சாக்குத் துணி போலக் கறுத்தது. நிலவு முழுவதும் இரத்தம் போல் சிவந்தது. [* எசா 13:10; யோவே 2:10,31; 3:15; மத் 24:29; மாற் 13:24-25; லூக் 21: 25 ]
வெளிபடுத்தல் 6 : 13 (ECTA)
பெரும் காற்று அடிக்கும்பொழுது அத்திமரத்திலிருந்து காய்கள் உதிர்வது போன்று விண்மீன்கள் நிலத்தின்மீது விழுந்தன. [* எசா 34: 4 ]
வெளிபடுத்தல் 6 : 14 (ECTA)
சுருளேடு சுருட்டப்படுவதுபோல வானமும் சுருட்டப்பட்டு மறைந்தது. மலைகள், தீவுகள் எல்லாம் நிலை பெயர்ந்துபோயின. [* எசா 34: 4 ]
வெளிபடுத்தல் 6 : 15 (ECTA)
மண்ணுலகில் அரசர்கள், உயர்குடி மக்கள், ஆயிரத்தவர் தலைவர்கள், செல்வர், வலியோர், அடிமைகள், உரிமைக் குடிமக்கள் ஆகிய அனைவரும் குகைகளிலும் மலைப் பாறைகளின் இடுக்குகளிலும் ஒளிந்து கொண்டார்கள். [* எசா 2:19, 21 ]
வெளிபடுத்தல் 6 : 16 (ECTA)
அவர்கள் அந்த மலைகளிடமும் பாறைகளிடமும், “எங்கள்மீது விழுங்கள், அரியணை மேல் வீற்றிருப்பவருடைய முகத்தினின்றும் ஆட்டுக்குட்டியின் சினத்தினின்றும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்; [* ஓசே10:8; லூக் 23: 30 ]
வெளிபடுத்தல் 6 : 17 (ECTA)
ஏனெனில், அவர்களது சினம் வெளிப்படும் கொடிய நாள் வந்துவிட்டது. அதற்குமுன் நிற்க யாரால் இயலும்?” என்று புலம்பினார்கள். [* யோவே 2:11; மலா 3: 2 ]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17