சங்கீதம் 79 : 1 (ECTA)
நாட்டின் விடுதலைக்காக மன்றாடல்
(ஆசாபின் புகழ்ப்பா)
கடவுளே, வேற்று நாட்டினர் உமது உரிமைச் சொத்தினுள் புகுந்துள்ளனர்; உமது திருக்கோவிலைத் தீட்டுப்படுத்தியுள்ளனர்; எருசலேமைப் பாழடையச் செய்தனர். [* 2 அர 25:8-10; 2 குறி 36:17-19; எரே 52:12-14.. ]
சங்கீதம் 79 : 2 (ECTA)
உம் ஊழியரின் சடலங்களை வானத்துப் பறவைகளுக்கு உணவாகவும் உம் பற்றுமிகு அடியாரின் உடல்களைக் காட்டு விலங்குகளுக்கு உணவாகவும் அவர்கள் அளித்துள்ளார்கள்;
சங்கீதம் 79 : 3 (ECTA)
அவர்களின் இரத்தத்தைத் தண்ணீரென எருசலேமைச் சுற்றிலும் அள்ளி இறைத்தார்கள்; அவர்களை அடக்கம் செய்ய எவரும் இல்லை.
சங்கீதம் 79 : 4 (ECTA)
எங்களை அடுத்து வாழ்வோரின் பழிச்சொல்லுக்கு இலக்கானோம்; எங்களைச் சூழ்ந்துள்ளோரின் நகைப்புக்கும் ஏளனத்திற்கும்
ஆளாகிவிட்டோம்.
சங்கீதம் 79 : 5 (ECTA)
ஆண்டவரே! இன்னும் எவ்வளவு காலம் நீர் சினம் கொண்டிருப்பீர்? என்றென்றுமா? உமது வெஞ்சினம் நெருப்பாக எரியுமோ?
சங்கீதம் 79 : 6 (ECTA)
உம்மை அறியாத வேற்று நாட்டினர்மீது, உமது பெயரைத் தொழாத அரசர்கள்மீது உம் சினத்தைக் கொட்டியருளும்.
சங்கீதம் 79 : 7 (ECTA)
ஏனெனில், அவர்கள் யாக்கோபை விழுங்கிவிட்டார்கள்; அவரது உறைவிடத்தைப் பாழாக்கி விட்டார்கள்.
சங்கீதம் 79 : 8 (ECTA)
எம் மூதாதையரின் குற்றங்களை எம்மீது சுமத்தாதேயும்! உம் இரக்கம் எமக்கு விரைவில் கிடைப்பதாக! நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டிருக்கின்றோம்.
சங்கீதம் 79 : 9 (ECTA)
எங்கள் மீட்பராகிய கடவுளே! உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு எங்களுக்கு உதவி செய்தருளும்; உமது பெயரை முன்னிட்டு எங்களை விடுவித்தருளும்; எங்கள் பாவங்களை மன்னித்தருளும்.
சங்கீதம் 79 : 10 (ECTA)
‛அவர்களின் கடவுள் எங்கே?’ என்று அண்டை நாட்டினர்
ஏன் சொல்லவேண்டும்?
உம்முடைய ஊழியரின் இரத்தத்தைச் சிந்தியதற்காக நீர் அவர்களை, என் கண்ணெதிரே, பழிதீர்த்தருளும்.
சங்கீதம் 79 : 11 (ECTA)
சிறைப்பட்டோரின் பெருமூச்சு உம் திருமுன் வருவதாக! கொலைத் தீர்ப்புப் பெற்றோரை உம் புயவலிமை காப்பதாக.
சங்கீதம் 79 : 12 (ECTA)
ஆண்டவரே, எம் அண்டை நாட்டார் உம்மைப் பழித்துரைத்த இழிச்சொல்லுக்காக, ஏழு மடங்கு தண்டனை அவர்கள் மடியில் விழச்செய்யும்.
சங்கீதம் 79 : 13 (ECTA)
அப்பொழுது உம் மக்களும், உமது மேய்ச்சலின் மந்தையுமான நாங்கள் என்றென்றும் உம்மைப் போற்றிடுவோம்! தலைமுறைதோறும் உமது புகழை எடுத்துரைப்போம்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13