சங்கீதம் 69 : 1 (ECTA)
உதவிக்காக வேண்டல்
(பாடகர் தலைவர்க்கு: ‘லீலிமலர்’ என்ற மெட்டு; தாவீதுக்கு உரியது)
கடவுளே! என்னைக் காப்பாற்றும்; வெள்ளம் கழுத்தளவு வந்துவிட்டது.
சங்கீதம் 69 : 2 (ECTA)
ஆழமிகு நீர்த்திரளுள் அமிழ்ந்திருக்கின்றேன்; நிற்க இடமில்லை; நிலைக்கொள்ளாத நீருக்குள் ஆழ்ந்திருக்கின்றேன்; வெள்ளம் என்மீது புரண்டோடுகின்றது.
சங்கீதம் 69 : 3 (ECTA)
கத்திக் கத்திக் களைத்துப்போனேன்; தொண்டையும் வறண்டுபோயிற்று; என் கடவுளாம் உமக்காகக் காத்திருந்து என் கண்கள் பூத்துப்போயின;
சங்கீதம் 69 : 4 (ECTA)
காரணமில்லாமல் என்னை வெறுப்போர் என் தலைமுடியைவிட மிகுதியாய் இருக்கின்றனர்; பொய்க்குற்றம் சாட்டி என்னைத் தாக்குவோர் பெருகிவிட்டனர். நான் திருடாததை எப்படித் திருப்பித் தரமுடியும்? [* திபா 35:19; யோவா 15: 25 ]
சங்கீதம் 69 : 5 (ECTA)
கடவுளே! என் மதிகேடு உமக்குத் தெரியும்; என் குற்றங்கள் உமக்கு மறைவானவை அல்ல.
சங்கீதம் 69 : 6 (ECTA)
ஆண்டவரே! படைகளின் தலைவரே! உமக்காகக் காத்திருப்போர் என்னால் வெட்கமுறாதபடி செய்யும்; இஸ்ரயேலின் கடவுளே! உம்மை நாடித் தேடுகிறவர்கள் என்பொருட்டு
மானக்கேடு அடையாதபடி செய்யும்.
சங்கீதம் 69 : 7 (ECTA)
ஏனெனில், உம் பொருட்டே நான் இழிவை ஏற்றேன்; வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது.
சங்கீதம் 69 : 8 (ECTA)
என் சகோதரருக்கு வேற்று மனிதனானேன்; என் தாயின் பிள்ளைகளுக்கு அயலான் ஆனேன்.
சங்கீதம் 69 : 9 (ECTA)
உமது இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்துவிட்டது; உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச்சொற்கள் என்மீது விழுந்தன. [* யோவா 2:17; உரோ 15: 3 ]
சங்கீதம் 69 : 10 (ECTA)
நோன்பிருந்து நான் நெக்குருகி அழுதேன்; அதுவே எனக்கு இழிவாய் மாறிற்று.
சங்கீதம் 69 : 11 (ECTA)
சாக்குத் துணியை என் உடையாகக் கொண்டேன்; ஆயினும், அவர்களது பழிச்சொல்லுக்கு உள்ளானேன்.
சங்கீதம் 69 : 12 (ECTA)
நகர வாயிலில் அமர்வோர் என்னைப் பற்றிப் புறணி பேசுகின்றனர்; குடிகாரர் என்னைப்பற்றிப் பாட்டுக் கட்டுகின்றனர்.
சங்கீதம் 69 : 13 (ECTA)
ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்; கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில்மொழி தாரும்; துணை செய்வதில் நீர் மாறாதவர்.
சங்கீதம் 69 : 14 (ECTA)
சேற்றில் நான் அமிழ்வதிலிருந்து என்னைக் காத்தருளும்; என்னை வெறுப்போரிடமிருந்தும் ஆழ்கடலிலிருந்தும் என்னை விடுவித்தருளும்.
சங்கீதம் 69 : 15 (ECTA)
பெருவெள்ளம் என்னை அடித்துக்கொண்டு போகாதிருப்பதாக! ஆழ்கடல் என்னை விழுங்காதிருப்பதாக! படுகுழி தன்வாய் திறந்து என்னை மூடிக் கொள்ளாதிருப்பதாக!
சங்கீதம் 69 : 16 (ECTA)
ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்; உம் பேரன்பு நன்மை மிக்கது; உமது பேரிரக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும்.
சங்கீதம் 69 : 17 (ECTA)
உமது முகத்தை அடியேனுக்கு மறைக்காதேயும்; நான் நெருக்கடியான நிலையிலிருக்கிறேன்; என் மன்றாட்டுக்கு விரைவில் பதில்மொழி தாரும்.
சங்கீதம் 69 : 18 (ECTA)
என்னை நெருங்கி, என்னை விடுவித்தருளும்; என் எதிரிகளிடமிருந்து என்னை மீட்டருளும்.
சங்கீதம் 69 : 19 (ECTA)
என் இழிவும், வெட்கக்கேடும், மானக்கேடும் உமக்குத் தெரியும்; என் பகைவர் அனைவரும் உம் முன்னிலையில் இருக்கின்றனர்.
சங்கீதம் 69 : 20 (ECTA)
பழிச்சொல் என் இதயத்தைப் பிளந்து விட்டது; நான் மிகவும் வருந்துகிறேன்; ஆறுதல் அளிப்பாருக்காகக் காத்திருந்தேன்; யாரும் வரவில்லை; தேற்றிடுவோருக்காகக் தேடிநின்றேன்; யாரையும் காணவில்லை.
சங்கீதம் 69 : 21 (ECTA)
அவர்கள் என் உணவில் நஞ்சைக் கலந்து கொடுத்தார்கள்; என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள். [* மத் 27:48; மாற் 15:36; லூக் 23:36; யோவா 19:28- 29 ]
சங்கீதம் 69 : 22 (ECTA)
அவர்களுடைய விருந்துகளே அவர்களுக்குக் கண்ணியாகட்டும்! அவர்களுடைய படையல் விருந்துகளே அவர்களுக்குப் பொறியாகட்டும்! [* உரோ 11:9- 10 ]
சங்கீதம் 69 : 23 (ECTA)
அவர்களின் கண்கள் காணாதவாறு ஒளியிழக்கட்டும்! அவர்களின் இடைகள் இடையறாது தள்ளாடட்டும்! [* உரோ 11:9- 10 ]
சங்கீதம் 69 : 24 (ECTA)
உமது கடுஞ்சினத்தை அவர்கள்மேல் கொட்டியருளும்; உமது சினத்தீ அவர்களை மடக்கிப் பிடிப்பதாக!
சங்கீதம் 69 : 25 (ECTA)
அவர்களின் பாசறை பாழாவதாக! அவர்களின் கூடாரங்களில் ஒருவனும் குடிபுகாதிருப்பானாக! [* திப 1: 20 ]
சங்கீதம் 69 : 26 (ECTA)
நீர் அடித்தவர்களை அவர்கள் இன்னும் கொடுமைப்படுத்துகின்றார்கள்; நீர் காயப்படுத்தினவர்களின் நோவைப் பற்றித் தூற்றித் திரிகின்றார்கள்.
சங்கீதம் 69 : 27 (ECTA)
அவர்கள்மீது குற்றத்தின்மேல் குற்றம் சுமத்தும்! உமது நீதித் தீர்ப்பினின்று அவர்களைத் தப்ப விடாதேயும்!
சங்கீதம் 69 : 28 (ECTA)
மெய்வாழ்வுக்குரியோரின் அட்டவணையிலிருந்து அவர்களுடைய பெயர்களை நீக்கிவிடும்! அவற்றை நேர்மையாளரின் பெயர்களோடு சேர்க்காதேயும்! [* விப 32:32; திவெ 3:5; 13:8; 17:8.. ]
சங்கீதம் 69 : 29 (ECTA)
எளியேன் சிறுமைப்பட்டவன்; காயமுற்றவன்; கடவுளே! நீர் அருளும் மீட்பு எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக!
சங்கீதம் 69 : 30 (ECTA)
கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்; அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன்;
சங்கீதம் 69 : 31 (ECTA)
காளையை விட இதுவே ஆண்டவருக்கு உகந்தது; கொம்பும் விரிகுளம்பும் உள்ள எருதைவிட இதுவே அவருக்கு உகந்தது.
சங்கீதம் 69 : 32 (ECTA)
எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக.
சங்கீதம் 69 : 33 (ECTA)
ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை.
சங்கீதம் 69 : 34 (ECTA)
வானமும் வையமும் கடல்களும் அவற்றில் வாழும் யாவும் அவரைப் புகழட்டும்.
சங்கீதம் 69 : 35 (ECTA)
கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார்; யூதாவின் நகரங்களைக் கட்டி எழுப்புவார்; அப்பொழுது அவர்களுடைய மக்கள் அங்கே குடியிருப்பார்கள்; நாட்டைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்வார்கள்.
சங்கீதம் 69 : 36 (ECTA)
ஆண்டவருடைய அடியாரின் மரபினர் அதைத் தம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்; அவரது பெயர்மீது அன்பு கூர்வோர் அதில் குடியிருப்பர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36