சங்கீதம் 66 : 1 (ECTA)
நன்றிப் புகழ்ப்பா
(பாடகர் தலைவர்க்கு: புகழ்ப்பாடல்)
அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!
சங்கீதம் 66 : 2 (ECTA)
அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்; அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள்.
சங்கீதம் 66 : 3 (ECTA)
கடவுளை நோக்கி ‘உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை; உமது மாபெரும் ஆற்றலின் காரணமாக உம் எதிரிகள் உமது முன்னலையில் கூனிக் குறுகுவர்;
சங்கீதம் 66 : 4 (ECTA)
அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்; அவர்கள் உம் புகழ் பாடிடுவர்; உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்’ என்று சொல்லுங்கள். (சேலா)
சங்கீதம் 66 : 5 (ECTA)
வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுவதற்கு உரியவை.
சங்கீதம் 66 : 6 (ECTA)
கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்; ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். அங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம். [* விப 14:21; யோசு 3:14-17.. ]
சங்கீதம் 66 : 7 (ECTA)
அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! அவர்தம் கண்கள் வேற்றினத்தாரைக் கவனித்து வருகின்றன; கலகம் செய்வோர் அவருக்கு எதிராய்த் தலைதூக்காதிருப்பராக! (சேலா)
சங்கீதம் 66 : 8 (ECTA)
மக்களினங்களே! நம் கடவுளைப் போற்றுங்கள்; அவரைப் புகழ்ந்துபாடும் ஒலி கேட்கச் செய்யுங்கள்.
சங்கீதம் 66 : 9 (ECTA)
நம்மை உயிர்வாழச் செய்தவர் அவரே; அவர் நம் கால்களை இடற விடவில்லை.
சங்கீதம் 66 : 10 (ECTA)
கடவுளே! எங்களை ஆய்ந்து, வெள்ளியைப் புடமிடுவதுபோல் புடமிட்டீர்;
சங்கீதம் 66 : 11 (ECTA)
கண்ணியில் எங்களை விழும்படி செய்தீர்; பளுவான சுமைகளை எங்கள் முதுகின் மீது சுமத்தினீர்.
சங்கீதம் 66 : 12 (ECTA)
மனிதரை எங்கள் தலைகள்மீது நடந்துபோகச் செய்தீர்; நெருப்பிலும் தண்ணீரிலும் அகப்பட்டிருந்தோம்; ஆயினும், நீர் எங்களைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தீர்.
சங்கீதம் 66 : 13 (ECTA)
எரிபலியுடன் உமது இல்லத்தினுள் செல்வேன்; என் பொருத்தனைகளை உமக்குச் செலுத்துவேன்.
சங்கீதம் 66 : 14 (ECTA)
அவற்றை என் துன்ப வேளையில் என் நா உரைத்தது; என் வாய் உறுதி செய்தது.
சங்கீதம் 66 : 15 (ECTA)
கொழுத்த கன்றுகளை, செம்மறிக்கிடாய்களின் நறும்புகையோடு, உமக்கு எரிபலியாகச் செலுத்துவேன்; காளைகளையும் வெள்ளாட்டுக் கிடாய்களையும் உமக்குப் பலியிடுவேன். (சேலா)
சங்கீதம் 66 : 16 (ECTA)
கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன்.
சங்கீதம் 66 : 17 (ECTA)
அவரிடம் மன்றாட என் வாய்திறந்தது; அவரை ஏத்திப் புகழ என் நா எழுந்தது.
சங்கீதம் 66 : 18 (ECTA)
என் உள்ளத்தில் தீய எண்ணங்களை வளர்த்திருந்தேனாகில், என் தலைவர் எனக்குச் செவிசாய்த்திருக்கமாட்டார்.
சங்கீதம் 66 : 19 (ECTA)
ஆனால், உண்மையில் கடவுள் எனக்குச் செவிகொடுத்தார்; என் விண்ணப்பக் குரலை உற்றுக் கேட்டார்.
சங்கீதம் 66 : 20 (ECTA)
என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள் போற்றி! தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி!

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20