சங்கீதம் 80 : 1 (ECTA)
நாட்டின் புதுவாழ்வுக்காக மன்றாடல்
(பாடகர் தலைவர்க்கு: ‘சான்றுபகர் லீலிமலர்’ என்ற மெட்டு; ஆசாபின் புகழ்ப்பா)
இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! யோசேப்பை மந்தையென நடத்திச் செல்கின்றவரே!
கேருபுகளின் மீது வீற்றிருப்பவரே,
ஒளிர்ந்திடும்! [* விப 25: 22 ]
சங்கீதம் 80 : 2 (ECTA)
எப்ராயிம், பென்யமின், மனாசேயின் முன்னிலையில் உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்!
சங்கீதம் 80 : 3 (ECTA)
கடவுளே, எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்! எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்!
சங்கீதம் 80 : 4 (ECTA)
படைகளின் கடவுளாம் ஆண்டவரே! உம் மக்களின் வேண்டுதலுக்கு எதிராக எத்தனை நாள் நீர் சினம் கொண்டிருப்பீர்?
சங்கீதம் 80 : 5 (ECTA)
கண்ணீராம் உணவை அவர்கள் உண்ணச் செய்தீர்; கண்ணீரை அவர்கள் பெருமளவு பருகச் செய்தீர்.
சங்கீதம் 80 : 6 (ECTA)
எங்கள் அண்டை நாட்டாருக்கு எங்களைச் சர்ச்சைப்பொருள் ஆக்கினீர்; எங்கள் எதிரிகள் எம்மை ஏளனம் செய்தார்கள்.
சங்கீதம் 80 : 7 (ECTA)
படைகளின் கடவுளே! எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்; எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்.
சங்கீதம் 80 : 8 (ECTA)
எகிப்தினின்று திராட்சைக்செடி ஒன்றைக் கொண்டுவந்தீர்; வேற்றினத்தாரை விரட்டிவிட்டு அதனை நட்டு வைத்தீர்.
சங்கீதம் 80 : 9 (ECTA)
அதற்கென நிலத்தை ஒழுங்குபடுத்திக் கொடுத்தீர்; அது ஆழ வேரூன்றி நாட்டை நிரப்பியது.
சங்கீதம் 80 : 10 (ECTA)
அதன் நிழல் மலைகளையும் அதன் கிளைகள் வலிமைமிகு கேதுரு மரங்களையும் மூடின.
சங்கீதம் 80 : 11 (ECTA)
அதன் கொடிகள் கடல்வரையும்* அதன் தளிர்கள் பேராறுவரையும்** பரவின. [ மத்திய தரைக் கடல், யூப்பிரத்தீசு.. ]
சங்கீதம் 80 : 12 (ECTA)
பின்னர், நீர் ஏன் அதன் மதில்களைத் தகர்த்துவிட்டீர்? அவ்வழிச் செல்வோர் அனைவரும் அதன் பழத்தைப் பறிக்கின்றனரே!
சங்கீதம் 80 : 13 (ECTA)
காட்டுப் பன்றிகள் அதனை அழிக்கின்றன; வயல்வெளி உயிரினங்கள் அதனை மேய்கின்றன.
சங்கீதம் 80 : 14 (ECTA)
படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்த திராட்சைக் கொடிமீது
பரிவு காட்டும்!
சங்கீதம் 80 : 15 (ECTA)
உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்!
சங்கீதம் 80 : 16 (ECTA)
அவர்கள் அதற்குத் தீ மூட்டினார்கள்; அதை வெட்டித் தள்ளிவிட்டார்கள்; உமது முகத்தின் சினமிகு நோக்கினால், அவர்கள் அழிந்துபோவார்களாக!
சங்கீதம் 80 : 17 (ECTA)
உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக! உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக!
சங்கீதம் 80 : 18 (ECTA)
இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம்.
சங்கீதம் 80 : 19 (ECTA)
படைகளின் கடவுளான ஆண்டவரே! எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்! நாங்கள் விடுதலை பெறுமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்!

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19