சங்கீதம் 90 : 1 (ECTA)
நான்காம் பகுதிமனிதரின் நிலையாமை
(கடவுளின் அடியார் மோசேயின் மன்றாட்டு) என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடமாய் உள்ளீர்.
சங்கீதம் 90 : 2 (ECTA)
மலைகள் தோன்றுமுன்பே, நிலத்தையும் உலகையும் நீர் உருவாக்குமுன்பே, ஊழி ஊழிக்காலமாய் உள்ள இறைவன் நீரே!
சங்கீதம் 90 : 3 (ECTA)
மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; ‘மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்’ என்கின்றீர்.
சங்கீதம் 90 : 4 (ECTA)
ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. [* 2 சாமு 7:12-16; 1 குறி 17:11-14; திபா 132:11; திப 2: 30 ]
சங்கீதம் 90 : 5 (ECTA)
வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்;
சங்கீதம் 90 : 6 (ECTA)
அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்து போகும்.
சங்கீதம் 90 : 7 (ECTA)
உமது சினத்தால் நாங்கள் அழிந்து போகின்றோம்; உமது சீற்றத்தால் நாங்கள் திகைப்படைகின்றோம்.
சங்கீதம் 90 : 8 (ECTA)
எம் குற்றங்களை உம் கண்முன் நிறுத்தினீர்; மறைவான எம் பாவங்களை உம் திருமுக ஒளிமுன் வைத்தீர்.
சங்கீதம் 90 : 9 (ECTA)
எங்கள் அனைத்து வாழ்நாள்களும் உமது சினத்தால் முடிவுக்கு வந்துவிட்டன; எங்கள் ஆண்டுகள் பெருமூச்செனக் கழிந்துவிட்டன.
சங்கீதம் 90 : 10 (ECTA)
எங்கள் வாழ்நாள் எழுபது ஆண்டுகளே; வலிமை மிகுந்தோர்க்கு எண்பது; அவற்றில் பெருமைக்கு உரியன துன்பமும் துயரமுமே! அவை விரைவில் கடந்துவிடுகின்றன. நாங்களும் பறந்துவிடுகின்றோம்.
சங்கீதம் 90 : 11 (ECTA)
உமது சினத்தின் வலிமையை உணர்பவர் எவர்? உமது கடுஞ்சீற்றத்துக்கு அஞ்சுபவர் எவர்?
சங்கீதம் 90 : 12 (ECTA)
எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்.
சங்கீதம் 90 : 13 (ECTA)
ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும்.
சங்கீதம் 90 : 14 (ECTA)
காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.
சங்கீதம் 90 : 15 (ECTA)
எங்களை நீர் ஒடுக்கிய நாள்களுக்கும் நாங்கள் தீங்குற்ற ஆண்டுகளுக்கும் ஈடாக, எம்மை மகிழச் செய்யும்.
சங்கீதம் 90 : 16 (ECTA)
உம் அடியார்மீது உம் செயலும் அவர்தம் மைந்தர்மீது உமது மாட்சியும் விளங்கச் செய்யும்.
சங்கீதம் 90 : 17 (ECTA)
எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்!
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17