சங்கீதம் 64 : 1 (ECTA)
பாதுகாப்புக்காக வேண்டல்
(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)
கடவுளே! என் விண்ணப்பக் குரலைக் கேட்டருளும்; என் எதிரியினால் விளையும் அச்சத்தினின்று என் உயிரைக் காத்தருளும்.
சங்கீதம் 64 : 2 (ECTA)
பொல்லாரின் சூழ்ச்சியினின்றும் தீயோரின் திட்டத்தினின்றும் என்னை மறைத்துக் காத்திடும்.
சங்கீதம் 64 : 3 (ECTA)
அவர்கள் தங்கள் நாவை வாளைப் போலக் கூர்மையாக்குகின்றார்கள்; நஞ்சுள்ள சொற்களை அம்புபோல் எய்கின்றார்கள்;
சங்கீதம் 64 : 4 (ECTA)
மறைவிடங்களில் இருந்துகொண்டு மாசற்றோரைக் காயப்படுத்துகின்றார்கள்; அச்சமின்றி அவர்களைத் திடீரெனத் தாக்குகின்றார்கள்;
சங்கீதம் 64 : 5 (ECTA)
தீங்கு இழைப்பதில் உறுதியாய் இருக்கின்றார்கள்; ‛நம்மை யார் பார்க்க முடியும்’ என்று சொல்லி மறைவாகக் கண்ணிகளை வைப்பதற்குச் சதித்திட்டம் தீட்டுகின்றார்கள்;
சங்கீதம் 64 : 6 (ECTA)
நேர்மையற்ற செயல்களைச் செய்யத் திட்டமிடுகின்றார்கள்; ‛எங்கள் திறமையில் தந்திரமான சூழ்ச்சியை உருவாக்கியுள்ளோம்’ என்கின்றார்கள்; மனிதரின் உள்ளமும் உள்நோக்கமும் மிக ஆழமானவை.
சங்கீதம் 64 : 7 (ECTA)
ஆனால், கடவுள் அவர்கள்மேல் அம்புகளை எய்ய, அவர்கள் உடனே காயமுற்று வீழ்வார்கள்.
சங்கீதம் 64 : 8 (ECTA)
தங்களது நாவினாலேயே அவர்கள் அழிவார்கள்; அவர்களைப் பார்ப்போர் அனைவரும் எள்ளி நகைப்பார்கள்.
சங்கீதம் 64 : 9 (ECTA)
அப்பொழுது எல்லா மனிதரும் அச்சம் கொள்வர்; கடவுளின் செயல்களை எடுத்துரைப்பர்; அவரது அருஞ்செயலைப்பற்றிச் சிந்திப்பர்.
சங்கீதம் 64 : 10 (ECTA)
நேர்மையாளர் ஆண்டவரில் அகமகிழ்வர்; அவரிடம் அடைக்கலம் புகுவர்; நேரிய உள்ளத்தோர் அவரைப் போற்றிடுவர்.

1 2 3 4 5 6 7 8 9 10