சங்கீதம் 74 : 1 (ECTA)
நாட்டின் விடுதலைக்காக மன்றாடல்
(ஆசாபின் அறப்பாடல்)
கடவுளே! நீர் ஏன் எங்களை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டீர்? உமது மேய்ச்சல் நில ஆடுகள்மேல் உமது சினம் ஏன் புகைந்தெழுகின்றது?
சங்கீதம் 74 : 2 (ECTA)
பண்டைக் காலத்திலேயே நீர் உமக்குச் சொந்தமாக்கிக் கொண்ட சபைக் கூட்டத்தை நினைத்தருளும்; நீர் மீட்டு உமக்கு உரிமையாக்கிக் கொண்ட இனத்தாரை மறந்துவிடாதேயும்; நீர் கோவில் கொண்டிருந்த சீயோன் மலையையும் நினைவுகூர்ந்தருளும்.
சங்கீதம் 74 : 3 (ECTA)
நெடுநாள்களாகப் பாழடைந்து கிடக்கும் பகுதிகளுக்குச் சென்று பார்வையிடுவீராக! எதிரிகள் உமது தூயகத்தில் அனைத்தையும் பாழ்படுத்திவிட்டார்கள்.
சங்கீதம் 74 : 4 (ECTA)
உம்முடைய எதிரிகள் உம் திருத்தலத்தில் வெற்றி முழக்கம் செய்கின்றார்கள்; தங்கள் கொடிகளை வெற்றிக்கு அடையாளமாக நாட்டுகின்றார்கள்.
சங்கீதம் 74 : 5 (ECTA)
அவர்கள் மேற்கு வாயிலில் அமைக்கப்பட்ட மரப்பின்னல் வேலைப்பாடுகளைக் கோடரிகளால் சிதைத்தார்கள்.
சங்கீதம் 74 : 6 (ECTA)
மேலும் அங்கிருந்த மர வேலைப்பாடுகள் அனைத்தையும் சிற்றுளியும் சுத்தியலும் கொண்டு தகர்த்தெறிந்தார்கள்;
சங்கீதம் 74 : 7 (ECTA)
அவர்கள் உமது தூயகத்திற்குத் தீ வைத்தார்கள்; தரைமட்டமாக்கினார்கள். அவர்கள் உமது பெயருக்குரிய உறைவிடத்தைத் தீட்டுப்படுத்தினார்கள்.
சங்கீதம் 74 : 8 (ECTA)
“அவர்களை அடியோடு அழித்து விடுவோம்” என்று தங்கள் உள்ளங்களில் சொல்லிக் கொண்டார்கள்; கடவுளின் சபையார் கூடும் இடங்களையெல்லாம் நாடெங்கும் எரித்தழித்தார்கள்.
சங்கீதம் 74 : 9 (ECTA)
எங்களுக்கு நீர் செய்து வந்த அருஞ்செயல்களை இப்போது நாங்கள் காண்பதில்லை; இறைவாக்கினரும் இல்லை; எவ்வளவு காலம் இந்நிலை நீடிக்குமென்று அறியக் கூடியவரும் எங்களிடையே இல்லை.
சங்கீதம் 74 : 10 (ECTA)
கடவுளே! எவ்வளவு காலம் பகைவர் இகழ்ந்துரைப்பர்? எதிரிகள் உமது பெயரை எப்போதுமா பழித்துக் கொண்டிருப்பார்கள்?
சங்கீதம் 74 : 11 (ECTA)
உமது கையை ஏன் மடக்கிக் கொள்கின்றீர்? உமது வலக்கையை ஏன் உமது மடியில் வைத்துள்ளீர்? அதை நீட்டி அவர்களை அழித்துவிடும்.
சங்கீதம் 74 : 12 (ECTA)
கடவுளே! முற்காலத்திலிருந்தே நீர் எங்கள் அரசர்; நீரே உலகெங்கும் மீட்புச் செயலைச் செய்து வருகின்றீர்.
சங்கீதம் 74 : 13 (ECTA)
நீர் உமது வல்லமையால் கடலைப் பிளந்தீர்; நீரில் வாழும் கொடும் பாம்புகளின் தலைகளை நசுக்கிவிட்டீர். [* விப 14: 21 ]
சங்கீதம் 74 : 14 (ECTA)
லிவியத்தானின் தலைகளை நசுக்கியவர் நீரே; அதைக் காட்டு விலங்குகளுக்கு இரையாகக் கொடுத்தவர் நீரே; [* யோபு 41:1; திபா 104:26; எசா 27:1.. ]
சங்கீதம் 74 : 15 (ECTA)
ஊற்றுகளையும் ஓடைகளையும் பாய்ந்து வரச்செய்தவர் நீரே; என்றுமே வற்றாத ஆறுகளைக் காய்ந்துபோகச் செய்தவரும் நீரே.
சங்கீதம் 74 : 16 (ECTA)
பகலும் உமதே; இரவும் உமதே; கதிரவனையும் நிலவையும் தோற்றுவித்தவர் நீரே.
சங்கீதம் 74 : 17 (ECTA)
பூவுலகின் எல்லைகளையெல்லாம் வரையறை செய்தீர்; கோடைக் காலத்தையும் மாரிக் காலத்தையும் ஏற்படுத்தினீர்.
சங்கீதம் 74 : 18 (ECTA)
ஆண்டவரே, எதிரி உம்மை இகழ்வதையும் மதிகெட்ட மக்கள் உமது பெயரைப் பழிப்பதையும் நினைத்துப்பாரும்!
சங்கீதம் 74 : 19 (ECTA)
உமக்குச் சொந்தமான புறாவின் உயிரைப் பொல்லாத விலங்கிடம் ஒப்புவித்து விடாதேயும்! சிறுமைப்படுகிற உம் மக்களின் உயிரை ஒரேயடியாக மறந்து விடாதேயும்!
சங்கீதம் 74 : 20 (ECTA)
உமது உடன்படிக்கையை நினைத்தருளும்! நாட்டின் இருளான இடங்களில் கொடுமை நடக்கும் குடியிருப்புகள் நிறைந்திருக்கின்றன.
சங்கீதம் 74 : 21 (ECTA)
சிறுமையுற்றோர் மீண்டும் வெட்கமுறாதபடி செய்யும்; எளியோரும் வறியோரும் உமது பெயரைப் புகழ்வராக!
சங்கீதம் 74 : 22 (ECTA)
கடவுளே! எழுந்துவாரும்; உமக்காக நீரே வழக்காடும்; மதிகேடரால் நாடோறும் உமக்கு வரும் இகழ்ச்சியை நினைத்துப்பாரும்.
சங்கீதம் 74 : 23 (ECTA)
உம்முடைய பகைவர் செய்யும் முழக்கத்தை மறவாதேயும்; உம் எதிரிகள் இடைவிடாது எழுப்பும் அமளியைக் கேளும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23