சங்கீதம் 42 : 1 (ECTA)
இரண்டாம் பகுதி (42-72)நாடு கடத்தப்பட்டோர் மன்றாட்டு
(பாடகர் தலைவர்க்கு: கோராகியரின் அறப்பாடல்) கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல் கடவுளே! என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது.
சங்கீதம் 42 : 2 (ECTA)
என் நெஞ்சம் கடவுள்மீது, உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது; எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப்போகின்றேன்?
சங்கீதம் 42 : 3 (ECTA)
இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று; ‛உன் கடவுள் எங்கே?’ என்று என்னிடம் தீயோர் கேட்கின்றனர். [ …* ‘அவன் கேட்கிறான்’ என்பது எபிரேய பாடம்.. ]
சங்கீதம் 42 : 4 (ECTA)
மக்கள் கூட்டத்தோடு சேர்ந்து பவனியாகக் கடவுளின் இல்லத்திற்குச் சென்றேனே! ஆர்ப்பரிப்பும் நன்றிப்பாடல்களும் முழங்க விழாக்கூட்டத்தில் நடந்தேனே! இவற்றையெல்லாம் நான் நினைக்கும்போது, என் உள்ளம் வெகுவாய் வெதும்புகின்றது.
சங்கீதம் 42 : 5 (ECTA)
என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்? நீ கலக்கமுறுவது ஏன்?
கடவுளையே நம்பியிரு; என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு இன்னும் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்.
சங்கீதம் 42 : 6 (ECTA)
என் நெஞ்சம் மிகவும் தளர்ந்துள்ளது; ஆகவே யோர்தான் நிலப்பகுதியிலும், எர்மோன், மீசார் மலைப்பகுதிகளிலும் உம்மை நான் நினைத்துக் கொண்டேன்.
சங்கீதம் 42 : 7 (ECTA)
உம் அருவிகள் இடியென முழங்கிட ஆழ்கடல் ஆழ்கடலை அழைக்கின்றது; உம் சிற்றலைகளும் பேரலைகளும் என்மீது புரண்டோடுகின்றன.
சங்கீதம் 42 : 8 (ECTA)
நாள்தோறும் ஆண்டவர் தமது பேரன்பைப் பொழிகின்றார்; இரவுதோறும் நான் அவரைப் பாடுவேன்; எனக்கு வாழ்வளிக்கும் இறைவனை நோக்கி மன்றாடுவேன்.
சங்கீதம் 42 : 9 (ECTA)
என் கற்பாறையாகிய இறைவனிடம் ‛ஏன் என்னை மறந்தீர்; எதிரியால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துயருடன் நடமாட வேண்டும்’ என்கின்றேன்.
சங்கீதம் 42 : 10 (ECTA)
‛உன் கடவுள் எங்கே?’ என்று என் பகைவர் நாள்தோறும் என்னைக் கேட்பது, என் எலும்புகளை ஊடுருவும் வாள்போல என்னைத் தாக்குகின்றது.
சங்கீதம் 42 : 11 (ECTA)
என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்? நீ கலக்கமுறுவது ஏன்? கடவுளையே நம்பியிரு. என் மீட்பராம் கடவுளை இன்னும் நான் போற்றுவேன்.
என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு இன்னும் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11