சங்கீதம் 41 : 1 (ECTA)
நோயுற்றவரின் மன்றாட்டு
(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)
எளியோரின் நலனில் அக்கறை கொள்பவர் பேறுபெற்றவர்; துன்ப நாளில் ஆண்டவர் அவரை விடுவிப்பார்.
சங்கீதம் 41 : 2 (ECTA)
ஆண்டவர் அவரைப் பாதுகாப்பார்; நெடுங்காலம் வாழவைப்பார்; நாட்டில் பேறுபெற்றவராய் விளங்கச் செய்வார்; எதிரிகளின் விருப்பத்திற்கு அவரைக் கையளிக்க மாட்டார்.
சங்கீதம் 41 : 3 (ECTA)
படுக்கையில் அவர் நோயுற்றுக் கிடக்கையில் ஆண்டவர் அவருக்குத் துணை செய்வார்; நோய் நீங்கிப் படுக்கையினின்று அவர் எழும்பும்படிச் செய்வார்.
சங்கீதம் 41 : 4 (ECTA)
‛ஆண்டவரே, எனக்கு இரங்கும்; என்னைக் குணப்படுத்தும்; உமக்கு எதிராகப் பாவம் செய்தேன்’ என்று மன்றாடினேன்.
சங்கீதம் 41 : 5 (ECTA)
என் எதிரிகள் என்னைப்பற்றித் தீயது பேசி, ‛அவன் எப்போது சாவான்? அவன் பெயர் எப்போது ஒழியும்?’ என்கின்றனர்.
சங்கீதம் 41 : 6 (ECTA)
ஒருவன் என்னைப் பார்க்க வந்தால், நயவஞ்சகமாகப் பேசுகின்றான்; என்னைப் பற்றிய தவறான செய்திகளைச் சேகரித்துக்கொண்டு, வெளியே போய் அவற்றைப் பரப்புகின்றான்.
சங்கீதம் 41 : 7 (ECTA)
என்னை வெறுப்போர் அனைவரும் ஒன்றுகூடி எனக்கு எதிராய்க் காதோடு காதாய்ப் பேசுகின்றனர். எனக்குத் தீங்கிழைக்கத் திட்டமிடுகின்றனர்.
சங்கீதம் 41 : 8 (ECTA)
‛தீயது ஒன்று அவனை உறுதியாய்ப் பற்றிக்கொண்டது; படுக்கையில் கிடக்கின்ற அவன் இனி எழவே மாட்டான்’ என்று சொல்கின்றனர்.
சங்கீதம் 41 : 9 (ECTA)
என் உற்ற நண்பன், நான் பெரிதும் நம்பினவன், என் உணவை உண்டவன், எனக்கு இரண்டகமாகத் தம் குதிகாலைத் தூக்குகின்றான். [* மத் 26:23; மாற் 14:18; லூக் 22:21; யோவா 13: 18 ]
சங்கீதம் 41 : 10 (ECTA)
ஆண்டவரே! என் மீது இரங்கி, நான் அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும்படி தூக்கிவிடும்.
சங்கீதம் 41 : 11 (ECTA)
என் எதிரி என்னை வென்று ஆர்ப்பரிக்கப் போவதில்லை; இதனால், நீர் என்னில் மகிழ்வுறுகின்றீர் என்பதை அறிந்து கொள்கின்றேன்.
சங்கீதம் 41 : 12 (ECTA)
நானோ நேர்மையில் உறுதியாய் இருக்கின்றேன்; நீர் எனக்கு ஆதரவளிக்கின்றீர்; உமது முன்னிலையில் என்னை என்றும் நிலைநிற்கச் செய்கின்றீர்.
சங்கீதம் 41 : 13 (ECTA)
இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் புகழப் பெறுவாராக! ஊழி ஊழியாய்ப் புகழப் பெறுவாராக! ஆமென்! ஆமென்! [* திபா 106:48.. ]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13