வெளிபடுத்தல் 18 : 1 (ECTA)
இதன்பின் வேறொரு வானதூதர் விண்ணகத்திலிருந்து இறங்கிவரக் கண்டேன். மிகுந்த அதிகாரம் கொண்டிருந்த அவருடைய மாட்சியால் மண்ணகம் ஒளிர்ந்தது.
வெளிபடுத்தல் 18 : 2 (ECTA)
அவர் வல்லமையோடு குரலெழுப்பிப் பின்வருமாறு கத்தினார் "வீழ்ந்தது! வீழ்ந்தது பாபிலோன் மாநகர்! அவள் பேய்களின் உறைவிடமாக, அனைத்துத் தீய ஆவிகளின் பதுங்கிடமாக, தூய்மையற்ற பறவைகள் அனைத்தின் புகலிடமாக, தூய்மையற்ற வெறுக்கத்தக்க விலங்குகளின் இருப்பிடமாக மாறிவிட்டாள்.
வெளிபடுத்தல் 18 : 3 (ECTA)
அவ்விலைமகளின் காமவெறி என்னும் மதுவை எல்லா நாட்டினரும் குடித்தனர்; மண்ணுலக அரசர்கள் அவளோடு பரத்தைமையில் ஈடுபட்டார்கள்; உலகின் வணிகர்கள் அவளுடைய வளங்களால் செல்வர்கள் ஆனார்கள்.
வெளிபடுத்தல் 18 : 4 (ECTA)
பின்னர் விண்ணிலிருந்து இன்னொரு குரலைக் கேட்டேன்; அது சொன்னது; என் மக்களே, அந்நகரைவிட்டு வெளியேறுங்கள், அவளுடைய பாவங்களில் பங்கு கொள்ளாதிருக்கவும் அவளுக்கு நேரிடும் வாதைகளுக்கு உட்படாதிருக்கவும் வெளியே போய்விடுங்கள்.
வெளிபடுத்தல் 18 : 5 (ECTA)
அவளின் பாவங்கள் வானைத்தொடும் அளவுக்குக் குவிந்துள்ளன; கடவுள் அவளின் குற்றங்களை நினைவில் கொண்டுள்ளார்.
வெளிபடுத்தல் 18 : 6 (ECTA)
அவள் உங்களை நடத்தியவாறே நீங்களும் அவளை நடத்துங்கள்; அவளுடைய செயல்களுக்கு ஏற்ப இரட்டிப்பாகத் திருப்பிக் கொடுங்கள்; அவள் உங்களுக்குக் கலந்து கொடுத்த மதுவுக்குப் பதிலாக இரு மடங்கு கொடுங்கள்.
வெளிபடுத்தல் 18 : 7 (ECTA)
அவள் தன்னையே பெருமைப்படுத்தி இன்பம் துய்த்து வாழ்ந்ததற்கு ஏற்ப அவள் வேதனையுற்றுத் துயரடையச் செய்யுங்கள். ஏனெனில், "நான் அரசியாக வீற்றிருக்கிறேன்; நான் கைம்பெண் அல்ல; நான் ஒருபோதும் துயருறேன்" என்று அவள் தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டாள்.
வெளிபடுத்தல் 18 : 8 (ECTA)
இதன்பொருட்டுச் சாவு, துயரம், பஞ்சம் ஆகிய வாதைகள் ஒரே நாளில் அவள்மீது வந்து விழும்; நெருப்பு அவளைச் சுட்டெரித்துவிடும்; ஏனெனில் அவளுக்குத் தீர்ப்பு வழங்கும் ஆண்டவராகிய கடவுள் வலிமை வாய்ந்தவர்."
வெளிபடுத்தல் 18 : 9 (ECTA)
அந்நகரோடு பரத்தைமையில் ஈடுபட்டு இன்பம் துய்த்து வாழ்ந்த மண்ணுலக அரசர்கள் அவள் எரியும் போது எழும் புகையைப் பார்த்து அழுது மாரடித்துப் புலம்புவார்கள்.
வெளிபடுத்தல் 18 : 10 (ECTA)
அவள் படும் வேதனையைக் கண்டு அஞ்சித் தொலையில் நின்று கொண்டு, "ஐயோ! மாநகரே நீ கேடுற்றாயே! அந்தோ! வலிமை வாய்ந்த பாபிலோனே உனக்குக் கேடு வந்ததே! ஒரே மணி நேரத்தில் உனக்குத் தீர்ப்பு வந்துவிட்டதே. "என்பார்கள்.
வெளிபடுத்தல் 18 : 11 (ECTA)
மண்ணக வணிகர்களும் அவளை நினைத்து அழுது புலம்புவார்கள். ஏனெனில் அவர்களுடைய சரக்குகளை இனி வாங்குவார் எவரும் இலர்.
வெளிபடுத்தல் 18 : 12 (ECTA)
பொன், வெள்ளி, விலையுயர்ந்த கல், முத்துகள், விலையுயர்ந்த மெல்லிய ஆடை, கருஞ்சிவப்பு ஆடை, பட்டாடை, செந்நிற ஆடை, பலவகை மணம் வீசும் மரக்கட்டைகள், தந்தத்தினாலான பலவகைப் பொருள்கள், விலையுயர்ந்த மரம், வெண்கலம், இரும்பு, சலவைக்கல் ஆகியவற்றாலான பொருள்கள்,
வெளிபடுத்தல் 18 : 13 (ECTA)
இலவங்கம், நறுமணப் பொருள்கள், தூப வகைகள், நறுமணத் தைலம், சாம்பிராணி, திராட்சை மது, எண்ணெய், உயர்ரக மாவு, கோதுமை, ஆடுமாடுகள், குதிரைகள், தேர்கள், அடிமைகள் ஆகிய மனித உயிர்கள் ஆகியவற்றையெல்லாம் வாங்க எவரும் இலர்.
வெளிபடுத்தல் 18 : 14 (ECTA)
"நீ விரும்பிய கனிகள் உன்னைவிட்டு அகன்றுபோயின; உன் மினுக்கு, பகட்டு எல்லாம் ஒழிந்துபோயின; இனி யாரும் அவற்றைக் காணப் போவதில்லை" என்பார்கள்.
வெளிபடுத்தல் 18 : 15 (ECTA)
இச்சரக்குகளைக் கொண்டு அவளோடு வாணிகம் செய்து செல்வம் திரட்டியவர்கள் அவளது வேதனையைக் கண்டு அஞ்சி, தொலையிலேயே நின்ற வண்ணம் அழுது புலம்புவார்கள்.
வெளிபடுத்தல் 18 : 16 (ECTA)
"ஐயோ, மாநகரே, நீ கேடுற்றாயே! விலையுயர்ந்த மெல்லிய ஆடையும் செந்நிற கருஞ்சிவப்பு உடையும் அணிந்து, பொன், விலையுயர்ந்த கல், முத்துகளால் அணிசெய்து கொண்டவளே! அந்தோ! உனக்குக் கேடு வந்ததே!
வெளிபடுத்தல் 18 : 17 (ECTA)
இவ்வளவு செல்வமும் ஒரே மணி நேரத்தில் பாழாய்ப் போய்விட்டதே" என்பார்கள். கப்பல் தலைவர்கள், கடல் பயணிகள், கப்பலோட்டிகள், கடல் வணிகர்கள் ஆகிய அனைவரும் தொலையிலேயே நின்றார்கள்.
வெளிபடுத்தல் 18 : 18 (ECTA)
அவள் எரிந்தபோது எழுந்த புகையைப் பார்த்து "இம்மாநகருக்கு இணையான நகர் உண்டோ!" என்று கதறினார்கள்.
வெளிபடுத்தல் 18 : 19 (ECTA)
அவர்கள் தங்கள் தலைமேல் புழுதியை வாரிப்போட்டுக் கொண்டு அழுது புலம்பினார்கள்; "ஐயோ, மாநகரே, நீ கேடுற்றாயே! கடலில் கப்பலோட்டிய அனைவரையும் தன் செல்வச் செழிப்பால் செல்வராக்கிய நீ ஒரே மணிநேரத்தில் பாழடைந்து விட்டாயே!" என்று கதறினார்கள்.
வெளிபடுத்தல் 18 : 20 (ECTA)
"விண்ணகமே, இறைமக்களே, திருத்தூதர்களே, இறைவாக்கினர்களே, அவளைமுன்னிட்டு மகிழ்ந்து கொண்டாடுங்கள்; கடவுள் உங்கள் சார்பாக அவளுக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கிவிட்டார்.
வெளிபடுத்தல் 18 : 21 (ECTA)
பின்னர் வலிமை வாய்ந்த ஒரு வானதூதர் பெரிய எந்திரக்கல் போன்ற ஒரு கல்லைத் தூக்கிக் கடலில் எறிந்து பின்வருமாறு கூறினார்; "பாபிலோன் மாநகரே, நீ இவ்வாறு வீசி எறியப்படுவாய்; நீ இருந்த இடம் தெரியாமல் அழிந்து விடுவாய்.
வெளிபடுத்தல் 18 : 22 (ECTA)
யாழை மீட்டுவோர், பாடகர், குழல் ஊதுவோர், எக்காளம் முழக்குவோர் ஆகியோர் எழுப்பும் இசை இனி உன் நடுவே எழவே எழாது; தொழில் செய்யும் கைவினைஞர் அனைவரும் இனி உன் நடுவே குடியிருக்கவே மாட்டார்கள்; எந்திரக்கல் எழுப்பும் ஒலி இனி உன் நடுவே எழவே எழாது.
வெளிபடுத்தல் 18 : 23 (ECTA)
விளக்கின் ஒளி இனி உன்னகத்தே ஒளிரவே ஒளிராது; மணமக்களின் மங்கல ஒலி இனி உன்னகத்தே எழவே எழாது; ஏனெனில் உன் வணிகர்கள் மண்ணுலகில் பெருங்குடி மக்களாய் விளங்கினார்கள்; உன் பில்லிசூனியம் எல்லா நாடுகளையும் ஏமாற்றிவிட்டது.
வெளிபடுத்தல் 18 : 24 (ECTA)
இறைவாக்கினர்கள், இறைமக்களின் இரத்தக்கறையும், ஏன், மண்ணுலகில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தக்கறையுமே அவளிடம் காணப்பட்டது."

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24

BG:

Opacity:

Color:


Size:


Font: