வெளிபடுத்தல் 14 : 1 (ECTA)
மேலும், சீயோன் மலைமீது ஆட்டுக்குட்டி நிற்கக் கண்டேன். அதன் பெயரையும் அதனுடைய தந்தையின் பெயரையும் தங்களது நெற்றியில் பொறித்திருந்த ஓர் இலட்சத்து நாற்பத்து நான்காயிரம்பேர் அதனுடன் இருந்தனர்.
வெளிபடுத்தல் 14 : 2 (ECTA)
பின்பு விண்ணகத்திலிருந்து ஒரு குரலைக் கண்டேன். அது பெரும் வெள்ளத்தின் இரைச்சல்போலும் பேரிடி முழக்கம்போலும் யாழை மீட்டுவோர் எழுப்பும் இசைபோலும் ஒலித்தது.
வெளிபடுத்தல் 14 : 3 (ECTA)
அந்த ஓர் இலட்சத்து நாற்பத்து நான்காயிரம் பேரும் அரியணை முன்னிலையில் நான்கு உயிர்களுக்கும் மூப்பர்களுக்கும் முன்பாகப் புதியதொரு பாடலைப் பாடிக்கொண்டிருந்தார்கள். மண்ணுலகிலிருந்து விலை கொடுத்து மீட்கப்பட்ட அவர்களைத் தவிர வேறு யாராலும் அந்தப் பாடலைக் கற்றுக்கொள்ள இயலவில்லை.
வெளிபடுத்தல் 14 : 4 (ECTA)
அவர்கள் பெண்களோடு சேர்ந்து தங்களைக் கறைப்படுத்திக்கொள்ளாமல் கற்பைக் காத்துக்கொண்டவர்கள்; அட்டுக்குட்டி சென்ற இடம் எங்கும் அதைப் பின்தொடர்ந்தவர்கள்; கடவுளுக்கும் ஆட்டுக்குட்டிக்கும் உரிய முதற்கனியாக மனித குலத்திலிருந்து விலை கொடுத்து மீட்கப்பட்டவர்கள்.
வெளிபடுத்தல் 14 : 5 (ECTA)
அவர்களது வாயினின்று பொய்யே வந்ததில்லை; ஏனெனில் அவர்கள் மாசற்றவர்கள்.
வெளிபடுத்தல் 14 : 6 (ECTA)
பின்பு வேறொரு வானதூதர் நடுவானில் பறந்துகொண்டிருக்கக் கண்டேன். அவர் மண்ணுலகில் வாழ்வோருக்கு, அதாவது நாடு, குலம், மொழி, மக்களினம் ஆகிய அனைத்துக்கும் அறிவிக்கும் பொருட்டு எக்காலத்துக்கும் உரிய நற்செய்தியை வைத்திருந்தார்.
வெளிபடுத்தல் 14 : 7 (ECTA)
"கடவுளுக்கு அஞ்சுங்கள்; அவரைப் போற்றிப் புகழுங்கள். ஏனெனில் அவர் தீர்ப்பளிக்கும் நேரம் வந்துவிட்டது. மண், கடல், நீரூற்றுகள் ஆகியவற்றைப் படைத்தவரை வணங்குங்கள்" என்று அவர் உரத்த குரலில் கூறினார்.
வெளிபடுத்தல் 14 : 8 (ECTA)
மற்றொரு வானதூதர் அவரைத் தொடர்ந்து வந்தார். இந்த இரண்டாம் தூதர், "வீழ்ந்தது! பரத்தைமை என்னும் தன் மதுவை எல்லா நாட்டினரும் குடித்து வெறிகொள்ளச் செய்த பாபிலோன் மாநகர் வீழ்ந்தது!" என்றார்.
வெளிபடுத்தல் 14 : 9 (ECTA)
வேறொரு வானதூதர் அவர்களைத் தொடர்ந்து வந்தார். அந்த மூன்றாம் வானதூதர் உரத்த குரலில் கூறியது; "விலங்கையும் அதன் சிலையையும் வணங்கி, தங்கள் நெற்றியிலோ கையிலோ குறி இட்டுக்கொண்டோர் அனைவரும்
வெளிபடுத்தல் 14 : 10 (ECTA)
கடவுளின் சீற்றம் என்னும்; மதுவை-அவர்தம் சினம் என்னும் கிண்ணத்தில் கலப்பின்றி ஊற்றப்பட்ட அந்த மதுவை-குடித்தே தீர வேண்டும். அவர்கள் தூய வானதூதர் முன்னிலையிலும் ஆட்டுக்குட்டியின் முன்னிலையிலும் நெருப்பாலும் கந்தகத்தாலும் வதைக்கப்படுவார்கள்.
வெளிபடுத்தல் 14 : 11 (ECTA)
அவர்களை வதைத்த நெருப்பிலிருந்து எழுந்த புகை என்றென்றும் மேலே எழுந்த வண்ணம் உள்ளது. அந்த விலங்கையும் அதன் சிலையையும் வணங்குவோருக்கும் அதனுடைய பெயரைக் குறியாக இட்டுக்கொண்டோருக்கும் அல்லும் பகலும் ஓய்வே இராது.
வெளிபடுத்தல் 14 : 12 (ECTA)
ஆகவே கடவுளுடைய கட்டளைகளைக் கடைபிடித்து, இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டிருக்கும் இறைமக்களுக்கு மனவுறுதி தேவை."
வெளிபடுத்தல் 14 : 13 (ECTA)
பின்பு விண்ணகத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டேன்; ""இது முதல் ஆண்டவரோடு இணைந்த நிலையில் இறப்போர் பேறுபெற்றோர்" என எழுது" என்று அது ஒலித்தது. அதற்குத் தூய ஆவியார், "ஆம், அவர்கள் தங்கள் உழைப்பிலிருந்து ஓய்வு பெறுவார்கள்; ஏனெனில் அவர்களின் செயல்கள் அவர்களைப் பின்தொடரும்" என்று கூறினார்.
வெளிபடுத்தல் 14 : 14 (ECTA)
பின்பு ஒரு வெண் மேகத்தைக் கண்டேன். அதன்மீது மானிட மகனைப்போன்ற ஒருவர் வீற்றிருந்தார். அவரது தலையில் பொன் முடியும் கையில் கூர்மையான அரிவாளும் காணப்பட்டன.
வெளிபடுத்தல் 14 : 15 (ECTA)
மற்றொரு வானதூதர் கோவிலிருந்து வெளியே வந்து, மேகத்தின்மீது வீற்றிருந்தவரை நோக்கி, "உமது அரிவாளை எடுத்து அறுவடை செய்யும்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது; மண்ணுலகம் என்னும் பயிர் முற்றிவிட்டது" என்று உரத்த குரலில் கத்தினார்.
வெளிபடுத்தல் 14 : 16 (ECTA)
உடனே மேகத்தின்மீது வீற்றிருந்தவர் மண்ணுலகெங்கும் தமது அரிவாளை வீசி அறுவடை செய்தார்.
வெளிபடுத்தல் 14 : 17 (ECTA)
மற்றொரு வானதூதரும் விண்ணகத்தில் உள்ள கோவிலிருந்து வெளியே வந்தார். அவரிடமும் கூர்மையான அரிவாள் ஒன்று இருந்தது.
வெளிபடுத்தல் 14 : 18 (ECTA)
நெருப்பின்மேல் அதிகாரம் கொண்டிருந்த இன்னுமொரு வானதூதர் பலிபீடத்திலிருந்து வெளியே வந்தார். அவர் கூர்மையான அரிவாளை வைத்திருந்தவரிடம், "உமது கூர்மையான அரிவாளை எடுத்து மண்ணுலகின் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்த்திடும்; ஏனெனில் திராட்சை கனிந்துவிட்டது" என்று உரத்த குரலில் கூறினார்.
வெளிபடுத்தல் 14 : 19 (ECTA)
ஆகவே அந்த வானதூதர் மண்ணுலகின்மீது தம் அரிவாளை வீசி மண்ணுலகின் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்த்தார்; கடவுளின் சீற்றம் என்னும் பெரிய பிழிவுக்குழியில் அவற்றைப் போட்டார்.
வெளிபடுத்தல் 14 : 20 (ECTA)
நகருக்கு வெளியே இருந்த அந்தப் பிழிவுக்குழியில் அவை மிதிக்கப்ட்டன. அந்தப் பிழிவுக்குழியிலிருந்து இரத்த வெள்ளம் ஏறத்தாழ இரண்டு மீட்டர் ஆழம், முந்நூறு கிலோ மீட்டர் தொலைக்குப் பாய்ந்தோடியது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

BG:

Opacity:

Color:


Size:


Font: