சங்கீதம் 35 : 1 (ECTA)
உதவிக்காக மன்றாடல்
(தாவீதுக்கு உரியது)
ஆண்டவரே, எனக்கெதிராய் வழக்காடுவோருடன் வழக்காடும்; என்மீது போர் தொடுப்போரோடு போர் புரியும்.
சங்கீதம் 35 : 2 (ECTA)
கேடயமும் படைக்கலமும் எடுத்துவாரும்; எனக்குத் துணை செய்ய எழுந்து வாரும்.
சங்கீதம் 35 : 3 (ECTA)
என்னைத் துரத்திவரும் எதிரிகளைத் தடுத்து நிறுத்தும்; ஈட்டியையும் வேலையும் கையிலெடும்; ‛நானே உன் மீட்பர்’ என்று என் உள்ளத்திற்குச் சொல்லும்.
சங்கீதம் 35 : 4 (ECTA)
என் உயிரைக் குடிக்கத் தேடுவோர், மானக்கேடுற்று இழிவடையட்டும்; எனக்குத் தீங்கிழைக்க நினைப்போர், புறமுதுகிட்டு ஓடட்டும்.
சங்கீதம் 35 : 5 (ECTA)
ஆண்டவரின் தூதர் அவர்களை விரட்டியடிக்க, காற்றில் பறக்கும் பதர்போல அவர்கள் சிதறட்டும்.
சங்கீதம் 35 : 6 (ECTA)
ஆண்டவரின் தூதர் அவர்களைத் துரத்திட, அவர்கள் வழி இருளும் சறுக்கலும் ஆகட்டும்.
சங்கீதம் 35 : 7 (ECTA)
ஏனெனில், காரணமின்றி எனக்குக் கண்ணி வைத்தனர்; காரணமின்றி எனக்குக் குழி தோண்டினர்.
சங்கீதம் 35 : 8 (ECTA)
அவர்களுக்கு அழிவு எதிர்பாராமல் வரட்டும்; அவர்களுக்கு வைத்த கண்ணியில் அவர்களே சிக்கிக் கொள்ளட்டும்; அவர்கள் தோண்டிய குழியில்
அவர்களே விழட்டும்.
சங்கீதம் 35 : 9 (ECTA)
என் உள்ளம் ஆண்டவரை முன்னிட்டுக் களிகூரும்; அவர் அளிக்கும் மீட்பில் அகமகிழும்.
சங்கீதம் 35 : 10 (ECTA)
‟ஆண்டவரே, உமக்கு நிகரானவர் யார்? எளியோரை வலியோரின் கையினின்றும் எளியோரையும் வறியோரையும் கொள்ளையடிப்போர் கையினின்றும் விடுவிப்பவர் நீரே” என்று என் எலும்புகள் எல்லாம் சொல்லும்.
சங்கீதம் 35 : 11 (ECTA)
பொய்ச்சான்று சொல்வோர் எனக்கெதிராய் எழுகின்றனர்; எனக்குத் தெரியாதவற்றைப் பற்றி என்னிடம் வினவுகின்றனர்.
சங்கீதம் 35 : 12 (ECTA)
நான் அவர்களுக்கு நன்மையே செய்தேன்; அவர்களோ, அதற்குப் பதிலாக எனக்குத் தீங்கிழைத்தனர். என் நெஞ்சைத் துயரில் ஆழ்த்தினர்.
சங்கீதம் 35 : 13 (ECTA)
நானோ, அவர்கள் நோயுற்றிருந்தபோது, சாக்கு உடுத்திக் கொண்டேன்; நோன்பிருந்து என்னை வருத்திக் கொண்டேன்; முகம் குப்புற வீழ்ந்து மன்றாடினேன்.
சங்கீதம் 35 : 14 (ECTA)
நண்பர்போலும் உடன்பிறந்தோர் போலும் அவர்களுக்காய் மன்றாடினேன்; தாய்க்காகத் துக்கம் கொண்டாடுவோரைப்போல வாட்டமுற்றுத் துயரத்தோடு நடமாடினேன்.
சங்கீதம் 35 : 15 (ECTA)
நான் தடுக்கி விழுந்தபோது அவர்கள் ஒன்றுகூடி மகிழ்ந்தனர்; எனக்கெதிராய் ஒன்று சேர்ந்தனர்; யாதொன்றும் அறியாத என்னைச் சின்னாபின்னமாக்கி ஓயாது பழித்துரைத்தனர்.
சங்கீதம் 35 : 16 (ECTA)
இறைப்பற்று இல்லாரோடு சேர்ந்து அவர்கள் என்னை இகழ்ந்தனர்; எள்ளி நகையாடினர்; என்னைப் பார்த்துப் பற்களை நறநறவென்று கடித்தனர்.
சங்கீதம் 35 : 17 (ECTA)
என் தலைவரே, இன்னும் எத்தனை நாள் இதைப் பார்த்துக் கொண்டிருப்பீர்?; என் உயிரை அவர்களது தாக்குதலினின்றும் என் ஆருயிரைச் சிங்கக் குட்டிகளினின்றும் மீட்டருளும்.
சங்கீதம் 35 : 18 (ECTA)
மாபெரும் சபையில் உமக்கு நன்றி செலுத்துவேன்; திரளான மக்களிடையே உம்மைப் புகழ்வேன்.
சங்கீதம் 35 : 19 (ECTA)
வஞ்சகரான என் எதிரிகள் என்னைப் பார்த்துக் களிக்க இடமளியாதீர்; காரணமின்றி என்னை வெறுப்போர் கண்சாடை காட்டி இகழவிடாதீர். [* திபா 69:4; யோவா 16:25.. ]
சங்கீதம் 35 : 20 (ECTA)
ஏனெனில், அவர்களது பேச்சு சமாதானத்தைப் பற்றியதன்று; நாட்டில் அமைதியை நாடுவோர்க்கு எதிராக அவர்கள் வஞ்சகமாய்ச்
சூழ்ச்சி செய்கின்றனர்.
சங்கீதம் 35 : 21 (ECTA)
எனக்கெதிராக அவர்கள் வாய் திறந்து, ‛ஆ! ஆ! நாங்களே எங்கள் கண்ணால் கண்டோம்’ என்கின்றனர்.
சங்கீதம் 35 : 22 (ECTA)
ஆண்டவரே, நீர் இதைக் கண்டும் மௌனமாய் இராதீர்; என் தலைவரே, என்னைவிட்டுத் தொலையில் போய்விடாதீர்.
சங்கீதம் 35 : 23 (ECTA)
என் கடவுளே, கிளர்ந்தெழும்! என் தலைவரே, விழித்தெழுந்து என் வழக்குக்கு நீதி கிடைக்கச் செய்யும்.
சங்கீதம் 35 : 24 (ECTA)
என் கடவுளாகிய ஆண்டவரே, உமது நீதிக்கேற்ப என் நேர்மையை நிலைநாட்டும்! அவர்கள் என்னைப் பார்த்துக் களிக்க இடமளியாதேயும்!
சங்கீதம் 35 : 25 (ECTA)
அவர்கள் தங்கள் உள்ளத்தில் ‛ஆம், நாம் விரும்பினது இதுவே’ எனச் சொல்லாதபடி பாரும்! ‛அவனை விழுங்கிவிட்டோம்’ எனப் பேசிக்கொள்ளாதபடி பாரும்!
சங்கீதம் 35 : 26 (ECTA)
எனக்கு நேரிட்ட தீங்கைப் பார்த்து மகிழ்ச்சி அடைவோர் எல்லாரும் கலக்கமுறட்டும்! என்னைவிடத் தம்மைச் சிறந்தோராய்க் கருதுவோர்க்கு வெட்கமும் மானக்கேடும் மேலாடை ஆகட்டும்!
சங்கீதம் 35 : 27 (ECTA)
என் நேர்மை நிலைநாட்டப்படுவதை விரும்புவோர் ஆரவாரத்துடன் அக்களிக்கட்டும்; ‛ஆண்டவர் எத்துணைப் பெரியவர்! அவர் தம் அடியாரின் நல்வாழ்வைக் காண விரும்புவார்’ என்று எப்பொழுதும் சொல்லட்டும்.
சங்கீதம் 35 : 28 (ECTA)
அப்பொழுது, என் நா உம் நீதியை எடுத்துரைத்து, நாள் முழுதும் உம் புகழ் பாடும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28