சங்கீதம் 36 : 1 (ECTA)
மானிடரின் தீய குணம்
(பாடகர் தலைவர்க்கு: ஆண்டவரின் ஊழியரான தாவீதுக்கு உரியது)
பொல்லாரின் உள்ளத்தில் தீமையின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது; அவர்களின் மனக்கண்களில் இறையச்சம் இல்லை. [* உரோ 3: 18 ; *…* ‘என் உள்ளத்தில்’ என்பது எபிரேய பாடம்.. ]
சங்கீதம் 36 : 2 (ECTA)
ஏனெனில் அவர்கள், குற்றம் வெளிப்பட்டு வெறுப்புக்கு உள்ளாகப் போவதில்லை என, இறுமாந்து தமக்குத்தாமே பெருமை பாராட்டிக் கொள்கின்றனர்.
சங்கீதம் 36 : 3 (ECTA)
அவர்கள் வாயின் சொற்கள் தீமையும் வஞ்சகமும் நிறைந்தவை; நல்லுணர்வோடு நற்செயல் ஆற்றுவதை அவர்கள் அடியோடு விட்டுவிட்டனர்.
சங்கீதம் 36 : 4 (ECTA)
படுக்கையில் கிடக்கையில் அவர்கள் சதித்திட்டங்களைத் தீட்டுகின்றனர், தகாத வழியை உறுதியாகப் பற்றிக் கொள்கின்றனர்; தீமையைப் புறம்பே தள்ளுவதில்லை.
சங்கீதம் 36 : 5 (ECTA)
கடவுளின் கருணை ஆண்டவரே! வானளவு உயர்ந்துள்ளது உமது பேரன்பு; முகில்களைத் தொடுகின்றது உமது வாக்குப் பிறழாமை.
சங்கீதம் 36 : 6 (ECTA)
ஆண்டவரே, உமது நீதி இறைவனின் மலைகள்போல் உயர்ந்தது; உம் தீர்ப்புகள் கடல்போல் ஆழமானவை; மனிதரையும் விலங்கையும் காப்பவர் நீரே;
சங்கீதம் 36 : 7 (ECTA)
கடவுளே, உமது பேரன்பு எத்துணை அருமையானது! மானிடர் உம் இறக்கைகளின் நிழலில் புகலிடம் பெறுகின்றனர்.
சங்கீதம் 36 : 8 (ECTA)
உமது இல்லத்தின் செழுமையால் அவர்கள் நிறைவு பெறுகின்றனர்; உமது பேரின்ப நீரோடையில் அவர்கள் தாகத்தைத் தணிக்கின்றீர்.
சங்கீதம் 36 : 9 (ECTA)
ஏனெனில், வாழ்வு தரும் ஊற்று உம்மிடமே உள்ளது;
உமது ஒளியால் யாமும் ஒளி பெறுகின்றோம்.
சங்கீதம் 36 : 10 (ECTA)
உம்மை அறிந்தோர்க்கு உமது பேரன்பையும், நேரிய உள்ளத்தோர்க்கு உமது நீதியையும் தொடர்ந்து வழங்கியருளும்!
சங்கீதம் 36 : 11 (ECTA)
செருக்குற்றோரின் கால் என்னை நசுக்க விடாதேயும்! பொல்லாரின் கை என்னைப் பிடிக்க விடாதேயும்!
சங்கீதம் 36 : 12 (ECTA)
தீங்கிழைப்போர் அதோ அங்கே குப்புற வீழ்ந்து கிடக்கின்றனர், அவர்கள் நசுக்கப்பட்டனர்; அவர்களால் எழவே இயலாது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12