சங்கீதம் 83 : 1 (ECTA)
இஸ்ரயேலின் எதிரிகளது வீழ்ச்சிக்காக மன்றாடல்
(ஆசாபின் புகழ்ப்பாடல்)
கடவுளே! மௌனமாய் இராதேயும்; பேசாமல் இராதேயும்; இறைவனே! அமைதியாய் இராதேயும்.
சங்கீதம் 83 : 2 (ECTA)
ஏனெனில், உம் எதிரிகள் அமளி செய்கின்றார்கள்; உம்மை வெறுப்போர் தலைதூக்குகின்றார்கள்.
சங்கீதம் 83 : 3 (ECTA)
உம் மக்களுக்கு எதிராக வஞ்சகமாய்ச் சதி செய்கின்றார்கள்; உம் பாதுகாப்பில் உள்ளோர்க்கு எதிராகச் சூழ்ச்சி செய்கின்றார்கள்.
சங்கீதம் 83 : 4 (ECTA)
அவர்கள் கூறுகின்றார்கள்; ‛ஓர் இனமாக அவர்களை இல்லாதவாறு ஒழித்திடுவோம்; இஸ்ரயேலின் பெயரை எவரும் நினையாதவாறு செய்திடுவோம்.’
சங்கீதம் 83 : 5 (ECTA)
அவர்கள் ஒருமனப்பட்டுச் சதி செய்கின்றார்கள்; உமக்கு எதிராக உடன்படிக்கை செய்து கொண்டார்கள்.
சங்கீதம் 83 : 6 (ECTA)
ஏதோமின் கூடாரத்தார், இஸ்மயேலர், மோவாபியர், அக்ரியர்,
சங்கீதம் 83 : 7 (ECTA)
கெபாலியர், அம்மோனியர், அமலேக்கியர், பெலிஸ்தியர் மற்றும் தீர்வாழ் மக்களே அவர்கள்.
சங்கீதம் 83 : 8 (ECTA)
அவர்களோடு அசீரியரும் சேர்ந்துகொண்டு, லோத்தின் மைந்தருக்கு வலக்கையாய் இருந்தனர். (சேலா)
சங்கீதம் 83 : 9 (ECTA)
மிதியானுக்கும், கீசோன் ஆற்றின் அருகே சீசராவுக்கும் யாபீனுக்கும் செய்தது போல, அவர்களுக்கும் செய்தருளும். [* நீத 4:6-22; 7:1- 23 ]
சங்கீதம் 83 : 10 (ECTA)
அவர்கள் ஏந்தோரில் அழிக்கப்பட்டார்கள்; அவர்கள் மண்ணுக்கு உரமானார்கள்.
சங்கீதம் 83 : 11 (ECTA)
ஓரேபுக்கும் செயேபுக்கும் செய்ததுபோல் அவர்களின் உயர்குடி மக்களுக்கும் செய்தருளும்!
செபாருக்கும் சல்முன்னாவுக்கும்
செய்ததுபோல் அவர்களின் தலைவர்களுக்கும் செய்தருளும். [* நீத 7:25; 8:12.. ]
சங்கீதம் 83 : 12 (ECTA)
ஏனெனில், ‛கட‌வுளின் மேய்ச்சல் நிலத்தை நமக்கு உரிமையாக்கிக் கொள்வோம்’ என்று அவர்கள் கூறினார்கள்.
சங்கீதம் 83 : 13 (ECTA)
என் கடவுளே! சூறாவளியில் புழுதியென, காற்றில் பதரென அவர்களை ஆக்கியருளும்.
சங்கீதம் 83 : 14 (ECTA)
நெருப்பு காட்டை எரிப்பது போலவும், தீக்கனல் மலைகளைச் சுட்டெரிப்பது போலவும் அவர்களுக்குச் செய்தருளும்.
சங்கீதம் 83 : 15 (ECTA)
உமது புயலால் அவர்களைத் துரத்திவிடும்! உமது சூறாவளியால் அவர்களைத் திகிலடையச் செய்யும்.
சங்கீதம் 83 : 16 (ECTA)
ஆண்டவரே, மானக்கேட்டினால் அவர்கள் முகத்தை மூடும்; அப்பொழுதுதான் அவர்கள் உமது பெயரை நாடுவார்கள்.
சங்கீதம் 83 : 17 (ECTA)
அவர்கள் என்றென்றும் வெட்கிக் கலங்குவார்களாக! நாணமுற்று அழிந்து போவார்களாக!
சங்கீதம் 83 : 18 (ECTA)
‛ஆண்டவர்’ என்னும் பெயர் தாங்கும் உம்மை, உலகனைத்திலும் உன்னதரான உம்மை, அவர்கள் அறிந்து கொள்வார்களாக!

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18