சங்கீதம் 4 : 1 (ECTA)
மாலை மன்றாட்டு
(பாடகர் தலைவர்க்கு: நரம்பிசைக் கருவிகளுடன்; தாவீதின் புகழ்ப்பா)
எனக்கு நீதி அருள்கின்ற கடவுளே, நான் மன்றாடும்போது எனக்குப் பதிலளித்தருளும்; நான் நெருக்கடியில் இருந்தபோது, நீர் எனக்குத் துணைபுரிந்தீர்; இப்போதும் எனக்கு இரங்கி, என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும்;
சங்கீதம் 4 : 2 (ECTA)
மானிடரே! எவ்வளவு காலம் எனக்குரிய மாட்சிக்கு இழுக்கைக் கொண்டு வருவீர்கள்? எவ்வளவு காலம் வெறுமையை விரும்பிப் பொய்யானதை நாடிச் செல்வீர்கள்? (சேலா)
சங்கீதம் 4 : 3 (ECTA)
ஆண்டவர் என்னைத் தம் அன்பனாகத் தேர்ந்தெடுத்துள்ளார்; நான் மன்றாடும் போது அவர் எனக்குச் செவி சாய்க்கின்றார்; – இதை அறிந்துகொள்ளுங்கள்.
சங்கீதம் 4 : 4 (ECTA)
சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்; படுக்கையில் உங்கள் உள்ளத்தோடு பேசி அமைதியாயிருங்கள். (சேலா) [* எபே 4:26.. ]
சங்கீதம் 4 : 5 (ECTA)
முறையான பலிகளைச் செலுத்துங்கள்; ஆண்டவரை நம்புங்கள்.
சங்கீதம் 4 : 6 (ECTA)
‛நலமானதை எங்களுக்கு அருள யார் உளர்?’ எனக் கேட்பவர் பலர். ஆண்டவரே, எங்கள்மீது உமது முகத்தின் ஒளி வீசும்படிச் செய்தருளும்.
சங்கீதம் 4 : 7 (ECTA)
தானியமும் திராட்சையும் நன்கு விளையும் காலத்தில் அடையும் மகிழ்ச்சியைவிட மேலான மகிழ்ச்சியை நீர் என் உள்ளத்திற்கு அளித்தீர்.
சங்கீதம் 4 : 8 (ECTA)
இனி, நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்; ஏனெனில், ஆண்டவரே, நான் தனிமையாயிருந்தாலும் நீரே என்னைப் பாதுகாப்புடன்
வாழச் செய்கின்றீர்.

1 2 3 4 5 6 7 8