சங்கீதம் 40 : 1 (ECTA)
புகழ்ச்சிப் பாடல்
(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)
நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார்.
சங்கீதம் 40 : 2 (ECTA)
அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக்கொணர்ந்தார்; சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கியெடுத்தார்; கற்பாறையின்மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்; என் காலடிகளை உறுதிப்படுத்தினார்.
சங்கீதம் 40 : 3 (ECTA)
புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார்; பலரும் இதைப் பார்த்து அச்சங்கொண்டு ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்வர்;
சங்கீதம் 40 : 4 (ECTA)
ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவரே பேறு பெற்றவர்; அத்தகையோர் சிலைகளை நோக்காதவர்; பொய்யானவற்றைச் சாராதவர்.
சங்கீதம் 40 : 5 (ECTA)
ஆண்டவரே! எண்ணிறந்தவற்றை நீர் எமக்கெனச் செய்துள்ளீர்; உமக்கு நிகரானவர் எவரும் இலர்; என் கடவுளே! உம் அருஞ்செயல்களும் திட்டங்களும் எங்களுக்காகவே; அவற்றை நான் எடுத்துரைக்க விரும்புவேனாகில் அவை எண்ணிலடங்கா.
சங்கீதம் 40 : 6 (ECTA)
பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர். [* எபி 10:5-7.. ]
சங்கீதம் 40 : 7 (ECTA)
எனவே, ‛இதோ வருகின்றேன்; என்னைக் குறித்துத் திருநூல் சுருளில்
எழுதப்பட்டுள்ளது; [* எபி 10:5-7.
. ]
சங்கீதம் 40 : 8 (ECTA)
என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது’ என்றேன் நான். [* எபி 10:5-7.. ]
சங்கீதம் 40 : 9 (ECTA)
என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக் கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர்.
சங்கீதம் 40 : 10 (ECTA)
உமது நீதியை நான் என் உள்ளத்தின் ஆழத்தில் மறைத்து வைக்கவில்லை; உம் வாக்குப்பிறழாமையைப் பற்றியும் நீர் அருளும் மீட்பைப் பற்றியும் கூறியிருக்கின்றேன்; உம் பேரன்பையும் உண்மையையும் மாபெரும் சபைக்கு நான் ஒளிக்கவில்லை.
சங்கீதம் 40 : 11 (ECTA)
ஆண்டவரே, உமது பேரிரக்கத்தை எனக்குக் காட்ட மறுக்காதேயும்; உமது பேரன்பும் உண்மையும் தொடர்ந்து என்னைப் பாதுகாப்பனவாக!
சங்கீதம் 40 : 12 (ECTA)
உதவிக்காக மன்றாடல்
(திபா 70)
ஏனெனில், எண்ணிறந்த தீமைகள் எனைச் சூழ்ந்து கொண்டன; என் குற்றங்கள் என்மீது கவிந்து என் பார்வையை மறைத்துக்கொண்டன. அவை என் தலைமுடிகளைவிட மிகுதியானவை; என் உள்ளம் தளர்ந்து என்னைக் கைவிட்டது.
சங்கீதம் 40 : 13 (ECTA)
ஆண்டவரே, என்னை விடுவிக்க மனமிசைந்தருளும்; ஆண்டவரே, எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்.
சங்கீதம் 40 : 14 (ECTA)
என் உயிரைப் பறிக்கத் தேடுவோர் அனைவரும் அவமானமும் குழப்பமும் அடையட்டும்! என் கேட்டில் மகிழ்வுறுவோர் தலைகுனிந்து பின்னடையட்டும்!
சங்கீதம் 40 : 15 (ECTA)
என்னைப் பார்த்து ‛ஆ!ஆ!’ என்போர் தாம் அடையும் தோல்வியினால் அதிர்ச்சியுறட்டும்!
சங்கீதம் 40 : 16 (ECTA)
உம்மைத் தேடுவோர் அனைவரும் உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்! நீர் அருளும் மீட்பில் நாட்டங்கொள்வோர், ‛ஆண்டவர் எத்துணைப் பெரியவர்!’ என்று எப்போதும் சொல்லட்டும்!
சங்கீதம் 40 : 17 (ECTA)
நானோ ஏழை; எளியவன்; என் தலைவர் என்மீது அக்கறை கொண்டுள்ளார்; நீரே என் துணைவர், என் மீட்பர்! என் கடவுளே, எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17