சங்கீதம் 59 : 1 (ECTA)
பாதுகாப்புக்காக மன்றாடல்
(பாடகர் தலைவர்க்கு: ‘அழிக்காதே’ என்ற மெட்டு; தாவீதின் வீட்டருகே காத்திருந்து அவரைக் கொல்வதற்கென்று சவுல் ஆள்களை அனுப்பியபோது தாவீது பாடிய கழுவாய்ப் பாடல்)
என் கடவுளே! என் எதிரிகளினின்று என்னை விடுவித்தருளும்; என்னை எதிர்த்து எழுவோரிடமிருந்து எனக்குப் பாதுகாப்பளித்தருளும்.
சங்கீதம் 59 : 2 (ECTA)
தீமை செய்வோரிடமிருந்து எனக்கு விடுதலை அளித்தருளும்; கொலைவெறியரிடமிருந்து என்னைக் காத்தருளும்.
சங்கீதம் 59 : 3 (ECTA)
ஏனெனில், அவர்கள் என்னைக் கொல்வதற்காகப் பதுங்கியுள்ளனர்; கொடியவர் என்னைத் தாக்கத் திட்டமிட்டுள்ளனர்; நானோ, ஆண்டவரே! குற்றம் ஏதும் இழைக்கவில்லை; பாவம் ஏதும் செய்யவில்லை;
சங்கீதம் 59 : 4 (ECTA)
என்னிடம் குற்றமில்லாதிருந்தும், அவர்கள் ஓடிவந்து என்னைத் தாக்க முனைகின்றனர்; என்னை எதிர்கொள்ளுமாறு எழுந்தருளும்; என்னைக் கண்ணோக்கும்,
சங்கீதம் 59 : 5 (ECTA)
படைகளின் கடவுளாகிய ஆண்டவரே! நீர் இஸ்ரயேலின் கடவுள்! பிற இனத்தார் அனைவரையும் தண்டிக்க எழுந்துவாரும்; தீங்கிழைக்கும் அந்தத் துரோகிகளுள் எவருக்கும் இரக்கம் காட்டாதேயும். (சேலா)
சங்கீதம் 59 : 6 (ECTA)
அவர்கள் மாலைவரை காத்திருந்து, அதன்பின் நாய்களைப் போலக் குரைத்து கொண்டு நகரினுள் சுற்றித் திரிகின்றனர்.
சங்கீதம் 59 : 7 (ECTA)
அவர்கள் வாய் பேசுவதைக் கவனியும்;
அவர்களின் நாவின் சொற்கள்
வாள் போன்றவை; ‛நாங்கள் பேசுவதை கேட்கிறவர் யார்?’ என்கின்றார்கள்.
சங்கீதம் 59 : 8 (ECTA)
ஆனால், ஆண்டவரே, நீர் அவர்களைப் பார்த்து எள்ளி நகைக்கின்றீர்; பிற இனத்தார் எல்லாரையும் பார்த்து நீர் ஏளனம் செய்கின்றீர்;
சங்கீதம் 59 : 9 (ECTA)
நீரே என் ஆற்றல்! உமது உதவியை எதிர்பார்க்கின்றேன்; ஏனெனில், கடவுளே! நீரே என் அரண்.
சங்கீதம் 59 : 10 (ECTA)
என் கடவுள் தமது பேரன்பால் என்னை எதிர்கொள்ள வருவார்; கடவுள் என் எதிரிகளின் வீழ்ச்சியை நான் கண்ணாரக் காணும்படி செய்வார்.
சங்கீதம் 59 : 11 (ECTA)
அவர்களை ஒரேயடியாய்க் கொன்று விடாதேயும்; இல்லையேல், உம் வல்லமையை என் மக்கள் மறந்துவிடுவர்; என் தலைவரே! எங்கள் கேடயமே! அவர்களை உமது வலிமையால் நிலைகுலையச் செய்யும். [* 59 தலைப்பு: 1 சாமு .. ]
சங்கீதம் 59 : 12 (ECTA)
அவர்களின் வாய் பேசுவதும் நா உரைப்பதும் பாவமே; அவர்கள் தற்பெருமை அவர்களைச் சிக்கவைப்பதாக! அவர்கள் சபிக்கின்றனர்; அடுக்கடுக்காய்ப் பொய் பேசுகின்றனர்.
சங்கீதம் 59 : 13 (ECTA)
ஆகவே, வெகுண்டெழுந்து அவர்களை அழித்துவிடும்; இனி இராதபடி அவர்களை ஒழித்துவிடும்; அப்பொழுது, கடவுள் யாக்கோபின் மரபினரை ஆள்கின்றார் எனவும் அவரது அரசு உலகின் எல்லைவரைக்கும் உள்ளது எனவும் அவர்கள் உணர்ந்து கொள்வார்கள். (சேலா)
சங்கீதம் 59 : 14 (ECTA)
அவர்கள் மாலைவரை காத்திருந்து, அதன்பின், நாய்களைப்போல குரைத்துக் கொண்டு நகரினுள் சுற்றித்திரிகின்றார்கள்.
சங்கீதம் 59 : 15 (ECTA)
அவர்கள் இரைதேடி அலைகின்றனர்; வயிறு நிறையாவிடில், முறுமுறுக்கின்றனர்.
சங்கீதம் 59 : 16 (ECTA)
நானோ உமது ஆற்றலைப் புகழ்ந்து பாடுவேன்; காலையில் உமது பேரன்பைப் பற்றி ஆர்ப்பரித்துப் பாடுவேன்; ஏனெனில், நெருக்கடியான வேளையில் நீர் எனக்கு அரணும் அடைக்கலமுமாய் இருந்தீர்.
சங்கீதம் 59 : 17 (ECTA)
என் ஆற்றல் நீரே! உம்மைப் போற்றிப் பாடுவேன்; ஏனெனில், கடவுள் எனக்கு அரண்; கடவுளே எனக்குப் பேரன்பு!

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17