வெளிபடுத்தல் 17 : 1 (ECTA)
8.பாபிலோனின் அழிவும் எதிரிகளின் தோல்வியும்பேர்போன விலைமகளும் கருஞ்சிவப்பு விலங்கும் ஏழு கிண்ணங்களைக் கொண்டிருந்த ஏழு வான தூதர்களுள் ஒருவர் வந்து என்னோடு பேசி, “வா, நீர்த்திரள்மேல் அமர்ந்திருக்கும் பேர் போன விலைமகளுக்கு வரவிருக்கும் தண்டனையை உனக்குக் காட்டுவேன். [* எரே 51: 13 ]
வெளிபடுத்தல் 17 : 2 (ECTA)
மண்ணுலகின் அரசர்கள் அவளோடு பரத்தைமையில் ஈடுபட்டார்கள். மண்ணுலகில் வாழ்வோர் அவளது பரத்தைமை என்னும் மதுவினால் வெறிகொண்டிருக்கிறார்கள்” என்றார். [* எசா 23:17; எரே 51: 7 ]
வெளிபடுத்தல் 17 : 3 (ECTA)
அப்பொழுது தூய ஆவியால் ஆட்கொள்ளப்பெற்ற என்னை அந்த வானதூதர் பாலைநிலத்துக்குக் கொண்டு சென்றார். அங்கே கருஞ்சிவப்பு விலங்கின்மீது அமர்ந்திருந்த ஒரு பெண்ணைக் கண்டேன். அவ்விலங்கின் உடல் முழுதும் கடவுளைப் பழித்துரைக்கும் பெயர்கள் நிறைந்திருந்தன. அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன. [* திவெ 13: 1 ]
வெளிபடுத்தல் 17 : 4 (ECTA)
அப்பெண் செந்நிற கருஞ்சிவப்பு ஆடைகளை அணிந்திருந்தாள்; பொன், விலையுயர்ந்த கல், முத்து ஆகியவற்றால் அணி செய்யப்பட்டிருந்தாள். அவளது பரத்தைமையின் அருவருப்பும் அழுக்கும் நிறைந்த பொன் கிண்ணம் அவளது கையில் இருந்தது.
வெளிபடுத்தல் 17 : 5 (ECTA)
மறைபொருள் கொண்ட பெயர் ஒன்று அவளது நெற்றியில் எழுதப்பட்டிருந்தது; “பாபிலோன் மாநகர் விலைமகளிருக்கும் மண்ணுலகின் அருவருப்புகள் அனைத்துக்குமே தாய்” என்பதே அதன் பொருள்.
வெளிபடுத்தல் 17 : 6 (ECTA)
அப்பெண் இறைமக்களின் இரத்தத்தையும் இயேசுவின் சாட்சிகளுடைய இரத்தத்தையும் குடித்து வெறி கொண்டிருக்கக் கண்டேன். நான் அவளைக் கண்டபோது பெரும் வியப்பில் ஆழ்ந்தேன்.
வெளிபடுத்தல் 17 : 7 (ECTA)
அதற்கு அந்த வானதூதர் என்னிடம் கூறியது: “நீ வியப்பு அடைவது ஏன்? அப்பெண்ணைப்பற்றிய மறைபொருளையும், ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் கொண்டதாய் அவளைச் சுமந்து செல்லும் விலங்கின் மறைபொருளையும் உனக்குச் சொல்கிறேன்.
வெளிபடுத்தல் 17 : 8 (ECTA)
நீ கண்ட விலங்கு முன்பு உயிரோடு இருந்தது; இப்போது இல்லை. படுகுழியிலிருந்து அது ஏறிவரவிருக்கிறது; ஆனால், அழிந்துவிடும். உலகம் தோன்றியதுமுதல் வாழ்வின் நூலில் பெயர் எழுதப்படாத மண்ணுலகுவாழ் மக்கள் அனைவரும் அந்த விலங்கைக் கண்டு வியப்பு அடைவார்கள்; ஏனெனில், அது முன்பு உயிரோடு இருந்தது, இப்பொழுது இல்லை. ஆனால், மீண்டும் உயிர் பெற்று வரும். [* தானி 7:17; திவெ 11:7; திபா 69: 28 ]
வெளிபடுத்தல் 17 : 9 (ECTA)
இதைப் புரிந்துகொள்ள ஞானம் தேவைப்படுகிறது; அந்த ஏழு தலைகளும் அப்பெண் அமர்ந்திருக்கும் ஏழு மலைகளைக் குறிக்கும்; ஏழு அரசர்களையும் குறிக்கும்.
வெளிபடுத்தல் 17 : 10 (ECTA)
இந்த அரசர்களுள் ஐவர் வீழ்ச்சியுற்றவர். இப்போது ஒருவர் ஆட்சி செலுத்துகிறார். இன்னொருவர் இன்னும் தோன்றவில்லை. அவர் தோன்றிச் சிறிது காலமே ஆட்சி புரிய முடியும்.
வெளிபடுத்தல் 17 : 11 (ECTA)
முன்பு உயிரோடு இருந்து இப்போது இல்லாத அந்த விலங்கு எட்டாவது அரசரைக் குறிக்கும். அந்த ஏழு அரசர்களுள் ஒருவரான அவரும் அழிந்துவிடுவார்.
வெளிபடுத்தல் 17 : 12 (ECTA)
நீ கண்ட பத்துக் கொம்புகளும் பத்து அரசர்களைக் குறிக்கும். அவர்கள் இன்னும் ஆட்சியுரிமை பெறவில்லை. ஆனால், அவர்கள் விலங்கோடு சேர்ந்து ஒரு மணி அளவு அரசாள அதிகாரம் பெறுவார்கள். * தானி 7:24..
வெளிபடுத்தல் 17 : 13 (ECTA)
அவர்கள் ஒருமனப்பட்டவராய்த் தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் அவ்விலங்கிடம் ஒப்படைத்தார்கள்.
வெளிபடுத்தல் 17 : 14 (ECTA)
அவர்கள் ஆட்டுக்குட்டியோடு போர் புரிவார்கள். ஆனால், அது அவர்களை வென்றுவிடும்; கடவுளால் அழைக்கப்பெற்று, தேர்ந்தெடுக்கப் பெற்று உண்மை உள்ளவர்களாய் ஆட்டுக்குட்டியோடு இருப்பவர்களும் வெற்றி கொள்வார்கள்; ஏனெனில், ஆட்டுக் குட்டி ஆண்டவருக்கெல்லாம் ஆண்டவர். அரசருக்கெல்லாம் அரசர்.”
வெளிபடுத்தல் 17 : 15 (ECTA)
வானதூதர் தொடர்ந்து என்னிடம் சொன்னது: “அந்த விலைமகள் நீர்த்திரள்மேல் அமர்ந்திருக்க நீ கண்டாய். அந்த நீர்த்திரள் பல்வேறு இனத்தினர், மக்கள் கூட்டத்தினர், நாட்டினர், மொழியினர் ஆகியோரைக் குறிக்கும்.
வெளிபடுத்தல் 17 : 16 (ECTA)
நீ கண்ட பத்துக் கொம்புகளும் விலங்கும் அந்த விலைமகள்மீது வெறுப்புக் கொண்டு, அவளிடமிருந்து அனைத்தையும் பறித்துவிட்டு, அவளைப் பிறந்தமேனி ஆக்கும்; அவளது சதையைத் தின்று, அவளை நெருப்பினால் சுட்டெரிக்கும்.
வெளிபடுத்தல் 17 : 17 (ECTA)
ஏனெனில், கடவுள் தமது நோக்கத்தை நிறைவேற்றவே அந்நாட்டினரின் உள்ளங்களைத் தூண்டிவிட்டார். அவரது வாக்கு நிறைவேறும்வரை, அவர்கள் ஒருமனப்பட்டவராய்த் தங்களது ஆட்சியை விலங்கிடம் ஒப்படைத்ததும் அதே காரணத்தினால்தான்.
வெளிபடுத்தல் 17 : 18 (ECTA)
நீ கண்ட பெண் மண்ணுலக அரசர்கள்மீது ஆட்சி செலுத்தும் மாநகர் ஆகும்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18